IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கலைஞர்களைப் படைக்கும் மதுரை நகைச்சுவை மன்றம்

Get real time updates directly on you device, subscribe now.

‘குன்றம் ‘ என்றால் நம் நினைவுக்கு வருபவர் முருகன். ‘மன்றம் ‘ என்றால் நம் மனதில் நிற்பது ‘ மதுரை நகைச்சுவை மன்றம் ‘. மல்லிகைப் பூ மனசுக்குச் சொந்தக்காரர்களான மதுரை மக்களைத் தொடர்ந்து 25 ஆண்டுகளாகச் சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்து ‘ வெள்ளி விழா ‘ கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது மதுரை நகைச்சுவை மன்றம்.

எத்தனையோ மன்றங்கள் அவ்வப்போது தோன்றினாலும் , அவை நெடும் பயணத்திற்குச் செல்லுமா ? மக்கள் மனங்களை வெல்லுமா என்பது வினாக்குறி . தொடங்கிய நாள் முதல் இன்றுவரை தொய்வில்லாது , தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் மதுரை நகைச்சுவை மன்றம் ஒரு வியப்புக்குறி.

சிரிக்க மறந்ததால் , மறுத்ததால் இன்று நம் வாழ்நாள் குறைந்து கொண்டு வருகிறது. நம் மனங்கள் மருத்துவமனை நோக்கி அலை பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. சிரித்தால் மருத்துவமனைக்குச் செல்லத் தேவையில்லை. ஆனால் அந்தச் சிரிப்பு மன்றத்தையே தன் மருத்துவமனையில் நிறுவி , இலவசமாய் நோயை விரட்டிக் கொண்டிருக்கும் மகத்தான மருத்துவர் .யார் அவர் ? நகைச்சுவை மன்றம் உருவானது எப்படி ? 25 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும் நாம்.

பசுமை போர்த்திய ஊரான சோழவந்தானில் பிறந்து , மதுரையின் பெருமை சொல்லும் தியாகராசர் கல்லூரியில் பயின்று , பின்னாளில் தான் படித்த கல்லூரியிலேயே தமிழ்ப்பேராசிரியாகப் பணிபுரிந்து , உலகமெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களின் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் உவகைப்புலவர் , கலைமாமணி பேரா.கு.ஞானசம்பந்தன் , மதுரை மாநகரில் ஒரு மேடையில் நகைச்சுவைப் பேச்சினைக் கேட்டு , மெய்மறந்து போனார் மக்கள் மருத்துவர் டாக்டர்.சேதுராமன் அவர்கள். அதனால் விளைந்தது மதுரை நகைச்சுவை மன்றம்.

1991 ஆம் ஆண்டு மீனாட்சிமிஷன் மருத்துவமனை நிறுவனர் , மக்கள் மருத்துவர் , டாக்டர்.ந.சேதுராமன் அவர்களால் தொடங்கப்பட்ட இம்மன்றம் , மீனாட்சிமிஷன் மருத்துவமனையின் 6-வது தளத்தில் குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் 25 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தழிழ்த்துறைப் பேராசிரியர் டாக்டர்.விஜய வேணு கோபால் , அவரைத் தொடர்ந்து ‘மனிதத்தேனீ ‘ இரா.சொக்கலிங்கம் ஆகியோர் மன்றத் தலைவர்களாகச் சில ஆண்டுகள் இருந்தனர்.

கலைமாமணி பேரா.டாக்டர்.கு.ஞானசம்பந்தன் தொடக்க காலத்தில் செயலராகவும் , கடந்த 15 ஆண்டுகளாகத் தலைவர் மற்றும் செயலராகவும் கொண்டு , இம்மன்றம் சிறப்புடனும் , புகழுடனும் மதுரையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. மன்றம் தொடங்கிய மறுஆண்டு முதல் திண்டுக்கல் , அருப்புக்கோட்டை , திருநெல்வேலி , இராமநாதபுரம் , சிவகங்கை , திருச்சி , கோவை , திருப்பூர் , ஈரோடு எனத்தொடங்கி நாகர்கோவில் முதல் சென்னை வரை 17 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களைப் பேரா.கு.ஞானசம்பந்தன் உருவாக்கினார்.

எதைச் சொல்லியும் , எப்படிச் சொல்லியும் சிரிக்க வைக்கலாமா என்றால் , இல்லை என்கிறார் பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்கள் . நகைச்சுவை சொல்பவர்களுக்கு மூன்று விதிகளை உருவாக்கி , அந்தக் கொள்கையில் தடம்புரளாது பயணித்துக் கொண்டிருக்கிறது மதுரை நகைச்சுவை மன்றம்.

1 ) ஆபாசமில்லாமலும் ,
2 ) அமங்கலமில்லாமலும் ,
3 ) பிறர்மனம் நோகப் பேசாமலும் நகைச்சுவை சொல்ல வேண்டும் என்பது இம்மன்றத்தின் உறுதியான நடைமுறை.

மழலை மொழியில் குழந்தைகள் நகைச்சுவை சொல்வதைக் கேட்கும் போது , நம்மனம் அதிலே ஒன்றிப் போகும். இங்கு குழந்தைகளாக வந்து மேடையேறி நகைச்சுவை சொன்னவர்கள் , இன்று மணமேடை கண்டு அவர்களது குழந்தைகளை மேடையேற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் மட்டுமன்றி இளைஞர்களும் , முதியவர்களும் , பெண்களும் நகைச்சுவை சொல்லி கலகலக்க வைக்கிறார்கள்.

சிறந்த நகைச்சுவை சொல்லும் குழந்தைகள் மூவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மேடையிலேயே பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேடையேறி மைக் பிடித்து பெயரைச் சொன்னாலே போதும். அந்தக் குழந்தைகளுக்கும் பரிசு உண்டு.

ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் ஆண்டு விழாவில் ‘ வளரும் கலைஞர் ‘ என்ற விருதும் , சமூகத்தில் சாதனைகள் பல நிகழ்த்தி வரும் நபர்களைத் தேர்ந்தெடுத்து ‘ சாதனையாளர் ‘ என்ற விருதும் ( 2011 ஆம் ஆண்டு எனது பசுமைப் பணிக்கு ‘ சிறந்த விடுதிக் காப்பாளர் விருது ‘ கிடைத்ததை மகிழ்வோடு பதிவு செய்கிறேன் ) , மூத்த நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ‘ பொற்கிழி ‘ யும் வழங்கி நல்ல செயல்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது மதுரை நகைச்சுவை மன்றம்.

சிரிக்கவும் , சிந்திக்கவும் மட்டுமன்றி , பலரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒளியையும் ஏற்றி வைத்திருக்கிறது இம்மன்றம்.இன்று சின்னத் திரைகளிலும் , வெள்ளித் திரைகளிலும் மின்னிக் கொண்டிருக்கும் காமெடி பாய்ஸ் ரோபோ சங்கர் , வெங்கடேஷ் , சசிக்குமார் , கிறிஸ்டோபர் , பாலமுருகன் , சுப்பிரமணி , மதுரை ராமர் , முத்து , அரவிந்த் , அருப்புக்கோட்டை மாரிமுத்து , மின்னல் பிரியன் போன்றோர் இம்மன்றத்தின் மூலம் வளர்நதவர்களே !

‘ சிரிப்பு ‘ என்ற இதழ் இம்மன்றத்தின் சார்பில் சில ஆண்டுகள் வெளி வந்தது. கவிப்பேரரசு வைரமுத்து . பேரா.கண.சிற்சபேசன் , பேரா.நமச்சிவாயம் , தமிழறிஞர் சாலமன் பாப்பையா , தென்கச்சி.கோ.சுவாமிநாதன் , திருவாரூர்.சண்முகவடிவேல் , இளசை சுந்தரம் , நல்லறிஞர்.இறையன்பு இ.ஆ.ப.போன்ற பெருமக்கள் ஆண்டு விழாக்களில் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளனர்.

திரைத்துறையைச் சார்ந்த.புகழ்பெற்ற நகைச்சுவையாளர்களான பழம்பெரும் நடிகர் .வி.கே.இராமசாமி , ஆச்சி மனோரமா , குமாரி சச்சு , நடிகர் செந்தில் , எஸ.வி.சேகர் , யூகி சேது , இயக்குநர் மௌலி , ரமேஷ் கண்ணா , பாண்டியராஜன் , மனோபாலா , படவா கோபி , தாமு , சார்லி , டெல்லி கணேஷ் , மயில்சாமி ஆகியோர் பங்கேற்று சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார்கள்.

25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் அமைச்சர். மாண்புமிகு. திரு.செல்லூர் ராஜூ , வணக்கத்திற்குரிய மதுரை மேயர் திரு. இராஜன் செல்லப்பா மற்றும் அவரது குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலிருந்து இராஜா முத்தையா மன்றம் வரையிலான ஊர்வலம் நடைபெற்றது. மக்கள் மருத்துவர் சேதுராமன் , நகைச்சுவை ஞானி ஞானசம்பந்தன் என அனைவரும் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்ததோடு நடந்தும் வந்தனர்.

அவசர உலகில் மகிழ்ச்சியை இழந்து , கவலைகளில் விழுந்து , தன்னைச்சுற்றி சிறு வட்டத்தை உருவாக்கி அதற்குள் அமர்ந்திருப்பவர்கள் , சிரித்து வாழ , பிறர் மனங்களையும் ஆள ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று காலை 10.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். கவலைகளோடு வருபவர்கள் கலகலவென சிரித்துச் செல்லலாம்.

தங்கள் குழந்தைகளுக்கான அரங்கமாகவும் இம்மன்றம் இருக்கும் . எதிர்காலத்தில் பல கலைஞர்களை உருவாக்கும் மன்றம் , மதுரை உள்ளளவும் நம் மனங்களில் இருக்கும். .வாருங்கள் சிரிப்போம். மகிழ்வாய் இருப்போம் !

மு.மகேந்திர பாபு.
தமிழாசிரியர் , இளமனூர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader