IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சுதந்திர இந்தியாவில் செயல்படத் துவங்கிய ’ஹீரோ சைக்கிள்ஸ் ‘ – வெற்றி கதை

Get real time updates directly on you device, subscribe now.

குழந்தைப் பருவம் என்பது முழுமையாக சுதந்திரத்தை அனுபவிக்கும் பருவம் எனலாம். சைக்கிள் ஓட்டும் அனுபவம் இதை நன்குணர்த்தும். மில்லியன் கணக்கான இந்தியக் குழந்தைகளுக்கு முதல் முறையாக சைக்கிள் வாங்கும் தருணம் மறக்கமுடியாத சிறந்த தருணமாகவே அமைந்துவிடும். அதேபோல் பெற்றோர்களுக்கும் தங்களது மகனுக்கோ மகளுக்கோ சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுப்பது சிறந்த தருணமாகவே அமைந்துவிடும்.

 

அப்படிப்பட்ட எண்ணற்ற இந்தியக் குடும்பங்களிடம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சைக்கிள்களைக் கொண்டு சேர்த்தவர் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனர் மறைந்த ஓபி முஞ்சால்.

 

ஹீரோ சைக்கிள்ஸ் 1956-ம் ஆண்டு, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு லூதியானாவில் நிறுவப்பட்டது. முஞ்சால் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவி தனது வணிகத்தை சிறியளவில் துவங்கினாலும் சரியான நேரத்தில் செயல்படத் துவங்கினார். வணிகம் சிறியளவிலேயே துவங்கப்பட்டது. முஞ்சாலின் தலைமையில் இந்த வணிகம் உலகின் மிகப்பெரிய சைக்கிள் உற்பத்தி நிறுவனமாக வளர்ச்சியடைந்தது.

 

தற்போது ஆண்டிற்கு ஐந்து மில்லியன் சைக்கிள்களை உற்பத்தி செய்து வருகிறது.

 

இதன் முக்கிய உற்பத்தி தொழிற்சாலை லூதியானாவில் உள்ளது. இந்த வளாகத்திற்குள்ளேயே அமைக்கப்பட்ட ஆர்&டி பிரிவில் சைக்கிள் தயாரிப்பிற்கான முக்கிய பாகங்கள் தயாரிக்கப்படுகிறது.

 

இந்நிறுவனம் ஜெர்மனி, போலாந்து, ஆப்ரிக்கா, பின்லாந்து உட்பட 70-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 250-க்கும் அதிகமான சப்ளையர்கள் மற்றும் 2,800-க்கும் அதிகமான டீலர்ஷிப்கள் அடங்கிய நெட்வொர்க் உள்ளது.

 

ஹீரோ மோட்டார்ஸ் கம்பெனி (HMC) 3,500 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாகும். குடும்ப வணிகமான இந்த நிறுவனத்திற்கு பங்கஜ் எம் முஞ்சால் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார்.

 

 

ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் ஹீரோ மோட்டார்ஸ் கம்பெனியின் ஒரு பிரிவாக செயல்படுகிறது. பங்கஜ் முஞ்சாலின் மகனான 27 வயது அபிஷேக் முஞ்சால் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள், நோக்கம், உத்தி ஆகியவற்றில் பங்களிக்கிறார்.

 

ஆரம்ப கட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டது

 

ஓபி முஞ்சால் கமாலியா கிராமத்தில் பிறந்தவர். இந்தப் பகுதி தற்போது பாகிஸ்தானில் உள்ளது. பஹதூர் சந்த், தாகூர் தேவி ஆகியோர் இவரது பெற்றோர். இவர் சைக்கிள் பழுது பார்க்கும் பணியைத் துவங்கியபோது இவரது வயது 16.

 

“இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு வாழ்வாதாரத்திற்காக ஓபி முஞ்சால் குடும்பம் சைக்கிள் உதிரிபாகங்கள் வணிகத்தைத் துவங்க அம்ரிஸ்டர் பகுதிக்கு மாற்றலானது. இவருடன் இவரது சகோதரர்களான பிரிஜ்மோகன் லால் மஞ்சல், தயானந்த் மஞ்சல், சத்யாநன்த் மஞ்சல் ஆகியோர் உடன் சென்றனர்,” என்றார் அபிஷேக்.

 

”புதிய திறன்கள் இணைந்துகொண்டே இருந்ததால் சில ஆண்டுகளிலேயே வணிகம் சிறப்பிக்கத் துவங்கியது. பின்னர் ஓபி முஞ்சால் சைக்கிள் உதிரிப் பாகங்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டார். அதன் பிறகு முழுமையான சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டார். அப்போதிருந்து இந்நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது,” என்றார்.

 

ஓபி முஞ்சாலிடம் வளங்கள் குறைவாக இருந்தபோதும் அவரது லட்சியம் சற்றும் குறையவில்லை என்கிறார் அபிஷேக்.

இத்தனை ஆண்டுகளில் ஹீரோ சைக்கிள்ஸ் பல குறிப்பிடத்தக்க மைல்கற்களைக் கடந்து வந்துள்ளது. கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

 

“1975-ம் ஆண்டில் நாங்கள் உலகின் மிகப்பெரிய சைக்கிள் தயாரிப்பாளர்களாக உருவானோம். 1986-ல் ஒரே நாளில் அதிகளவிலான பைக்குகளை தயாரித்ததற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றோம்,” என்றார் அபிஷேக்.

 

2007-ம் ஆண்டு Munjal Kiru நிறுவப்பட்டது, 2010-ல் ZF Hero Chassis Systems நிறுவப்பட்டது, 130 மில்லியன் சைக்கிள்கள் என்கிற இலக்கைக் கடந்து செயல்பட்டது, 2012-ல் ப்ரீமியம் Urban Trail அறிமுகப்படுத்தியது, சிறந்த தரத்திற்காக ஜெனரல் மோட்டார்ஸ் விருது வென்றது,

 

2015-ல் Firefox கையகப்படுத்தியது, பிரத்யேக விநியோகப் பகுதிகளைத் துவங்கியது, 2016-ல் யூகேவின் Avocet, இலங்கையின் BSH Ventures ஆகியவற்றைக் கையகப்படுத்தி ஐரோப்பிய சந்தைகளில் செயல்படத் துவங்கியது,

 

2017-ல் Octane bikes அறிமுகப்படுத்தியது, 2018-ல் Insync அறிமுகப்படுத்தியது ஆகியவை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் மற்ற குறிப்பிடத்தக்க மைல்கற்களாகும்.

 

பல்வேறு விருதிகளை வென்ற இந்நிறுவனத்தின் தலைமையகம் லூதியானாவில் உள்ளது. பிஹாரில் உள்ள பிஹ்தா, உத்திரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத், இலங்கை ஆகிய பகுதிகளில் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன.

 

மேலும் இங்கிலாந்தின் மான்சஸ்டர் பகுதியில் 2 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்து உலகத் தரம் வாய்ந்த ஹீரோ க்ளோபல் டிசைன் செண்டர் உருவாக்கப்பட்டுள்ளது. வணிகம் வளர்ச்சியடைகையில் முதலீடு வரத்துவங்கியது.

 

சரியான திறமையுள்ளவர்களுடன் பணியாற்றி வணிக உத்திகளில் சிறந்த நபர்களை இணைத்துக்கொண்டு பணியாற்றுவதை நிறுவனர்கள் உறுதி செய்தனர்,” என்றார்.

 

‍தனித்துவமான செயல்பாடு

 

சிறந்த மேலாண்மை நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை, தவறுகளை பரிசோதிக்கும் முறைகளை முழுமையான நடைமுறைப்படுத்துதல் ஆகியவையே ஹீரோ சைக்கிள்ஸ் அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் தனித்துவமான முறையில் சிறந்து விளங்க உதவியுள்ளது என்கிறார் அவர்.

 

தற்போது அனைத்து ரக சைக்கிள்கள், உதிரி பாகங்கள், ப்ரீமியம், மிட்-ப்ரீமியம், சூப்பர் ப்ரீமியம் பிரிவுகள் தொடர்புடைய பொருட்கள் போன்றவை ஹீரோ ஸ்பிரிண்ட் மற்றும் ஹீரோ ஸ்பிரிண்ட் ப்ரோ பிராண்டுகளின் கீழ் உற்பத்தி செய்யப்படுகிறது.

 

மிகப்பெரிய பழமையான நிறுவனங்கள் டிஜிட்டல்மயமாவதில் சவால்களைச் சந்திக்கின்றன. ஆனால் அபிஷேக் போன்றோரின் தலைமையில் செயல்படுவதால் ஹீரோ சைக்கிள்ஸ் டிஜிட்டல் செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டுவிட்டது. அதன் தயாரிப்புகள் மின்வணிக சந்தைப்பகுதிகளில் ஆன்லைனில் கிடைக்கிறது.

 

இந்தியாவின் சைக்கிள் துறையில் மிகப்பெரிய பிராண்டாக இருப்பினும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே துறையின் முதுகெலும்பாக இருப்பதாக அபிஷேக் தெரிவிக்கிறார்.

 

பல சிறு விற்பனையாளர்கள் உதிரி பாகங்களை விநியோகிக்க உதவுகின்றனர். வளர்ந்து வரும் பிரிவுகளிலும் அதிகம் செயல்படாத சந்தைகளிலும் வேலைவாய்ப்புகளையும் வணிகத்தையும் உருவாக்க விற்பனையாளர்கள் மற்றும் டீலர்ஷிப்களின் ஒருங்கிணைப்பு உதவுகிறது,” என்றார்.

 

”ஆனால் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்கள் குறைந்த விலை நிர்ணயிப்பதில் சிரமங்களை சந்திக்கின்றன. ஏனெனில் இந்தியாவில் கிடைக்காத தரமான பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் உள்ளது. இவர்கள் தங்கள் வணிகத்தை நிலைப்படுத்திக்கொள்ள முதலீடு தேவைப்படுகிறது.

 

அவர்களது அன்றாட உற்பத்தி தொடர்புடைய செலவுகள் குறைய உதவும் வகையில் நாங்கள் லூதியானாவின் சைக்கிள் வேலி ப்ராஜெக்டில் 250 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம்,” என்றார்.

சந்தையில் ஹீரோ சைக்கிள்ஸ் தற்போது அதிகளவில் பங்களிக்கிறது. இருப்பினும் மிகப்பெரிய அளவிலான வாய்ப்புகள் சந்தையில் காணப்படுகிறது.

 

”பொது மக்கள் சைக்கிள்களை அதிகளவில் பயன்படுத்துவதால் சந்தை அளவு பெரியதாகவே உள்ளது. அவர்கள் அதிக வாய்ப்புகளைப் பெறவும், வேலை வாய்ப்புகள் கிடைக்குமிடம், பள்ளி, மருத்துவமனை போன்ற பகுதிகளைச் சென்றடையும் உதவுகிறது. பசுமையான, கார்பன் சுவடுகள் இல்லாத, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழங்கி போக்குவரத்து வசதியை வழங்குகிறது,” என்றார்.

 

எனினும் சைக்கிள் ஓட்டிச் செல்வது அந்தஸ்து குறைவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் வாடிக்கையாளர்களிடையே ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதாலும் சாகசம் நிறைந்த அனுபவங்களை மக்கள் விரும்புவதாலும் தற்போது நிலைமை மாறி வருகிறது என்கிறார்.

 

இ-மொபிலிட்டி தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை ஹீரோ சைக்கிள்ஸ் அதன் இ-பைக்ஸ் திட்டங்களுக்கு சாதகமாகவே பார்க்கிறது.

 

எங்களது இ-பைக் பிரிவைக் கொண்டு சைக்கிள் ஓட்டும் அனுபவத்தில் புதுமையைப் புகுத்த விரும்புகிறோம். உலகளவிலான சந்தை பங்களிப்பை தற்போதுள்ள ஐந்து சதவீதத்தில் இருந்து எட்டு சதவீதமாக அதிகரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளோம்.

 

அத்துடன் வருங்காலத்தில் பல்வேறு புதிய வகை சைக்கிள்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader