IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஜாதக சிக்கல்களை தீர்த்து வைக்கும் இடைக்காடர் சித்தருக்கு ஜெயந்தி விழா! வருகிற 21, 22ம்தேதிகளில் நடக்கிறது!!

Get real time updates directly on you device, subscribe now.


இன்று நாம் கோயிலில் வழிபடும் நவக்கிரகங்கள் ஏன் ஒருவர் முகம் ஒருவர் பாராமல் இருக்கின்றன என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? ஒரே இடத்தில் ஒன்பது சாமி சிலைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒரு கோள்களின் பெயர்கள் இருக்கின்றன. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் திரும்பி இருக்கிறார்கள்? இப்படி உங்களுக்குள் என்றாவது கேள்வி எழுந்துள்ளதா? இந்த நவக்கிரகங்களின் அமைப்பு குறித்து நீங்கள் ஏற்கனவே யோசித்திருந்தாலும், யோசித்திருக்காவிட்டாலும் தொடர்ந்து வாசியுங்கள்.


அதற்கு முன் இன்று நம்மில் பெரும்பாலானோர் குழந்தை பிறப்பில் தொடங்கி, கல்யாணம், காதுகுத்து, சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்திற்கும் ஜாதகம் பார்க்கிறோம். சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ஏழரைச் சனி, சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறான், நாக்கில் சனி என்பன போன்ற பல ஒப்பனைகளை இந்த ஜாதகத்துடன் தொடர்பு படுத்தி பேசுகிறோம். பிரபலமான ஜோதிடர்களும் பிரச்சினையின் ஆணி வேரைக் கண்டறிய ஜாதகங்களையும், ஜாதகக் கட்டங்களையுமே பார்க்கிறார்கள்.


ஜாதகத்தில் கோளாறு, கட்டம் சரியில்லை, நேரம் சரியில்லை, எல்லாம் விதி, ஏழரைச் சனி வாட்டி எடுக்கிறது என்றெல்லாம் எண்ணி மனம் வருந்துபவகள், அத்தனை பிரச்சினைகளையும், கோளாறுகளையும் சரி செய்ய ஓர் ஆலயம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?


நம்புவோர் நம்பிக்கையுடன் தொடருங்கள்! அந்த ஆலயம் இடைக்காடர் ஆலயம். மதுரைக்கு மிக அருகில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் என்ற சிறிய கிராமத்தில் இயற்கை எழிலோடு அமைந்துள்ளது இடைக்காடர் சித்தர் ஆலயம். மதுரை-இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், முத்தநேந்தல் எனும் கிராமப் பேருந்து நிறுத்தத்திலிருந்து வைகை ஆற்றின் வடகரையில் அரை கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடைக்காட்டூர் கிராமம் உள்ளது.


பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் சித்தர் இந்த இடைக்காட்டூர் கிராமத்தில் வசித்து வந்தார். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பு உண்டு. கட்டுரையின் தொடக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு இந்த ஆலயம்தான் விடை. ஆம்!

ஒரு காலத்தில் வரிசையாக நின்று அருள்பாலித்த நவக்கிரக கடவுள்களை, விண்ணில் கோள்கள் ஒன்றை ஒன்று சந்திக்காமல், பார்க்காமல் சுற்றி வருவதுபோல… நவக்கிரக தெய்வங்களும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்று மாற்றி அமைக்கப்பட்ட இடம் இந்த ஆலயம்தான். அதாவது இன்று உலகமெங்கும் நவக்கிரகங்கள் கட்டத்துக்குள், ஒருவரை ஒருவர் பார்க்காமல் அருள்பாலிப்பதை பார்க்கிறோம். ஆனால் முதன் முதலாக இந்த இடைக்காட்டூர் ஆலயத்தில்தான் நவக்கிரக கட்டம் உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்.


இன்று எடுத்ததெற்கெல்லாம் ஜாதகங்களை பார்க்கிறோம். ஜாதகத்தில் தோஷம், கோளாறு என எத்தனையோ கோயில்களுக்குச் செல்கிறோம். ஜோதிடர்களின் ஆலோசனைப்படி பரிகாரங்களைச் செய்து வருகிறோம். பல பிரச்சினைகளுக்கு பரிகாரங்கள் மூலம் தீர்வைத் தேடுகிறோம். திருமணத்தடை, திருமண வாழ்வில் சிக்கல், குழந்தைப் பேரு இல்லாமை, வேலையில் சிக்கல், சொத்துப் பிரச்சினை, வாகன பிரச்சினை இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஜாதகத்தின் மீதும், ராசி நட்சத்திரங்கள் மீதும் பழிபோடுகிறோம்.


இந்த இடைக்காடர் ஆலயத்துக்கு வந்தால் ஜாதகம் தொடர்பான கோளாறுகள், பிரச்சினைகள், தோஷங்கள் என அனைத்து தீர்க்கும் என்ற ஐதீகம் உள்ளது. புரியும்படி சொல்ல வேண்டுமானால், ஜாதகக் கட்டத்தை உருவாக்கியவர் இடைக்காடர்தான் என்பதால், ஜாதகம் தொடர்பான பிரச்சினைகளை அவர் எளிதில் தீர்த்து வைப்பார்.


இடைக்காடர் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் கலந்து கொண்டு இடைக்காடரில் அருள் பெற்றுச் செல்கிறார்கள்.


அதேப்போல ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத திருவாதிரை அன்று இடைக்காடரின் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஜெயந்தி விழா வருகிற செப்டம்பர் 21ம்தேதி (சனிக்கிழமை) மற்றும் 22ம் தேதிகளில் (ஞாயிற்றுக் கிழமை) இடைக்காட்டூர் எனும் ஞான புண்ணிய பூமியில் நடக்கிறது. இதையொட்டி 21ம்தேதி மாலை 5 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு மேல் ஸ்ரீ இடைக்காடர் சித்தர் திருவீதி உலா நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.


தொடர்ந்து அடுத்த நாள் 22ம்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 8 மணிக்கு சிறப்பு ஹோமங்கள், யாகங்கள் நடைபெறும். காலை 9 மணிக்கு கோ பூஜை, கஜ பூஜை, பரி பூஜை, ரிஷப பூஜை, கிடாய் பூஜை(அஜ கஜ புஜ பூஜைகள்) நடக்கிறது. காலை 11 மணிக்கு மேல் இடைக்காடருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.


இந்த ஜெயந்தி விழா குறித்து விழாக்குழுவினர் கூறுகையில், எமது குருவின் குரு ஐயா ஸ்ரீபோகர் மகரிஷியின் திருப்பாதம் பணிந்து எண்ணிலடங்கா கோடி சித்தர்கள், நவக்கிரக தேவர்கள். நாற்பத்தி எண்ணாயிரம் தேவர்கள், 1008 அண்டத்தில் வாழும் ரிஷிக்கள், முப்பத்து முக்கோடி மகரிஷிகள், தேவர்கள் -தேவியர்கள், சித்தர்கள், முனிவர்கள், கிண்ணர்கள், திம்புரவர், சித்தவித்யாரர், 18 சித்தர்கள், 16 திதி மூர்த்திகள், 6 அதிகார மூர்த்திகள், 26 யோக மூர்த்திகள், 35 காரண மூர்த்திகள், சப்தரிஷிக்கள், மும்மூர்த்திகள், சிரஞ்சீவிகள், 64 புவனங்களில் அருள்புரியும் இறைசக்திகளின் நல்லாசியுடன் விழா நடைபெறுகிறது.


ஜோதி ரூபமாய் இருந்து இறை ஞானத்தைத் தூண்டி அருளும் கணக்கன்பட்டி ஐயா சத்குரு ஸ்ரீ பழனிமூட்டை சுவாமிகள் மற்றும் ஸ்ரீ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஞானக்குழந்தையாம் ஞானகுரு ஸ்ரீலஸ்ரீ ஞானசேகர ஸ்வாமிகள் மற்றும் அரசி அம்மா ஆகியோரின் திருவருளோடு விழா இனிதே நடைபெற உள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள், என்றனர்.


விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இடைக்காட்டூர் கிராம பொதுமக்கள், சித்தர் வழி நன்மக்கள் மற்றும் ஸ்ரீ இடைக்காடர் சித்தர் ஞான புண்ணிய ஷேத்ர ட்ரஸ்ட் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

  • சமுத்ரா செந்தில்
Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader