IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கூட்டணியில் விரிசல்: அறிவாலயத்திற்கு படையெடுக்கும் காங். முன்னணியினர்

103

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் முயற்சியாக அறிவாலயத்திற்கு காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக கூட்டணி அமைத்து, பல தேர்தல்களை ஒன்றாக சந்தித்த திமுக., காங்கிரசுக்கு இடையே கடந்த சில தினங்களான திடீர் உரசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு போதிய இடங்களை ஒதுக்கவில்லை எனவும், கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை எனக்கூறி காங்கிரஸ் தலைவர் அழகிரி திடீர் அறிக்கையை வெளியிட்டார்.

இதன் எதிரொலியாக மறுநாள் நடைபெற்ற தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் பல இடங்களில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனால் காங்கிரஸ் மீது கடும் அதிருப்தி அடைந்த திமுக, டெல்லியில் சோனியா தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்து தனது எதிர்ப்பை காட்டியது.

இதனால் அவசரமாக டெல்லி சென்று சோனியாவை சந்தித்த அழகிரி, நானும் ஸ்டாலினும் இணைந்த கரங்கள் என்று சமாதான அறிக்கை வெளியிட்டாலும், திமுகவின் முன்னணி தலைவர்களான டி.ஆர்.பாலு, துரைமுருகன் போன்றோர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்ததுடன், வாக்கு வங்கி இல்லாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி சென்றாலும் கவலை இல்லை என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம், மோகன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் கூட்டணி குறித்து தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். இதனால் திமுக. காங்கிரஸ் கூட்டணியில் உரிசல் அதிகரிக்க தொடங்கியது.

இதற்கிடையே டெல்லி தலைமையோ திமுக கூட்டணியை விரும்புவதால் மு.க.ஸ்டாலினை சந்தித்து சமாதானபடுத்துப்படும் தமிழக காங்கிரசாருக்கு அறிவுறுத்தியதுடன், இனி யாரும் கூட்;டணி குறித்து கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டாம் எனவும் தடை விதித்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து இன்று காலை புதுச்சேரி முதல்வரும், மு.க.ஸ்டாலினிடம் நம்பிக்கையை பெற்றவருமான நாராயணசாமி சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது தங்களது கட்சியினர் நடந்து கொண்ட விதம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், டெல்லி தலைமை கூட்டணியை விரும்பும் விவரத்தையும் எடுத்து கூறியதாக தெரிகிறது. இதே போல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முன்னணியினரும் இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திமுக. காங்கிரஸ் கூட்டணி முறிந்து விடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னணியினர் அடுத்தடுத்து அறிவாலயத்திற்கு படையெடுப்பது நிச்சயம் கூட்டணியை பலப்படுத்தும் என்கின்றனர் அடிமட்ட தொண்டர்கள்.