IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பாதியிலேயே கைவிடப்படுகிறதா கட்டுமானத்துறை!

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா தொற்று பரவலின் ஒட்டுமொத்தத் தாக்கத்தால் கட்டுமானத் துறை தினந்தோறும் ரூ.30,000 கோடி இழப்பை எதிர்கொண்டு வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதித் தணிக்கை, வரி மற்றும் ஆலோசனை ஆகிய மூன்று விதமான சேவைகளை வழங்கி வரும் கே.பி.எம்.ஜி. (klynveld peat manwick geerdeler) நிறுவனத்தின் பகுப்பாய்வுப் புள்ளிவிவரத் தகவலின் மூலம் இது தெரிய வந்துள்ளது. மேலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கட்டுமானம் தொடர்பான திட்டங்களில் முதலீடு 13 முதல் 30 சதவீதம் வரை குறையும் என்றும், இது வேலைவாய்ப்பை பெருமளவு பாதிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமானத் துறை பெருமளவில் உள்கட்டமைப்புத் திட்டங்களால் இயக்கப்படுகிறது. மேலும், தற்போதைய இக்கட்டான, நிச்சயமற்ற எதிர்காலம், மோசமான வணிகம், நுகர்வோர் உணர்வுகள், வருமானம் இழப்பு மற்றும் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக அரசு நிதிகள் திசை திருப்புதல் ஆகியவற்றால் கட்டுமானத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பும் 11 முதல் 25 சதவீதம் வரை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானத் தொழிலில்தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கொரோனா பொது முடக்கத்துக்கு முன்பு, நாடு முழுவதும் சுமார் 20,000 கட்டுமானத் திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வந்தன. இந்தத் திட்டங்களில் சுமார் 85 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால், கொரோனா தாக்கத்துக்குப் பிறகு பயம் காரணமாக குறைவான தளங்களில் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான திட்டங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 25 முதல் நாடு தழுவிய பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக பணிகள் நடைபெறவில்லை. இதனால், தொழிலாளர்களில் பலர் வெளியேறி தங்கள் கிராமங்களுக்கு இடம் பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். இதுவரை பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்களில் சுமார் 6-7 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு நடந்து சென்றதாகவும், சுமார் 10 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் சிக்கியுள்ளதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த சில நாள்களாக பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் ரயில்கள் மூலம் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்தப் பாதிப்பை அறியும் வகையில், ஒரு பகுப்பாய்வை கேபிஎம்ஜி நிறுவனம் நடத்தியது.

ஆய்வில் 30-க்கும் மேற்பட்ட கட்டுமானத் துறை வல்லுநர்கள் பங்கேற்றனர். வரும் நாள்களில் திறன் படைத்த தொழிலாளர் களுக்கான சம்பளம் 20-25 சதவீதம், பாதி அளவு திறன் படைத்த மற்றும் திறனற்ற தொழிலாளர்களுக்கான சம்பளம் 10-15 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தத் திட்டங்கள் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை தாமதமாகவும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் காரணமாக கட்டுமானப் பணியில் தாமதம் ஏற்படுவதால், திட்டங்களுக்கு பெறப்பட்ட கடன்களுக்கு கூடுதல் வட்டி செலவு ஏற்படும். இது டெவலப்பர்கள் அல்லது ஒப்பந்ததாரர்களுக்கு தலைவலியைக் கொடுக்கும். தற்போது பொது முடக்கம் மே 31-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சமூக இடைவெளி, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை நடைமுறைப் படுத்த வேண்டியுள்ளதால், குறுகிய காலத்தில் திட்டச் செலவும் வெகுவாக அதிகரிக்கும். சிறப்பு உபகரணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் சிறப்புப் பொருள்களைச் சார்ந்துள்ள திட்டங்கள் பெரும்பாலானவை விநியோக பிரச்னை காரணமாக இடையூறுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இது ஒட்டுமொத்த துறையையும் பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கட்டுமானத் துறையை வீழ்ச்சியில் இருந்து உயிர்ப்பிக்கும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி அண்மையில் பல்வேறு பரிந்துரைகளைகளை வழங்கியது. கட்டுமானத் திட்டங்களுக்கான கடன்களுக்கு வட்டிக் குறைப்புகளை மேற்கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள திட்டங்களை அனுமதிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்காக செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் நிறைவடைவதை விரைவுபடுத்துவதற்கு ஒரு முறை நிதியை உருவாக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

* கட்டுமானத் துறையில் முதலீடு 13-30 சதவீதம் குறைவதற்கு வாய்ப்பு.

* கட்டுமானத் திட்டங்களில் 85 லட்சம் தொழிலாளர்கள்.

* வேலைவாய்ப்பு 11 முதல் 25 சதவீதம் வரை குறைய வாய்ப்பு

* செயல்பாட்டில் இருந்த 20,000 கட்டுமானத் திட்டங்களில் பாதி அளவு நிறுத்திவைப்பு.

* சொந்த ஊர்களுக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதில் சிக்கல்.

* திட்டங்கள் குறைந்தபட்சம் இரண்டு – மூன்று மாதங்கள் வரை தாமதமாகும்.

* திறன்படைத்த தொழிலாளர்களின் சம்பளம் 20-25 சதவீதம் உயரும்.

* பாதி அளவு திறன் படைத்த மற்றும் திறனற்ற தொழிலாளர்களுக்கான சம்பளம் 10-15 சதவீதம் உயரும்.

நாடு தழுவிய பொது முடக்கம் காரணமாக தொழிலாளர்களில் கணிசமானோர் தங்களது கிராமங்களுக்குத் திரும்பிவிட்டனர். மேலும், பலர் ஆங்காங்கே நிவாரண முகாம்களிலும், காலனிகளிலும் சிக்கியுள்ளனர். கிராமங்களுக்குச் சென்றுள்ள தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அழைத்து வருவது ஒப்பந்ததாரர்கள், டெவலப்பர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், தச்சர்கள், வெல்டர்கள், ஃபிட்டர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீசியன்கள் உள்ளிட்ட திறன் படைத்த தொழிலாளர்கள் கூடுதலாக 20-25 சதவீதத்திற்கும் மேலான ஊதியத்தைக் கோரலாம்.

பகுதி அளவு திறன் படைத்த மற்றும் திறனற்ற தொழிலாளர்கள் கூடுதலாக 10-15 சதவீதம் ஊதிய அதிகரிப்பைக் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், தற்போதைய நிலையில் கட்டுமானத் துறை தினந் தோறும் ரூ.30,000 கோடி இழப்பை சந்தித்து வருகிறது. பொது முடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த இழப்பு மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இழப்பு பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே நிதர்சனம்…!

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader