12.1 C
Munich
Monday, October 3, 2022

அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் ஜெனரேட்டரை வழங்கியது லெக்ராண்ட் இந்தியா குழுமம்

Must read

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆக்சிஜன் முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் அதிகரித்து வரும் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு உலகம் முழுவதும் மின்சாதன பொருட்கள் விற்பனை மற்றும் டிஜிட்டல் கட்டிட கட்டமைப்பில் சிறந்த நிறுவனமாக திகழும் லெக்ராண்ட் இந்தியா நிறுவனம் 20என்எம்3 என்ற கொள்ளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரை திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் உடன் இணைந்து வழங்கி உள்ளது. இந்நிறுவனம் லெக்ராண்ட் இந்தியா குழுமத்தின் துணை நிறுவனம் ஆகும்.

இந்த புதிய ஆக்சிஜன் ஜெனரேட்டரை தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர், ஜெயகுமார் எம்.பி., திருவள்ளூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் டாக்டர் சாந்தி, லெக்ராண்ட் பெருநிறுவன சமூக பொறுப்பு பிரிவு தலைவர் அபிதா அனீஸ் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

20என்எம்3 கொள்ளளவு கொண்ட இந்த ஸ்பார்கோ ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் மூலம் நிமிடத்திற்கு 333 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். இதன் காரணமாக ஒரே நேரத்தில் 65 படுக்கைகள் வரை ஆக்சிஜனை வழங்க முடியும்.

மேலும் இந்நிறுவனம் குட் பவுண்டேஷனுடன் இணைந்து 6 மாத கோவிட்-19 தடுப்பூசி முகாமை சென்னை, பெங்களூர், நொய்டா, புனே, நாசிக் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் நடத்த உள்ளது. இந்த முகாம் அக்டோபர் 2வது வாரத்தில் துவங்குகிறது. முதல் கட்டமாக இந்த முகாம் மூலம் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சுகாதாரமான சமூகத்தை உருவாக்குவதில் லெக்ராண்ட் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த காலங்களில் இந்நிறுவனம் அரசு மருத்துவமனைகள், கோவிட் பராமரிப்பு மையங்களுக்கு ஐசியூ படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருத்துவ உபகரணங்கள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய படுக்கைகள் ஆகியவற்றை வழங்கி உள்ளது.

மேலும் இந்நிறுவனம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு தனது மின்சார தயாரிப்புகளான பாதுகாப்பு சாதனங்கள், வயரிங் சாதனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கான யுபிஎஸ் ஆகியவற்றை வழங்கி உள்ளதோடு மருத்துவமனைகளுக்கு 2 ஆயிரம் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ உதவிகளையும் இந்நிறுவனம் வழங்கி உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய லெக்ராண்ட் இந்தியா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான டோனி பெர்லாண்டு கூறுகையில், ஒரு சமூகப் பொறுப்புள்ள நிறுவனம் என்பதன் அடிப்படையில் நாங்கள் எப்போதும் உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். அது எங்கள் பணியாளர்களாக இருந்தாலும் சரி அல்லது சமூகமாக இருந்தாலும் சரி. மக்கள் மீதும் சமூகத்தின் மீதும் அதிக கவனம் செலுத்தும் எங்கள் நிறுவனத்தின் ஒரு பகுதியாக நானும் பங்கெடுத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆக்சிஜன் தேவை அதிகரித்து வரும் இந்த சூழலில் எங்கள் நிறுவனம் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் உடன் இணைந்து இந்த ஆக்சிஜன் ஜெனரேட்டரை வழங்கி உள்ளது. மேலும் கோவிட் -19க்கு எதிரான போராட்டத்தில் எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், உயிரை காப்பாற்றுவதில் ஆக்சிஜன் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இது கோவிட் நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும் முக்கியமானதாகும். கொரோனாவின் இரண்டாவது அலையின்போது அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்பட்டதை நாம் கண்கூடாக கண்டோம். தற்போது ஆவடி அரசு மருத்துவமனையில் லெக்ராண்ட் இந்தியா குழுமத்தால் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் ஜெனரேட்டர் கோவிட் நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கும் மிகுந்த உதவியாக இருக்கும். இந்நிறுவனம் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. அதில் தற்போது இங்கு நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் ஜெனரேட்டரும் ஒன்றாகும். இதன் மதிப்பு 50 லட்ச ரூபாய் ஆகும். சமூகத்திற்கு உதவிடும் வகையில் லெக்ராண்ட் நிறுவனம் மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் பாராட்டுகிறோம்; மேலும் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

 

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article