ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாணவரணியினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டை நம்பிதானே எனது மகளை அனுப்பி வைத்தோம். ஆனால் இறுதியில் இப்படி ஆகிடுச்சே என கண்ணீர் மல்க பாத்திமாவின் பெற்றோர்கள் இன்று கேரளாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்திறங்கினர். எங்களது மகள் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாத்திமாவின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்காக இன்று தமிழக முதல்வர் பழனிச்சாமியை நேரில் சந்திக்க உள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் முதலமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை (9 ஆம் தேதி) விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், மாணவியின் இறுதிச் சடங்குகள் முடிந்தது.
இதன் பின்னர், மாணவியின் செல்போனை ஆராய்ந்தபோது அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர்தான் காரணம் என மாணவி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். அந்த செல்போன் பதிவில், மேலும் இரண்டு பேராசிரியர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கேரள முதல்வரிடம் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் தமிழக முதல்வரும் பாத்திமாவின் தற்கொலை விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டார். சென்னை மாநகர கமிஷனர் விஸ்வநாதன் நேரிடையாகவே களத்தில் இறங்கி விசாரணையை தொடங்கினார்.
தற்போது பாத்திமா தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. தற்கொலைக்கு காரணமானதாக சொல்லப்படுபவர்கள் விசாரணை வளைத்திற்குள் வருவார்கள் என கூறப்படுகிறது.
பாத்திமாவின் பெற்றோர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, எங்கள் மகள் பாத்திமா உயிரிழக்க காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து தலைமை செயலகம் சென்று முதல்வரை சந்திக்க உள்ளதாகவும், அதற்கான அனுமதியையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#Chennai #IITStudents #FathimaLatheef #In4Net