IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உருட்டுக்கட்டையால் மனைவியை அடித்துக்கொன்ற விசைத்தறி உரிமையாளர் தற்கொலை முயற்சி

56

 

ஈரோட்டில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியைக் உருட்டுக் கட்டையால் அடித்து கொன்ற விசைத்தறி உரிமையாளர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

ஈரோடு பழையபாளையம் அன்னை நகரைச் சேர்ந்தவர் சுந்தரம் (64). விசைத்தறி உரிமையாளரான இவரது மனைவி ஜமுனா ராணி(55) இவர்களது மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சுந்தரம் மற்றும் ஜமுனா ராணிக்கு இடையே குடும்பப் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி சண்டை போடுவார்களாம்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சுந்தரம், உருட்டு கட்டையால் மனைவி ஜமுனாராணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜமுனாராணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாகியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரம், இது பற்றி வெளியூரில் உள்ள தனது மகனுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதைகேட்டு பதறிய அவரது மகன் இது தொடர்பாக ஈரோடு சூரம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஜமுனாராணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே போலீசாரை பார்த்ததும் பயந்து போன சுந்தரம் கத்தியால் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸார் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Erode #family #issue #wife #murder