IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சுட்டெரிக்கும் சூரியனை சமாளிக்க ஈ.சி.ஆர். ஜாலி டிரிப்

122


மே மாதம் முழுவதும் சுட்டெரிக்கும் சூரியனை எப்படி சமாளிப்பது என்று வியர்க்க விறுவிறுக்க ஒரு பக்கம் நம் மனது யோசித்துக் கொண்டிருந்தாலும், டீன்ஏஜ் பிள்ளைகளை வீட்டில் வைத்து எப்படி சமாளிப்பது என்ற கேள்வியே முதலில் எழுகிறது. அவர்களின் பலதரப்பட்ட சிந்தனைகளை சில மணித்துளி நேரம் ஒருமுகப்படுத்தலாம் வாருங்கள்.


கோடை விடுமுறை என்றதும் சிறு பிள்ளைகள் முதல் டீன்ஏஜ் பிள்ளைகள் வரை தோன்றும் முதல் எண்ணம், லீவுக்கு எங்கே போகலாம் என்பதுதான்.


பள்ளி விடுமுறை என்றவுடன் உங்கள் பெற்றோர் கிராமத்தில் இருக்கும் தாத்தா, பாட்டி தூரத்துச் சொந்தங்கள் வீடுகளுக்கு எல்லாம் போய் உறவைப் புதுப்பித்துக் கொண்டு ஆறு, அருவிகளில் குளித்துவிட்டு நகர்ப்புறங்களின் பரபரப்பை சற்றே குறைத்துக்கொண்டு வயல் வெளிகளில் சிறிது அமைதியை பெற்று திரும்பி வரவேண்டும் என்று திட்டம் போட்டு இருக்கலாம்.


எங்களின் முதல் ஓட்டும் அந்தத் திட்டத்துக்குத்தான். ஆனால், இப்போதுள்ள சூழலில் இது அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதால், சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் சில சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு உங்களுக்காக.

மாமல்லபுரம் – புதுச்சேரி


வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் மாமல்லபுரத்தையும் புதுச்சேரியையும் வியந்து பார்க்கிறார்கள். ஆனால், அருகில் இருப்பதாலோ என்னவோ நாம் அதனை ரொம்ப கண்டுகொள்வதில்லை. ஆனால், இந்த இடங்களில் செயல்படும் டூர் ஆப்பரேட்டர்ஸ் சிலர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் சில பிரத்யேகமான வகையில் ஊரைச் சுற்றி காண்பிக்கிறார்கள்.

பைசைக்கிள் டூர்


உடம்பை ஃபிட்டாகவும் சுறுசுறுப்பாகவும் வைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சைக்கிள் ஓட்டுவதை தவமாக செய்வார்கள். இதை நான்கு சுவர்களுக்குள் ஜிம்மில் செய்யாமல் ஒருநாள் வித்தியாசமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டு கிராமத்தின் அழகை சுற்றி பார்த்தால் என்ன?


இந்த எண்ணத்தில் ஏற்பட்டதுதான் மாமல்லபுரத்தைச் சுற்றி அமைந்த ‘பைசைக்கிள் டூர்’. அமைதியான சூழலை மெல்ல சைக்கிளை பெடல் செய்தவாறே ரசிப்பது ஒரு ஏகாந்தமான உணர்வு.


மாடுகளுடனும், மாட்டு வண்டிகளுடனும், தலையில் பானைகளை சுமந்து செல்லும் பெண்களுடனும் உரையாடிக்கொண்டே செல்வது கிராமங்களில் மட்டுமே சாத்தியம். இந்த டூரில் நாம் விரும்பினால் காய் கனி தோட்டம், நெல் வயல், கிராமத்தை சுற்றியுள்ள சின்னஞ்சிறு கோயில்கள் போன்ற இடங்களுக்கும் கூட்டிச் செல்வார்கள்.

Related Posts
1 of 350

சர்ஃபிங்


சென்னை அருகே உள்ள கோவளம் மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் சர்ஃப்பிங்-குக்கு என பிரத்யேகமான வகுப்புகள் நடத்தப்பட்டு பின்பு கடலில் சர்ஃப்ங் விளையாட அழைத்துச் செல்லப்படுகின்றனர்.


இந்தப் பயிற்சியில் கைதேர்ந்த நிபுணர்கள் குறிப்பிட்ட மணி நேரம் பயிற்சி அளித்து சர்ஃப்பிங் அழைத்துச் செல்கின்றனர். கடல் அலைகளுடன் தாவி குதித்து விளையாட ஆசையா? எடுங்கள் ஒரு சர்ஃப்-போர்டை!

ஸ்கூபா டைவிங்


ஸ்கூபா டைவிங் தற்போது சென்னையில் புதிய வரவேற்பை பெற்று வருகிறது. கடலுக்குள் சென்று புதிய உலகத்தை ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு இன்றியமையா அனுபவம்.


அமைதியான மற்றும் தெள்ளத் தெளிவான நீரோட்டம் கொண்ட கோவளம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் ஸ்கூபா டைவிங் நடத்தப்படுகின்றது. கைதேர்ந்த நிபுணர்களை கண்டறிந்து அதற்கேற்ற பயிற்சி மேற்கொண்டு ஸ்கூபா டைவிங் அனுபவம் பெறலாம்.

ஆஃ-ரோடு ஸ்போர்ட்ஸ் (ஈசிஆர் சாலை)


அக்டோபர் 2009 ஆம் ஆண்டு ஈசிஆர் சாலையில் துவக்கப்பட்டது ஆஃ-ரோடு ஸ்போர்ட்ஸ். ஆல் டெர்ரெயின் வெஹிகிள்ஸ் (ATV) என்று அழைக்கப்படும் அனைத்து வகை நிலப்பரப்புகளிலும் செல்லக் கூடிய வாகனங்களின் சாகச விளையாட்டுகளுக்கான தளம். இது சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.


ATV என்பது 4 சக்கரங்களில் ஓடும் காரைப் போல் காட்சியளிக்கும் பைக். மண் தரைகளில் ஓட்டுவதற்கு மிகவும் ஏதுவான வண்டி. த்ரில் ரைட் , பீச் ரைட், வூட்ஸ் ரைட் என பல வகையான ஜாலி ரைடுகளை நமக்கு விருந்தாக அளிக்கின்றனர்.


அது மட்டுமல்லாமல் கட்டுமர ரைட், ஜெட்ஸ்கி போன்ற தண்ணீர் விளையாட்டுகளையும் ஏற்பாடு செய்து தருகின்றனர்.