IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பிறந்த நாள் கொண்டாட சென்ற தொழிலதிபர் குடும்பத்துடன் பலி!

28

ஹெலிகாப்டர் மற்றும் விமானம் நடுவானில் மோதிக்கொண்டதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேர் பலியாகினர்.


ஸ்பெயின் நாட்டில் கிழக்கு பகுதியில் மத்திய தரைக்கடல் பகுதி அருகே பலேரீக் தீவுகள் உள்ளன. அங்கு மிகப்பெரிய தீவான மஜோர்கா புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுல பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர்.


இந்த நிலையில் ஜெர்மனை சேர்ந்த தொழிலதிபர் ஆகஸ்ட் இன்செல்கம்மர் தனது 43வது பிறந்த நாளை மஜோர்காவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட முடிவு செய்தார். அதன்படி அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனியார் ஹெலிகாப்டரில் அவரது மனைவி கிறிஸ்டினா மற்றும் குழந்தைகள் மேக்ஸ் (வயது 11), சோபி (வயது 9) ஆகியோருடன் தீவிற்கு புறப்பட்டார். ஹெலிகாப்டரை இத்தாலி விமானி செட்ரிக் லியோனி என்பவர் இயக்கினார்.


இந்த ஹெலிகாப்டர் மஜோர்கா தீவில் உள்ள கடற்கரை நகரமான இன்காவில் ஒரு மருத்துவமனைக்கு மேலே நடுவானில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிராக சிறிய ரக விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தை ஸ்பெயின் நாட்டின் விமானி ஜூவான் ஜோஸ் விடல் இயக்கினார். அவருடன் நண்பர் குஸ்டாவோ செரானோ இருந்தார். சற்றும் எதிர்பாரது கண் இமைக்கும் நேரத்தில் விமானமும், ஹெலிகாப்டரும் மோதிக் கொண்டன. இதில் நிலை தடுமாறிய ஹெலிகாப்டர் மற்றும் விமானம் அருகில் இருந்த தோட்டத்தில் விழுந்தன.

உயரத்தில் இருந்து விழுந்ததால் ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்தது. அந்த தீ விமானத்திலும் பற்றி எரிந்தது. இதில் தொழிலதிபர் ஆகஸ்ட் இன்செல்கம்மர், அவரது மனைவி, மகள், மகன், ஹெலிகாப்டர் விமானி செட்ரிக் லியோனி, விமானத்தை இயக்கிய ஜூவான் ஜோஸ் விடல், அவரது நண்பர் குஸ்டாவோ செரானோ ஆகிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.