IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வணிக முத்திரை எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது ?

Get real time updates directly on you device, subscribe now.

வணிக முத்திரை எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது என்பதை காண்போம். இப்பதிவு வேலைகள் அனைத்தையும் வணிக முத்திரை பதிவு முகவர்களே மேற்கொள்வார்கள் என்றாலும்கூட அவை எவ்வாறு மேற்கொள்ளப் படுகின்றன என்பதைப் பற்றியும் அவற்றில் நமது பங்களிப்பு என்ன என்பது பற்றியும் ஓரளவாவது நாம் அறிந்து வைத்திருப்பது சிறப்பாகும்.

  1. வணிக முத்திரையின் வகுப்பை அடையாளம் காணுதல் (Class Identification)
    இதற்கான கால வரையறை : விண்ணப்பிப்பவரின் விருப்பம்

வணிக முத்திரைக்கு பதிவு செய்ய விரும்பும் தரப்பினர் முதலில் எவ்வகையான சின்னம், பெயர், சொல், சொற்றொடர்களைப் பயன்படுத்த உள்ளார் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். (இது முழுமுற்றிலும் நம்முடைய கடமையாகும். வேறு யாரும் நாம் தேர்வு செய்திருக்கும் முத்திரையைக் கொண்டிருக்கவில்லை எனும் பிரக்ஞையுடனேயே இந்நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.) பின்பு, 1 முதல் 45 வரையிலான வணிக முத்திரை வகுப்பில் எப்பிரிவை சேர்ந்தது என்பதை கண்டறிய வேண்டும். நம் பொருள் அல்லது சேவை எவ்வகை வகுப்பில் அடங்குகிறது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருப்பதன்வழி பதிவுக்காகான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எளிமையாக்கிவிட முடியும்.

இவ்வணிக முத்திரை வகுப்பு இரண்டு பிரிவுகளாக [1.]பொருள்கள் (Goods) மற்றும் [2.] சேவைகள் (Services) என அவற்றின் தன்மைகள் அடிப்படையில் பிரிக்கப்படுள்ளன.

[1.] பொருள்கள் (Goods/Products) – பொருட்களை கொண்டு வணிகம் செய்பவர்கள் தங்களது வணிக பொருள் 1வது வகுப்பு முதல் 34 வரையிலான வகுப்பில் ஏதாவது ஒரு வகுப்பின்கீழ் பட்டியலிடப்பட்டிருப்பதைக் காணலாம். உதாரணமாக வாகனங்களை வணிக பொருளாக்குபவர்கள் வகுப்பு 12ல் அடங்குவர்.

[2.] சேவைகள் (Services) – சேவைகளின் அடிப்படையில் வணிகம் செய்பவர்கள் 35வது வகுப்பு முதல் 45வது வகுப்பிற்குள் அடங்குவர். உதாரணமாக காப்புறுதி நிறுவனங்கள் 36வது வகுப்பிலும் tuition நிறுவனங்கள் 41வது வகுப்பிலும் அடங்குவர்.

வணிக முத்திரைக்கு விண்ணப்பிக்கும்போது மேற்கூறிய 45 வகுப்புகளில் எவ்வகுப்பைச் சார்ந்த பொருள் அல்லது சேவைக்கான முத்திரை பதிவுக்கு விண்ணப்பிக்கிறோம் என குறிப்பிடுவது அவசியமாகும். பெரும்பாலும் ஒரு வகுப்பில் பல விதமான பொருள்களின்/சேவையின் வகைகள் குறிப்பிடப்பட்டிருப்பதால் நாம் அவற்றில் நமக்கு பொருத்தமான ஒன்றையே தெரிவு செய்ய வேண்டும்.

உதாரணம்

நுண்கலை பள்ளி எனும் நிறுவனம் தனது முத்திரையை பதிவு செய்கிறது என வைத்துக்கொள்வோம். எவ்வகை பொருள் பண்டமாற்றத்தையும் உட்படுத்தாமல் அறிவுசார்ந்த கலையை போதிக்கும் நடவடிக்கையையே இந்நிறுவனம் மேற்கொள்கிறது என்பது தெளிவு. அவ்வகையில் அதன் முத்திரை பதிவானது சேவைகள் (Services) எனும் பிரிவில் 41வது வகுப்பில் அடங்கிடும். ஆக, முத்திரை பதிவுக்கு விண்ணப்பிக்கும்போது வெறுமனே 41வது வகுப்பு என்று எழுதிவிட முடியாது. காரணம், அவ்வகுப்பில் இதர சில சேவை வகைகளும் அடங்கியுள்ளன. அதனை பின்வருமாறு காணலாம்:

Class 41 – Education; providing of training; entertainment, sporting and cultural activities.
ஆக, நுண்கலை பள்ளியின் சேவை [cultural activities] எனும் வகைக்கே மிகப் பொருத்தமானதாகும். அவ்வகையில் விண்ணப்பதாரர் ;

பிரிவு – Services

வகுப்பு – 41

வகை – cultural activities

எனும் அடிப்படையில் மிகத் தெளிவாக விண்ணப்பத்தை மேற்கொள்ள வேண்டும்.

இதுவரையில் எவ்வாறு வணிக முத்திரையின் வகுப்பை அடையாளம் காண வேண்டும் என்பதை தெளிவாக கண்டோம். தொடர்ந்து நம்முடைய வணிக முத்திரை நமக்கு முன் பிறரால் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதைப்பற்றி காண்போம்.

  1. முத்திரை யாருடனும் பொருந்தாததை உறுதி செய்தல் (Pre-searching)
    இதற்கான கால வரையறை : ஏறக்குறைய 3 நாட்கள்

நம் வணிக முத்திரை எவ்வகையிலும் வேறொரு நிறுவனத்தின் உடையதாக இல்லாதிருத்தலை உறுதி செய்துகொள்வதன்வழி வணிக முத்திரை பதிவுக்கான வேலைகளை சுலபமாக்கிக்கொள்ள முடியும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வணிக முத்திரையை தவறுதலாக நம் பெயரில் புதிதாக பதிவு செய்ய முயற்சிக்கும்போது பதிவு வேலை நடுவில் தடைபடுவதோடு மிகுந்த கால விரயத்தையும் ஏற்படுத்திவிடும்.

பெரும்பாலும் வணிக முத்திரை பதிவுக்கான சேவையை வழங்கும் நிருவனங்கள் மூலமே முத்திரை தொடர்பான தேடுதல்களை மேற்கொள்ளலாம். அதாவது நாம் தேர்ந்தெடுத்திருக்கும் முத்திரை வேறு நிறுவனங்களின்கீழ் பதிவு செய்யப்படுள்ளதா என்பதை சில வலைதளங்களில் தேடுவது என்பது இதன் பொருளாகும்.

அவ்வலைத்தளங்களைப் பயன்படுத்தி தேடுவதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, உள்துறை, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சின் (Kementerian Dalam Negeri, Koperasi dan Kepenggunaan) கீழ் இயங்கும் Perbadanan Harta Intelek Malaysia எனும் அமைப்பின்வழி வணிக முத்திரை பதிவு செய்ய விரும்புபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரிம. 20 கட்டணமாக செலுத்தி முத்திரை தேடும் பணியை மேற்கொள்ளும் வசதியை MyIPO (Intellectual Property Corporation of Malaysia) ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

நாம் தேர்ந்தெடுத்திருக்கும் முத்திரை, பெயர் அல்லது சொற்றொடர் வேறு ஒருவரால் பதிவு செய்து பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நாம் தொடர்ந்து அதனை நம் பெயரில் மீள்பதிவு செய்யாமல் இருப்பதே சிறப்பு. இது பின்னாளில் ஏற்படக்கூடிய சட்ட சிக்கலில் இருந்து நம்மையும் நம் அறிவுசார் பொருளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் செயலாகும்.

  1. விண்ணப்ப பதிவு (Filing Aplication)
    இதற்கான கால வரையறை : ஏறக்குறைய 5 நாட்கள்

*வணிக முத்திரைக்கு விண்ணப்பித்த காலம் தொடங்கி நமது பொருள் அல்லது சேவைக்கு “TM” அல்லது “SM” ஆகிய குறியீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேறு நிறுவனங்கள் முத்திரை பதிவு செய்யவில்லை என்பதை நன்கு உறுதிபடுத்திக் கொண்ட பின்னரே வணிக முத்திரைக்கான விண்ணப்ப பாரத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஒரே வேளையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முத்திரைகளை பதிவு செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களைத் தனித்தனியாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

  1. சான்றிதழ் / சாட்சியப்பத்திரம் பெறுதல் (Certificate)
    இதற்கான கால வரையறை : 12 முதல் 15 மாதங்கள்

*வணிக முத்திரை பதிவு செய்யப்பட்டுவிட்டதற்கான சான்றிதழைப் பெற்றுவிட்ட காலம் தொடங்கி நமது பொருள் அல்லது சேவைக்கு “®” எனும்குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.

பதிவு வேலைகள் முழுமைபெற்ற பின்னர் சான்றிதழ் வழங்கப்படும். பதிவு செய்யப்படும் முத்திரைக்கு சுமார் 10 ஆண்டுகால வரையறையில் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முத்திரை பதிவு செய்த நாள் தொடங்கி பத்தாண்டுகள் கழித்து மீண்டும் முத்திரையை மீள்பதிவு செய்ய வேண்டும். பத்தாண்டுகள் கழித்து அம்முத்திரைக்கான பாதுகாப்பு நீக்கப்படும் என்பதனையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

சான்றிதழ் பெற்ற வணிக முத்திரை சட்டபூர்வமாக பாதுகாக்கப்படுகின்றது

நாம் வணிக முத்திரைக்கு விண்ணப்பத்ததை தொடர்ந்து முத்திரை பதுவு முகவர்கள் மீண்டும் Search & Examination எனும் மீள் ஆய்வை மேற்கொள்வர். இங்கு நமது முத்திரை பிறரால் பயன்படுத்தப் படவில்லை என்பது மறுஉறுதி செய்யப்படுகின்றது. பின்பு அரசாங்க வர்த்தகமாணியில் (Government Gazette) – Gazette Trade Mark பதிவேற்றம் செய்யப்பட்டு சுமார் 2 மாத காலத்திற்கு பொதுப்பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகின்றது.

இவ்விரண்டு மாதங்களில் ஏதும் எதிர்ப்புகள் தாக்கல் செய்யப்பட்டாத நிலையில் நமது முத்திரை பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவ்வாறு சான்றிதழ் பெற்ற வணிக முத்திரை அதன் பொருள்/சேவை உரிமையாளர் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்குகின்றது. எந்தவொரு அனுமதியும் முன்னறிவிப்பும் இன்றி நம் வணிக முத்திரை முன்றாம் தரப்பினரால் பயன்படுத்தப்படும்போது Court-section 35(1) எனும் சட்டப்பிரிவின்கீழ் நம்மால் வழக்குப் பதிவு செய்ய முடியும்.

வணிக முத்திரையால் அதன் உரிமையாளர் பெரும் நன்மைகள்

  1. வணிக முத்திரைக்கான சான்றிதழைப் பெற்றுவிடும் நிலையில் நாமே நமது பொருளின் அல்லது சேவையின் முழு முற்றிலுமான உரிமையாளராகிவிடுகிறோம். யாரிடமும் தனியாக இதை தனியாக வேறு வழியில் ஆதரங்காட்ட வேண்டிய அலைச்சல்கள் இல்லை.
  2. வணிக முத்திரை பெற்ற நமது பொருள் அல்லது சேவை நமது சொத்தாக மாறிவிடுகிறது. இதன்மூலம் கிடைக்கப்பெறும் லாபம் நட்டம் ஆகியவற்றிற்கு நாமே முழு பொறுப்பையும் ஏற்போம்.
  3. வணிக முத்திரை ஒரு வகை சொத்தாகக் கருதப்படுவதால் அதனை உரிமை மாற்றம் செய்தல், விற்றல் போன்ற நடவடிக்கைகளையும் எளிதாக மேற்கொள்ள முடியும்.
  4. நமது பொருளை அல்லது சேவையை மற்றவர்களின் பொருளோடு வேவையோடு வேறுபடுத்து காட்ட உதவும். தனித்துவம் மிக்க பொருளை அல்லது சேவையை தனித்து அடையாளம் காட்டும்.
  5. நமது பொருளை அல்லது சேவையை கண்டறிவதில் வாடிக்கையாளர்கள் அடையும் குழப்பத்தை தவிர்க்கலாம்.
  6. பிறர் நமது பொருளின் அல்லது சேவையின் நற்பெயரை சேதப்படுத்தும் நடவடிக்கையை சட்டபூர்வமாக எதிர்கொள்ளலாம்.
  7. நமது வர்த்தக முத்திரையை நாடு முழுவதும் எந்தத் தடையுமின்றி பயன்படுத்த முழு சுதந்திரம் பெறுகிறோம்.
  8. நமது வணிக முத்திரைக்குத் தொடர்ந்து பத்தாண்டு காலம் சட்ட பாதுகாப்பு வழங்கப்படும்; பத்தாண்டுகள் கழித்து மீள் பதிவுனை எளிதாகப் புதுபித்துக் கொள்ளலாம்.
  9. வணிக முத்திரை பதிவு செய்யாதவர் தனது பொருளை அல்லது சேவையைத் தற்காத்துக்கொள்ள சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் பண விரயம், கால விரயம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
  10. வியாபாரம் எளிதில் விருத்தியடையும்

வணிக முத்திரை பொருளின் தரத்தை நிலைநிறுத்தும் அதேவேளை அம்முத்திரையின் தரத்தையும் உயர்த்தி பிடிக்கின்றது. அதிக பிரபலமடைந்த முத்திரைகளுக்கென்று தனிப்பட்ட விலைமதிப்பை உலக சந்தை நிர்ணயம் செய்கின்றது. உதாரணமாக, உலக சந்தையில் தொடர்ந்து பதின்மூன்று ஆண்டுகள் கோகா கோலாவே அதிக மதிப்பு வாய்ந்த வணிக முத்திரையாக இருந்து வந்துள்ளது. அவ்வகையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஆப்பிள் நிறுவனத்தின் முத்திரை 98.3 பில்லியன் அமேரிக்க டாலர் மதிப்புடன் முதல் நிலையினை அடைந்துள்ளது.

தொடக்கத்தில் மடிகணினியின்வழி சந்தையை தன் வசப்படுத்தி தனது தரத்தை நிலைநாட்டிக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து சில்லறை வணிகங்கள், iPod, iPhone என தன வணிகப் பொருளை பலதரப்படுத்தி வியாபார விருத்தியடைந்துள்ளதை இதற்கு சான்றாகக் கூறலாம். அப்படியானால், ஒரு வணிக முத்திரையிலான பொருளில் தொடங்கிய வணிகம் அதில் நிலையாக கால் பதித்து மக்களின் நம்பிக்கையையும் நல்லாதரவையும் பெற்றுவிடும் நிலையில் தொடர்ந்து அதே வணிக முத்திரையைப் பயன்படுத்தி மற்ற பொருள்களின் வணிக சந்தைக்குள் மிக எளிதாக நுழைந்துவிட முடியும்.

11.நிலையான உரிமத் தொகையைப் பெறலாம்

பெரும்பாலும் வணிக சந்தையில் பிரபலம் அடைந்த பொருட்களை பல்வேறு நோக்கங்களுக்காக மற்ற நிறுவனங்கள் பயன்படுத்துவதை பரவலாக காணலாம். உதாரணமாக, வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் (Walt Disney Pictures) என்றதுமே உல்லாசமான பொழுதுபோக்குக்கு பொருத்தமான ஒன்றாக நினைக்கும் போக்கு அனைவருக்கும் இருக்கும்.

சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்கள் என தனக்கென தனியாக வயது வரம்பற்ற பயனிட்டாளர்களை உலக அளவில் வைத்திருக்கும் நிறுவனம் இதுவே. அனைவரும் நன்கு அறிமுகமான இந்த Walt Disney Picturesஐ பல்வேறு வகையில் பயன்படுத்தி அதன் பயனிட்டாளர்களை தங்கள் பக்கம் கவரும் செயல்பாடுகளைப் பல சிறுசிறு நிறுவனகங்கள் மேற்கொள்வதைப் பார்க்கலாம்.

உதாரணமாக, சாவி கொத்துகளுடன் இணைத்துக் கொள்ளும் key chain மற்றும் இதர பரிசு பொருட்களைச் செய்ய வால்ட் டிஸ்னி நிறுவனம் தனியாக இயங்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, தனது வணிக முத்திரையின் உரிமத்தை பரிசு பொருள்கள் செய்யும் நிறுவனத்திற்கு வாடகைக்குக் கொடுப்பதன் மூலம் நிலையான உரிமத் (royalty) தொகையைப் பெறலாம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader