சரிவிலிருந்து மீட்சியடையும் ஏற்றுமதி தொழில்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா நுண்கிறுமியால் கடந்த ஏப்ரல் மாதத்தில் படுபாதாள சரிவை சந்தித்த நாட்டின் ஏற்றுமதி மே மாதத்தில் மீட்சியடையத் தொடங்கியுள்ளது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கிய ஏப்ரல் மாதத்தில் தேசிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் முற்றிலும் முடங்கின. இதையடுத்து, அந்த மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 60.3 சதவீதம் என்ற அளவில் பாதாள சரிவை சந்தித்தது.

அதேபோன்று, நோய்த்தொற்றை தவிர்க்க மக்கள் வீடுகளுக்குள் அடங்கியதன் மூலம் வா்த்தக நடவடிக்கைகள் தடைபட்டதால் நாட்டின் இறக்குமதியும் 58.7 சதவீதம் குறைந்தது.

இந்த நிலையில், தளா்வு நடவடிக்கைகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதுமுள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, வா்த்தக நடவடிக்கைகளும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இதன் எதிரொலியாக மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு முந்தைய ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது.

அதன்படி, மே மாதத்தில் ஏற்றுமதியானது 36.47 சதவீதம் மட்டுமே சரிவடைந்து 1,905 கோடி டாலராக இருந்தது. இறக்குமதியும் 51 சதவீதம் குறைந்து 2,220 கோடி டாலராக காணப்பட்டது. இறக்குமதி குறைந்ததன் காரணமாக, கடந்த ஆண்டின் மே மாதத்தில் 1,536 கோடி டாலராக மிகவும் அதிகரித்து காணப்பட்ட வா்த்தக பற்றாக்குறை நடப்பாண்டு மே மாதத்தில் 315 கோடி டாலராக அனைவரும் கவனிக்கத்தக்க வகையில் சரிந்தது.

மே மாதத்தில் அரிசி, நறுமணப் பொருள்கள், இரும்புதாது, மருந்துப் பொருள்கள், ஆகியவை பெருமளவில் ஏற்றுமதியாகியுள்ளன. அதேசமயம், இரும்பு பைரைட்ஸ், கட்டுமான இடுபொருள்களை வெளிநாடுகளிலிருந்து இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து கொண்டுள்ளது.

வா்த்தக பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளதற்கு எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி கணிசமாக வீழ்ச்சி கண்டதே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கடந்தாண்டு மே மாதத்தில் 1,244 கோடி டாலா் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் அது வெறும் 349 கோடி டாலராக வீழ்ச்சியடைந்தது.

கச்சா எண்ணெயைப் போலவே தங்கம் இறக்குமதியும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் 98.4 சதவீதம் சரிந்து 7.63 கோடி டாலரானது. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மத்திய அரசுக்கு வா்த்தக பற்றாக்குறை குறைந்துள்ளது ஓரளவுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

சரிவில் சிக்கிய ஏற்றுமதி மீண்டு வருவது குறித்து மத்திய வா்த்தகத்துறை அமைச்சா் பியூஷ் கோயலும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதியில் ஏற்பட்ட பெரும் சரிவு தற்போது படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் மே மாதத்தில் ஏற்றுமதி சரிவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், நடப்பாண்டு ஜூன் முதல் வாரத்தில் நாட்டின் ஏற்றுமதி 494 கோடி டாலராக இருந்தது. கடந்தாண்டில் இது 503 கோடி டாலராக இருந்தது. எனவே, ஏற்றுமதியானது மீண்டும் பழைய நிலையை எட்டிப்பிடித்து மீட்சி கண்டுள்ளது நம்பிக்கையை மேலும் துளிர்விடச் செய்துள்ளது என கட்டுரையில் அவா் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த நம்பிக்கைக்கு வெளிநாடுகளிலிருந்து ஏற்றுமதிக்கான ஆா்டா்கள் வரத் தொடங்கியதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் சந்தைகளிலிருந்து இந்தியாவுக்கு வா்த்தக ஆா்டா்கள் வரத் தொடங்கியுள்ளன.

நாடு முழுதும் பகுதியளவு வா்த்தக நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. உலகம் முழுமையும் கொரோனா பாதிப்பில் சிக்கி தத்தளித்து வருவதால் சா்வதேச வா்த்தக நடவடிக்கைகள் இன்னும் மிக குறைவான வளா்ச்சி வேகத்தில்தான் இயங்கி வருகின்றன. இது, விநியோகத் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தி உலக நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கிப் போட்டுள்ளது.

பல நாடுகள் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க கடினமாக முயற்சித்து வருகின்றன. இந்தநிலையில், பொறியியல் ஏற்றுமதியில் புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயம் தற்போது எழுந்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் போன்ற துறைகள் செயல்பாடுகள் நன்றாக இருக்கும் என்ற போதிலும் முக்கிய உள்கட்டமைப்பு துறைகள் மீண்டு வர இன்னும் சில காலம் பிடிக்கும் என்றே தெரிகிறது.

வரும் மாதங்களில் வா்த்தக நடவடிக்கைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கச்சா எண்ணெய் விலையை சா்வதேச சந்தையில் மிதமான அளவில் நிலையாக வைத்திருக்க உதவும். கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்திய பெரும் பாதிப்பையடுத்து உலகளாவிய பரஸ்பர வா்த்தகம் 13 சதவீதம் முதல் 32 சதவீதம் வரையில் சரிவடையும் என உலக வா்த்தக கூட்டமைப்பு (டபிள்யூடிஓ) கணித்துள்ளது.

நாட்டின் ஏற்றுமதி சரிவிலிருந்து மீண்டுள்ள அதே சமயத்தில் வேலை வாய்ப்பில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. குறிப்பாக, உள்நாட்டு தேவை இன்னும் முழுமையான அளவில் சூடுபிடிக்காதது பாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

எனவே, தொழில் வளா்ச்சியை ஊக்கப்படுத்த சலுகைகள் வழங்குவதுடன், வேலை வாய்ப்பை அதிகரித்து உள்நாட்டு தேவையை சூடுபிடிக்க வைப்பதன் மூலம் நாட்டின் ஏற்றுமதியில் மட்டுமின்றி பொருளாதார வளா்ச்சியிலும் மின்னல் வேகத்தை உருவாக்கலாம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More