IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட அனுபவம்! உற்சாகத்துடன் டாக்டர் ஆனந்தி பிரபாகர் தகவல்!

Get real time updates directly on you device, subscribe now.

அரசு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகி வந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

புலி வருது புலி வருது’ என சொல்லிக்கொண்டே திரிந்தோம். இதோ இன்று நம் வீட்டு வாசலுக்கும் வந்து நிற்கத் தொடங்கிவிட்டது. எனக்குத் தெரிந்து எதிர்காலத்தில் இங்கிருக்கும் !

இது என்னுடைய அனுபவமும், என் கருத்துகளும் மட்டுமே.

நான் ஓர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர். ‘சமூக இடைவெளி’யென ஊருக்கு உபதேசமளித்தாலும், நிறைய நோயாளிகளை தினந்தினம் நெருங்கிப் பரிசோதிக்க வேண்டிய, மருந்து அளிக்க வேண்டிய பணியும் கடமையும் எங்களுடையது. அப்படி கொரொனா பாசிடிவ் ஆன ஒரு நோயாளியிடமிருந்து எனக்கும் என் சக நண்பர்களுக்கும் வந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஜூன் 11ஆம் தேதி இரவு மருத்துவமனையில் Nightstay. எனக்கு அன்று மாலையிலிருந்து இலேசான உடல் அசதி இருந்தது. இரவு காய்ச்சலும் சேர்ந்து கொண்டிருந்தது. வார்டிலிருந்து ஒரு காய்ச்சல் மாத்திரையை வாங்கி போட்டுக் கொண்டு இரவைக் கழித்தேன்.

அடுத்தநாள் ஜூன் 12ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காய்ச்சல் குறையவேயில்லை. Myalgia என ஆங்கிலத்திலே சொல்வார்கள். தசைவலி. கெண்டைக்காலில் ஆரம்பித்து அப்படியே மொத்த உடம்பும், என்னால் எழ முடியாத அளவு, வலிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த அறிகுறிகளைக் கொண்டு எனக்கும் பாசிடிவாக இருக்கலாம் என நான் யூகித்துக்கொண்டதால் என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கினேன்.

நேரமாக நேரமாக தலைவலியும் இருமலும் சேர்ந்து கொண்டது. எனக்கு உடம்பு சரியில்லாமல் போவது, அதுவும் காய்ச்சல் இருமல் வருவதென்பதெல்லாம் அரிதிலும் அரிதாக நிகழ்பவை. எனவே நிச்சயம் கொரொனா தான் என்பது எனக்கு தெளிவாகவே புரிந்துவிட்டது.

அடுத்தநாளே swab test கொடுத்துவிட்டு, மீண்டும் வந்து என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். இந்த நான்கு நாட்களும் என் அறிகுறிகளுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன்.

ஜூன் 14 அன்று ரிசல்ட் பாசிடிவ் என்று வந்தது. எனக்கு மட்டுமல்ல. என்னோடு படிக்கும் ஆறு பேருக்கு. நாங்கள் அனைவரும் கொரொனா தனிமைப்படுத்துதலுக்கென ஒதுக்கப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டோம்.

நான் ஏற்கனவே கொஞ்சம் யூகித்து வைத்திருந்ததால், ரிசல்ட் என்னை அப்போது பெரிதாக பாதிக்கவில்லை. அடுத்தடுத்த நாட்களில் நீண்ட நேர தனிமையும், தொடர் இருமலும் அதனால் ஏற்ட்ட நெஞ்சுவலியும் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தின. பிறகு இரண்டு நாட்களுக்கு தூக்க மாத்திரைகள் போட்டு, தூக்கத்தோடு தான் இரவும் பகலும் கழிந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு நுகர்வறியும் திறன் எப்போது போனது என்பதே தெரியவில்லை. Anosmia என ஆங்கிலத்தில் சொல்வார்கள். மணம், துர்நாற்றம் எதுவுமே தெரியாது. பற்றாக்குறைக்கு சுவையும் தெரியவில்லை.

‘சுவை ஒளி ஊறுஓசை நாற்றம் என்றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு’

என்பான் வள்ளுவன். இதில் நமக்கு இரண்டு அவுட். சாப்பாடெல்லாம் மல்லுக்கட்டி சாப்பிடவேண்டியதாக தான் இருந்தது. ஆனாலும் சாப்பிட்டேன்.

12 நாட்களுக்குப் பிறகு, இரண்டு swab test posiive களுக்குப் பிறகு, மூன்றாவது test negative. இப்பொழுது தனி அறையில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இது ஏழு நாட்களுக்குத் தொடரும்.

கொரானா வந்தால் என்னென்ன லாம் சாப்டணும் என்று நீங்கள் குழப்பிக் கொள்ளவே தேவையில்லை.

உங்கள் அறிகுறிகளுக்குத் தேவையான மாத்திரை மருந்துகள், மூன்று வேளை உணவு, எலுமிச்சை இஞ்சி புதினா கலந்த ஜூஸ்(அல்லது) மிளகு கலந்த சூப், இரண்டு வேளை டீ,பால், மாலை சிற்றுண்டிக்கு ஏதேனும் பயறுவகைகள், மிளகு,மஞ்சள் தூள் கலந்த பால், தினம் ஒரு முட்டை, தினம் ஒரு பழம் (பெரும்பாலும் ஆரஞ்சு), வெந்நீர், கபசுரக் குடிநீர், முகத்துக்கு மாஸ்க் என எல்லா மருத்துவமனைகளிலும் அவர்களின் நேரக் கணக்குப்படி உங்களின் இடத்திற்கே வந்து தருவார்கள்.

இதில் நம்முடைய வேலை ‘ஐயோ. சாப்பிட முடியலையே’ என்று ஒதுக்கி வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுவது தான். இது இல்லாமல் ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை அன்னாசிப்பழம் ஆகியவற்றை நான் தனியாக வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டேன்.

வார்டிற்கு வருபவர்கள் வரும்போது தேவையான துணிமணிகளை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு குறைவாக பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு குறைவான துணிகள் போதும். மூன்று செட் எடுத்துப் போவதே போதுமானதாக தான் இருக்கும்.

இது இல்லாமல் ஹேண்ட்வாஷ், அவசரத்திற்கென கொஞ்சம் மாஸ்க், குளிக்க துவைக்க சோப், டூத்ப்ரஷ், பேஸ்ட், சீப்பு, வெந்நீர் பிடித்துக் கொள்ள ஃப்ளாஸ்க், டம்ளர் செல்போன், சார்ஜர் ஆகியவற்றைக் கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஹெட்போன், புத்தகங்கள், தலையணை,போர்வை, தட்டு, துணி காயப்போடும் ஹேங்கர் எடுத்துச் செல்வதெல்லாம் அவரவர் விருப்பதிற்குட்பட்டது. உங்களுக்கு வெந்நீர் அடிக்கடி அவசியம் தேவைப்படும் எனும் பட்சத்தில் உங்களிடம் ‘கெட்டில்’ இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் மருத்துவமனையில் இதற்கென தனியாக இன்டக்ஷன் ஸ்டவ் வைத்திருந்தார்கள்.

கட்டாயம் செய்ய வேண்டியவை:

எனக்கு இருந்த அறிகுறிகள் :
காய்ச்சல்
தலைவலி
உடம்புவலி
இருமல்
வயிற்றுப்போக்கு
மணம் (வாசனை)தெரியவில்லை
சுவை தெரியவில்லை

கொரொனா நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருப்பின் தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் சுற்றத்திற்கு, குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி.

அறிகுறிகள் இருப்பின் தயங்காது அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

பாசிடிவ் வந்தால், வார்டில் சேர வரும்போது, மேலே குறிப்பிட்டுள்ள ‘அவசியம் எடுத்து வர வேண்டிய பொருட்களை’ எடுத்துவாருங்கள்.

உங்களுக்கு ஏதேனும் நோய்கள் இருப்பின், அறுவை சிகிச்சை செய்திருப்பின் அதற்கான குறிப்பு அட்டைகள், நோட்டுகள், மருந்து மாத்திரைகளைக் கட்டாயம் எடுத்து வாருங்கள். உங்கள் மருத்துவர்களிடம் மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.

வார்டில் கட்டாயம் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். (அந்த மாஸ்க்கை சரியான முறையில் அப்புறப்படுத்தி விடுங்கள் மக்களே. மருத்துவமனையில் கொடுக்கும் மாஸ்க்கை வாங்கி மடித்து வைத்துவிட்டு, இரண்டு, மூன்று நாட்களுக்கெல்லாம் ஒரே மாஸ்க்கை அணிந்து கொண்டு இருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.)

பாரபட்சம் பார்க்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுங்கள். அதிகமாக, மிக அதிகமாக நீர் அருந்துங்கள்.

முக்கியமான ஒன்று, வார்டிலும் உங்களை நீங்கள் தனிப்படுத்திக் கொள்ளுதலே சாலச் சிறந்தது. திருவிழாவுக்கு வந்ததைப் போல ரவுண்டு கட்டி உட்கார்ந்து சாப்பிடுபவர்களைப் பார்க்கும் போது, எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் முறையாக உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் cross infection க்கு வழிவகுத்து, உங்களுக்கு குணமடைய நாட்கள் அதிகமாகலாம்.

மற்ற வார்டைப் போல இங்கே நம்மைப் பார்த்துக் கொள்ள குடும்பத்தினர் இருக்க மாட்டார்கள். உங்களைப் பார்க்க உறவினர்கள் பார்க்க மாட்டார்கள். கொஞ்சம் கடினமான சூழல் தான். உங்கள் மனஇறுக்கத்தைப் போக்கிக் கொள்ள புத்தகங்கள், பாட்டு என மடைமாற்றிக் கொள்ளுங்கள்.

உடல்நலத்திலும் மனநலத்திலும் என்ன பிரச்சனையென்றாலும் அங்குள்ள மருத்துவர்களுக்கோ, செவிலியர்களுக்கோ தெரியப்படுத்தி சரிசெய்து கொள்ளுங்கள். இதுவும் ஒரு சாதாரண காய்ச்சல் போல தான். முறையான மருந்துகளோடும், சரியான உணவோடும் நம்மால் இதை எளிதில் கடந்து வர முடியும் என்கிற நம்பிக்கை மிக முக்கியம். இன்றைய சூழலில் உடல்நிலையை விட, மனநிலை மிக முக்கியம். பொருளாதாரம், அடுத்த மாச செலவு என எல்லா சுமைகளையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிடுங்கள். உடல்நிலை சரியானதும் அந்தப் போராட்டத்தை எல்லாம் கவனித்துக் கொள்ளலாம். மீண்டும் சொல்கிறேன். ‘நாம் உயிரோடிருக்கிறோம்’ என்பதே மிகப் பெரிய விசேஷம் தான்..

உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு: ‘பக்கத்துல இருந்து பார்த்துக்க முடியலையே’ ன்னு வருத்தப்படாதீர்கள். அதற்கு பதிலாக அவ்வப்போது அவர்களை அலைபேசியில் அழைத்து பேசி உற்சாகப்படுத்துங்கள். அவர்களின் மனநலத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.” நாங்கள் இருக்கிறோம். மீண்டு வருவாய்” என்ற நம்பிக்கையை எப்போதும் ஏற்படுத்துங்கள்.
ஏனெனில்,

“நம்பிக்கை.. அதானே எல்லாம்♥️”

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader