IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வெளிநாட்டு பயண குஷி! போறப்போக்குல ஸ்டாலினை போட்டுத் தாக்கிய எடப்பாடி!!

4

வெளிநாட்டு பயணத்தைத் தொடங்கியிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக தாக்கிப் பேசினார்.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 நாள் அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்கிறார். இன்று காலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மருத்துவ மேம்பாடு குறித்த பணிகளை குறித்த கருத்தரங்கில் பங்கேற்க உள்ளார். மேலும் அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். முதல்வருடன் அமைச்சர்கள் விஜய பாஸ்கர், ஆர்பி உதயக்குமார், ஆகியோரும் செல்கிறார்கள்.

இங்கிலாந்தில் இருந்து செப்டம்பர் 1ம்தேதி அன்று அமெரிக்கா புறப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நியூயார்க் நகருக்கு செப்டம்பர் 2ம்தேதி சென்றடைகிறார். அங்கு அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளை சந்திக்கிறார். அத்துடன் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து முதல்வர் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் இருந்து செப்டம்பர் 7ம் தேதி புறப்படும் முதல்வர் துபாய் சென்று அங்கு செப்டம்பர் 8 மற்றும் 9ம்தேதிகளில் தொழில் முனைவோரை சந்திக்கும் நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து 10ம்தேதி தமிழ்நாடு திரும்புகிறார் முதல்வர் பழனிச்சாமி. முதல்வரின் பயணத்திட்டம் அதிகாரப்பூர்வமாக அரசு சார்பி அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக முதல்வர் பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, தனது வெளிநாடு பயணம் குறித்து தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு அதிகமான முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அதற்காகத்தான் இந்த பயணம். நான் நேரில் சென்று அழைத்தால்தான் தமிழகத்தில் தொழில் தொடங்க தொழிலதிபர்கள் முன்வருவார்கள். நான் ஒன்றும் பெரிய தொழிலதிபர் இல்லை, சாதாரண விவசாயி. தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும், பொருளாதரம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான் இந்த பயணம், என்றார்.


வெளிநாட்டுப் பயணம் பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்திருப்பது குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்கிறார். அவர் எதற்காக அடிக்கடி வெளிநாட்டுக்குச் செல்கிறார்? அவர் அடிக்கடி வெளிநாடு செல்வதன் மர்மம் என்ன? அவர் வெளிநாடு செல்வதற்கான காரணத்தை இதுவரை சொன்னதே இல்லை. ஆனால், நான் வெளிநாடு செல்வதை மட்டும் கொச்சைப் படுத்திப் பேசுகிறார். ஸ்டாலின். அரசுமுறைப் பயணத்தை சொந்த பயணம் என சொல்வது தவறான கருத்து, என்று கூறினார்.