காஞ்சிபுரம் மாவட்ட வரலாறு

Get real time updates directly on you device, subscribe now.


காஞ்சிபுரம் மாவட்டம் என்று இன்று அழைக்கப்படுவது அண்மை காலம் வரை செங்கல்பட்டு மாவட்டம் என்றே வழங்கிற்று. காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வளமும் தொழில்வளமும் கலைவளமும் நிறைந்த மாவட்டமாகும்.


இம்மாவட்டத்திற்கு காஞ்சிபுரம் நகரம் தலைநகராய் விளங்கி வருகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது. சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர்.


பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர். இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன கட்டப்பட்டன.


பல்லவ அரசு கி.பி. 949க்குப் பிறகு நிலைகுலைந்தது. காஞ்சியை இராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான். பின்னர் இம்மாவட்டம் சோழநாட்டின் ஒரு பகுதியாயிற்று. சோழர் காலத்தில் இதற்குத் தொண்டைமண்டலம் என்று பெயரிடப் பட்டது.


சோழர்களின் ஆட்சி 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் வீழ்ச்சியுறவே, இப்பகுதியை காகாதியர் தம் வசப்படுத்தினார். பின்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர ராஜ்ஜியத்தில் 1393 இல் காஞ்சிபுரம் மாவட்டம் இணைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசு முகமதிய மன்னர்களால் 1565 இல் வீழ்ச்சியுற்றது.


1639இல் மூன்றாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசப் பிரதிநிதியினால் இம்மாவட்டம் சீர்பெற்றுத் திகழ்ந்தது. இவரிடமிருந்து ஆங்கிலேயர் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடத்தை மானியமாகப் பெற்றனர். பிறகு கோல்கொண்டா சுல்தான்கள் தென்கிழக்கு இந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதும் காஞ்சிபுரமும் அவர்கள் வசமாயிற்று.


1687 இல் கோல் கொண்டாவை முகலாயர் கைப்பற்றியதும் காஞ்சிபுரமும் கர்நாடகமும் முகலாயப் பேரரசின் வசமாயின. 18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கவெறி கொண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதியப் போர்களால் செங்கற்பட்டும் காஞ்சிபுரமும் பலத்தத் தாக்குதல்களுக்கு இலக்காயின.


பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் மகமதலி 1763 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியும் 1947இல் முடிவுற்றது.

எல்லைகள்


காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வடக்கில் திருவள்ளூர் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் விழுப்புரம் மாவட்டமும், மேற்கில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. தலைநகர் காஞ்சிபுரத்தின் பரப்பளவு 11.65 ச.கிமீ ஆகும்.

வழிபாட்டுத்தலங்கள்

காஞ்சி கைலாசநாதர் கோவில்
வைகுந்தப் பெருமாள் கோவில்
ஏகாம்பரேஸ்வர் கோவில்
வரதராஜப் பெருமாள் கோவில்
காமச்சியம்மன் கோவில்
குமரக்கோட்டம் ஆகிய கோயில்கள்,
அச்சிறுப்பாக்கம்
குன்றத்தூர்
திருவிடைச்சுரம்
திருப்போரூர்
திருமாற்பேறு
திருவான்மியூர்
திருக்கழுக்குன்றம்
திருமேற்றளி
திருப்பெரும்புதூர்

ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள், மகாபலிபுரம் குடைவரைக் கோயில்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம்.

சுற்றுலா தலங்கள்

மாமல்லபுரம்
காஞ்சிபுரம்
வேடந்தாங்கல்
கரிக்கிலி
வி.ஜி.பி. தங்கக் கடற்கரை
திருக்கழுக்குன்றம்
வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா
காஞ்சிபுரம் அண்ணா நினைவகம்
ஆகியவை இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களாகும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader