IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

குழந்தை வளர்ப்பில் உள்ள சந்தோஷங்கள்!

Get real time updates directly on you device, subscribe now.

கோடிக்கணக்கான கற்பனைகள், லட்சக் கணக்கான முயற்சிகள், ஆயிரக்கணக்கான தோல்விகள் இருந்தாலும் ஒரு சில நிஜங்களுடன் நாம் வாழ்கின்ற இந்த வாழ்வுக்கு பெயர்தான் வாழ்க்கை. தாயின் கருவிலேயே குழந்தை, தன் உணர்வுகளை உணர ஆரம்பித்து விடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது. குழந்தைகளை நல்ல மனநிலையோடும், நற்சிந்தனையோடும் வைத்திருக்க வேண்டும் என்பதே பெற்ற வயிறுகளின் தவிப்பு. அறிவிலும், உடல் நலத்திலும் ஆகச் சிறந்த வாரிசாக தங்கள் குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் பெரிதும் போராடுகிறார்கள்.

‘ஐந்தில் வளையாதது’ என்பதுபோல் மழலையாக இருக்கும்போதே ஊட்டமான உணவு, ஆரோக்கியமான சூழல், உற்சாகமான மனநிலை, நல்ல பழக்க வழக்கங்கள் எனக் கற்றுக் கொடுக்காவிட்டால், வளர்ந்த பிறகு திருத்துவது ரொம்பவே சிரமமான காரியம்.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” & என்றார் பாரதியார். நான் பெண் விடுதலை பற்றி எழுத விரும்பவில்லை. பெண்களுக்கு என்றோ விடுதலை கிடைத்து விட்டது. அதை பெண்கள்தான் உணரவில்லை என்பேன் நான். ஒரு பெண், ஆண் மகனுக்கு தாய் ஆகிறாள். ஆனால் அன்றும்; இன்றும் பெண்கள் தன்னுடைய குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை சொல்லித்தரவில்லை என்பதுதான் நிஜம். உலகம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் மாமியார் & மருமகள் சண்டைகள் ஒய்வதில்லை. குடும்பம் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன? என்று ஒரு தாய்தான், தன் மகனுக்கு & மகளுக்குச் சொல்லி தர வேண்டும்.

அன்று பெண்கள் அடிமைகளாக இருந்தார்கள். இன்று தொலைக்காட்சி, செல்போன், இணையதளம் என உலகையே தன் கைக்குள் வைத்திருக்கிறார்கள். சற்று சிந்தித்து பாருங்கள் சகோதரிகளே. உங்களை நீங்களே கேட்டு பாருங்கள். இன்று நம் நாடு எங்கு போகிறது? நாடெங்கும் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணமும் பெண்கள்தான். தன்னுடைய மனைவியை தவிர, மற்ற அனைத்து பெண்களையும் தாயாக, சகோதரியாக நினைக்க வேண்டும் என்று ஓவ்வொரு தாயும், தன் மகனுக்குச் சொல்லி கொடுத்து இருந்தால், இன்று கற்பழிப்பு என்று ஒன்று இருந்திருக்காது. வாழ்க்கை என்பது ஒரு அழகான வடிவம் அதை நாம்தான் சரிவர அமைக்க வேண்டும். இன்றே தீவிரமாக நாம் செயல்பட வேண்டும். மாற்றங்கள் ஒன்றே உலகில் மாறாதவை. எந்த ஒரு படைப்பும் அதன் ஆரம்ப நிலையிலேயே இல்லாமல் அடுத்த நிலைக்கு மாற்றி அமைவதே பரிணாமம். அது தேவையான நேரத்தில், தேவையான இடத்தில் நிகழ வேண்டும்.

பொருளாதார தேவைக்காக இன்றைய பெற்றோர்கள் பணிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு சரியான அன்பும், பராமரிப்பும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பணம் சம்பாதித்தால் போதும் குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுத்துவிடலாம் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர். இதுபோன்ற தவறுகளை அதிகமான பெற்றோர்கள் செய்கின்றனர். ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு மட்டுமே. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடுவார்கள். மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக வைத்திருக்க வேண்டும்.

குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது. ஒரே மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது? என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும். குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.

தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான், என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும். பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது. வீட்டின் சூழ்நிலையை புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. ‘பாக்கெட் மணி” கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.

பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்து விடும். பிரச்சினையின் மூலத்தையும் அதற்கான தீர்வினையும் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும்.

எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை புரிந்து கொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக் கொடுக்கவும் தவறிவிடக் கூடாது. கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது. குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக் கொடுங்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று கூறுகின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

என் குழந்தை படிப்பில் சுட்டி, விளையாட்டிலும் படுசுட்டி என்று இன்றைய பெற்றோர்கள் பெருமை தட்டிக் கொள்கிறார்கள் ஆனால், எந்த துறையில் படுசுட்டியாக வருகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதில்லை. அதை எப்படி கண்டுபிடிப்பது?

சில குழந்தைகள் கையில் பேனா, குச்சி போன்ற ஏதாவது ஒரு எழுதுபொருள் கிடைத்துவிட்டால் சிலேட்டிலோ அல்லது தாளிலோ கிறுக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கிறது என்பதை அவர்களது பெற்றோர்கள் தெரிந்து கொண்டு அந்த துறையில் அவர்களை ஊக்கப்படுத்தலாம். கிறுக்கிக் கிறுக்கி வரையும் போது ஓவியத்திறமை வெளிப்படும். இதைத்தான் சித்திரமும் கைப்பழக்கம என்று கூறுவார்கள்.

அதேபோல் சிலருக்கு பாடுவதில் மிகவும் ஆர்வம் இருக்கும். அவர்களுக்கு பிடித்த பாடல் எங்கேயாவது கேட்டுவிட்டால், அதே ராகத்துடனே இவர்களும் சேர்ந்து பாட ஆரம்பித்து விடுவர். மிமிக்ரி, நடனம், நடிப்பு, இசை, தையல், விளையாட்டு, பேச்சுக்கலை, விண்வெளி ஆராய்ச்சி, இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி, சமூக சேவை என்று அவர்களுக்கு எந்தெந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை அவர்களது செயல்பாடுகளை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.

உங்கள் குழந்தைகளின் ஆர்வம் எந்த துறையில் உள்ளது என்பது பற்றி நீங்களே உணர்ந்தாலும்கூட, குழந்தைக்கு அதில் மிகுந்த ஆர்வம் உள்ளதா என்று அவர்களிடமே கேட்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எந்தவிதக் கட்டாயத்தின் பேரிலும், மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளின் திறமையை ஒப்பிட்டு அவர்கள் முன் குறை சொல்லி விடாதீர்கள்.

பக்கத்து வீட்டு குழந்தைகள் பாடுவதில் கில்லாடியாக இருக்கலாம். உங்கள் குழந்தைக்கு பாடுவது சிரமமான காரியமாக இருக்கும். அதற்காக அந்த குழந்தையைப் போல் உங்கள் குழந்தையையும் பாட்டு கிளாசில் சேர்த்து அவர்களை சிரமப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைக்கு எதில் ஆர்வம் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு அவர்கள் விரும்பும் துறையில் சேர்த்து விடுங்கள்.

உங்கள் குழந்தை திறமையை வெளிப்படுத்தி பரிசு வாங்கி வரும்போது அவர்களை பாராட்டத் தயங்காதீர்கள். அதேபோல் தோல்வியடைந்தாலும் தட்டிக்கொடுத்து அடுத்த முறை நீதான் வெற்றி பெறுவாய் என்று ஆறுதலான வார்த்தைகளைக் கூறி உற்சாகப்படுத்துங்கள். வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு என்று அவ்வப்போது உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். தோல்விகள்தான் வெற்றியின் படிக்கற்கள். தோல்வியில் இருந்துதான் வெற்றிக்கான பாடம் கற்க முடியும் என்றும் எடுத்துக் கூறி உங்கள் குழந்தையின் மனதை இளமையிலேயே திடப்படுத்துங்கள்.

தன்னம்பிக்கையையும், வீரத்தையும் ஊட்டி வளர்க்கும் விதத்தில், ஜான்சி ராணி லெட்சுமிபாய், வீரசிவாஜி, நெப்போலியன், மாவீரன் அலெக்சாண்டர் போன்றவர்களின் வீரத்தைச் சுட்டிக்காட்டும் சம்பவங்களை கூறுங்கள். உங்கள் குழந்தைகளிடம் உள்ள திறமை சார்ந்த தகவல்களையும், அந்த துறையில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களையும் அவ்வப்போது எடுத்துக் கூறுங்கள். வெற்றி உங்கள் குழந்தையின் கைகளை நிச்சயம் தேடி வரும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader