IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ரோந்து வாகனத்தில் கர்ப்பிணிக்கு உதவிய பெண் இன்ஸ்பெக்டர்

14


நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை ரோந்து வாகனத்தில் அழைத்துச் சென்ற உதவிய பெண் இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


சென்னை தலைமைய செயலகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர் நேற்றிரவு டிரைவர் செல்வராஜ் மற்றும் போலீஸ்காரர் ராஜசேகருடன் அதிகாலை 2 மணியளவில் போலீஸ் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.


ரோந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் பெண் ஒருவர் அழுது கொண்டிருப்பதை கவனித்த ராஜேஸ்வரி, வாகனத்தை நிறுத்துமாறு சொன்னார்.

அருகில் சென்று அந்த பெண்ணிடம் விசாரித்த போது என் பெயர் சகுந்தலா(50) என்றும் , எனது மகள் ஷீலாவிற்கு (30) பனிக்குடம் உடைந்து பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறாள். இந்நேரம் உதவிக்கு வர யாரும் இல்லை என்று அழுதவாறு கூறினார்.


இதைக்கேட்ட ராஜேஸ்வரி , ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையில் உள்ள ஷீலாவின் வீட்டிற்கு சென்று 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தார். ஆனால் ஷீலாவின் வீடு குறுகிய சந்து என்பதால் ஆம்புலன்ஸால் வரமுடியவில்லை. இதனால் வீட்டின் அருகே உள்ள பிரதான சாலையின் ஆம்புலன்ஸ் நின்றது.


இதையடுத்து ஷீலா இருக்கும் இடத்திற்கு விரைந்த ராஜேஸ்வரி, ஷீலாவை கை தாங்கலாக பிடித்து , மாடிப்படியிலிருந்து மெதுவாக கீழே அழைத்து வந்து தனது ரோந்து வாகனத்தில் அமரச் செய்தார். இதனைத் தொடர்ந்து ரோந்து வானகத்திலிருந்து ஆம்புலன்ஸ் நிற்கும் பிரதான சாலைக்கு கர்ப்பிணி ஷீலாவை அழைத்து வந்து ஆம்புலன்ஸில் ஏற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


மருத்துவமனைக்கு சென்ற ஷீலாவிற்கு சில நிமிடங்களில் சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தக்க சமயத்தில் உதவிய பெண் இன்ஸ்பெக்டரை ஷீலா கண்ணீர் மல்க நன்றி கூறினார். நள்ளிரவில் உதவிய பெண் இன்ஸ்பெக்டரின் மனிதாபிமானத்தை பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.