திமுக அதிமுகவின் தரம் தாழ்ந்த டிஜிட்டல் யுத்தம்! இது எங்க போய் முடியுமோ தெரியலயே?

Get real time updates directly on you device, subscribe now.

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது பிரசரத்தை டிஜிட்டல் தளத்தில் இப்போதே தொடங்கி விட்டன. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் சமூக ஊடக மீம்ஸ் கிரியேட்டர்களையே மிஞ்சும் அளவுக்கு தரம் தாழ்ந்த வீடியோக்கள், இமேஜ்களை பகிர்ந்து வருகிறார்கள். இதெல்லாம் எங்கே போய் முடியுமோ என்று நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த பாராளும்ன்ற தேர்தலில் பிரதமர் மோடி டிஜிட்டல் பிரசாரத்தின் மூலம் தன்னை முன்னிலைப்படுத்தி வெற்றியும் பெற்றார். குறிப்பாக கவரும் வகையில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் ஏராளமான விளம்பரங்கள், பதிவுகள் பகிரப்பட்டன. இது பிரதமர் மோடிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் ரொம்பவே உதவிகரமாக இருந்தது. இதையடுத்து அதே பார்முலாவை மாநில கட்சிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் டிஜிட்டல் பிரசாரத்தில் இப்போதே களமிறங்கியுள்ளன. இருகட்சிகளும் தங்களது சாதனைகளை அதிக அளவில் பகிராமல் ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லி டிஜிட்டல் யுத்தத்தை தொடங்கியுள்ளன. அதுவும் சமூக ஊடக மீம்ஸ் கிரியேட்டர்களையே மிஞ்சும் அளவுக்கு தரம்தாழ்ந்த வார்த்தைகளுடன் கூடிய விளம்பரங்களையும், பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.

“என்ன சொல்லுறீங்க பழனிச்சாமி?” என்ற கேள்வியோடு வெளியான திமுகவின் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தரப்பும் “உழவன் மகன், உளறுவாயன் மகன்” என்று வீடியோ வெளியிட்டு சமூக ஊடகத்தை கலகலக்க வைக்கிறது.

இந்த டிஜிட்டல் யுத்தத்துக்காக இருபெரும் கட்சிகளும் பல்வேறு பெயர்களில் சமூக ஊடக கணக்குகளைத் தொடங்கியிருப்பதும், அந்த கணக்குகளை பணம் கொடுத்து ஸ்பான்சர் விளம்பரமாக்கி, அதிக அளவிலான பார்வையாளர்களை சென்றடைய வழிவகை செய்துள்ளனர். இதில் இரு கட்சிகளும் எதிர்பாராத ஹைலைட் என்னவென்றால் இந்த சோஷியல் மீடியா பக்கங்களில் வரும் கமெண்ட்கள்தான். கட்சி பாரபட்சமில்லாமல் இரு கட்சிகளையும் கழுவி ஊற்றியிருக்கிறார்கள் பயனர்கள்.


2001ம் ஆண்டில் திமுக தலைவராக இருந்த கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, “ஐயோ கொலை பண்றாங்க…” என்ற தழுதழுத்த குரலோடு கருணாநிதியை குண்டு கட்டாகத் தூக்கிச் செல்லும் வீடியோவை தங்களது தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பியது. அதே வீடியோவை 2006 தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி அனுதாப அலையில் ஓட்டு வாங்கி திமுக வென்றது வரலாறு. அதேகாலகட்டத்தில் அதிமுக ஆதரவு சேனலில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது எடுத்த வீடியோவை அநாகரிகமாக கிண்டலடித்து வெளியிட்டு அக்கட்சி தோல்வியடைந்ததும் வரலாறு. இதேப்போல 2016 தேர்தலிலும் திமுக வித்தியாசமான விளம்பரத்தை “என்னம்மா… இப்பிடி பண்றீங்களேம்மா..?” என்ற பஞ்ச் டயலாக்கோடு வெளியிட்டது. அந்த வரிசையில் இப்போது டிஜிட்டல் மூலம் “என்ன சொல்லுறீங்க பழனிச்சாமி?” என்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளது திமுக. அதிமுக வழக்கம்போல பதிலடி கொடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. இதே போல மக்கள் ஆட்சியா? குடும்ப ஆட்சியா? உழைப்பா? நடிப்பா? போன்ற கேள்விகளுடன் போஸ்டர்களும் அதிமுக தரப்பில் ஒட்டப்பட்டு வருகிறது.

அப்போதெல்லாம் தொலைக்காட்சி, பத்திரிகைகளிலேயே அதிக அளவில் விளம்பரங்கள் வெளியாயின. இதனால் பார்வையாளர்கள் தங்களது கருத்துக்களை சொல்ல வழியில்லை. ஆனால் இந்த முறை சமூக ஊடகங்களில் புஷ் அப் எனப்படும் ஸ்பான்சர்டு விளம்பரம் மூலம் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளதால் கட்சித் தொண்டர்களும், சோசியல் மீடியா பயனர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்து வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இரு கட்சிகளையும் கழுவிக் கழுவி ஊற்றி வருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 6 மாதம் இருக்கிறது. இப்போதே டிஜிட்டல் யுத்தம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. தரம் தாழ்ந்த பதிவுகளும், அதற்கான பதில்களும், எதிர்வினையும் பயங்கரமாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்த யுத்தம் எங்கே போய் முடியுமோ என்று நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More