IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ரூ.500 பழைய நோட்டை மாற்ற முடியாமல் தவிக்கும் மூதாட்டி

43

 

வேலூரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தான் சேமித்து வைத்திருந்த ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பழைய 500 ரூபாய் நோட்டை மாற்ற வழியில்லாமல் தவித்து வருகிறார்.

வேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியை சோந்தவர் புவனேஸ்வரி(65). கணவரை இழந்த இவருக்கு வாரிசுகள் யாரும் இல்லை. தனியே வசித்து வந்த இவர் வேலை பார்த்து கிடைத்த பணத்தை தலையணைக்கு அடியில் சேமித்து வைத்திருந்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காசநோயால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வரி சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார். கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்காததால் வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்டு வந்துள்ளார். அப்போது தலையணைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை பார்த்தும் வீட்டின் உரிமையாளர் இது செல்லாத நோட்டு என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி மொத்தமாக சேர்த்து வைத்திருந்த ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண்டு பல இடங்களுக்கு சென்று மாற்ற முயன்றுள்ளார். எங்கும் மாற்ற முடியாததால் மனமுடைந்த அவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு சென்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் மனு அளித்துள்ளார்.

இதையடுத்து அவர், இது தொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை அழைத்து விசாரித்த போது. இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவின்படி பழைய ரூபாய் நோட்டுகளை இனி எக்காரணம் கொண்டும் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற இயலாது என்பதை தெரிவித்துள்ளார். இதனால், கையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் மூதாட்டி தவித்து வருகிறார்.

#Grandmother #old #500nots #change