IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பொருளாதார பின்னடைவால் உச்சம் தொட்ட தங்கத்தின் மதிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தங்கத்தின் போக்கு குறித்து நிபுணர்கள் வெளியிட்ட தகவல், முதலீட்டாளர்களையும், தங்க நகை வியாபாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தங்கத்தின் எதிர்மறையான சுழற்சி முடிந்துவிட்டது. தற்போது, கொரோனா தொற்று உலகம் முழுவதும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. உலகில் பெரும்பாலான நாடுகளில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கேள்விக்குறியாகியுள்ளது. 2020-ஆம் ஆண்டில் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரங்கள் மந்தநிலையில் இருக்கும் என்று பல முன்னணி ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன.

இந்நிலையில், பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமெரிக்க மத்திய வங்கி கடந்த ஒன்பது மாதங்களில் வட்டி விகிதங்களை 200 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இப்போது கிட்டத்தட்ட அது பூஜ்யம் நிலைக்கு வந்துவிட்டது. இவை அனைத்தும் தங்கம் எழுச்சி பெறுவதற்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது.

இப்போது தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கத்துடன் இருந்தாலும், உலகம் முழுவதும் பங்குச் சந்தை கடந்த 12 மாதங்களில் சரிவிலிருந்த போது, இந்தியாவில் தங்கத்தின் விலை 45-50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தங்கத்தின் விலை உச்சம் தொட்ட நிலையில், முதலீட்டுக்குத் தரமான பங்குகளை வாங்குவதா அல்லது தங்கத்தை வாங்குவதா என்ற கேள்வி பெரும்பாலான முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நல்ல முதலீட்டாளர்களாக இருக்கும்பட்சத்தில், இரண்டிலும் முதலீடு செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த நிச்சயமற்ற நேரத்தில் ஒவ்வொரு முதலீட்டாளரும் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, பங்கு முதலீட்டுத் தொகுப்பில் (போர்ட்ஃபோலியோ) உள்ள பலவீனமான பங்குகளை கழித்துக் கட்ட வேண்டும். தைரியமாக நஷ்டத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

நல்ல தரமான, வலுவான அடிப்படைகளைக் கொண்ட பங்குகள் இடம் பெறும் வகையில் முதலீட்டுத் தொகுப்பை மாற்றி அமைக்க வேண்டும். இரண்டாவதாக, முதலீட்டுக்கான மொத்தத் தொகையில், தங்கத்திற்கு 10-15 சதவீதத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

பல ஆண்டுகளாக பொருளாதாரக் கண்ணோட்டத்துக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித இயக்கத்துக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பை தங்கம் காட்டியுள்ளது. எப்போதெல்லாம் பொருளாதாரப் பின்னடைவு, மந்தநிலை, நிச்சயமற்ற தன்மை நிலவுகிறதோ, அப்போதெல்லாம் தங்கம் உச்சம் தொட்டுள்ளது. இப்போதும் கொரோனாவால் உலக அளவில் அது போன்ற இக்கட்டான சூழ்நிலை தொற்றிக் கொண்டுள்ளது.

2001 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான 11 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 700 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. ஆனால், 2012 முதல் 2018 வரையிலான 6 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கீழே சென்றது. இந்நிலையில், அடுத்த காளையின் ஆதிக்கம் 2019-இல் தொடங்கி பல ஆண்டுகள் தொடர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தற்போது கூறி வருகின்றனர். பத்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் 500 சதவீதம் லாபத்தை தங்கத்தால் வழங்க முடியும் என்கின்றனர்.

சமீப காலமாக எக்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் எனப்படும் தங்கம் ஈடிஎஃப் திட்டங்கள் மீது முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருவதைப் பார்த்தால், தங்கத்தை ஒரு முதலீட்டுத் தொகுப்பாக பார்க்கத் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது.

இதற்கிடையே, உலகத் தங்க கவுன்சிலின் இணையதளத்தில் கிடைக்கும் புள்ளி விவரத் தகவல்கள் நம்மை ஆச்சரியத்துக் குள்ளாக்குகிறது. அதாவது, 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் கோல்டு ஈடிஎஃப் ஃபண்டுகளில் மொத்தம் 298 டன்கள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரலில் முதல் 17 நாள்களில் மட்டும் மேலும் 112 டன்கள் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் தேவைப்பாடு குறைந்திருந்தாலும், இதுவரை தங்கத்தின் விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. உலகம் ஒரு ஆபத்தான காலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. எனவே, தங்கத்தின் விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கவே வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader