12.1 C
Munich
Monday, October 3, 2022

பதினாறு செல்வங்கள் பற்றிய சிறப்பு கட்டுரை இது!

Must read

அந்த காலத்திலும் சரி; இந்த காலத்திலும் சரி… மணமக்களை வாழ்த்தும் பெரியவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்று வாழ்த்துவது வழக்கம். அந்த பதினாறு செல்வங்கள் பற்றிய சிறப்பு கட்டுரை இது.

கலையாத கல்வியும், குறையாத வயதும்,
ஓர் கபடு வராத நட்பும்.
குன்றாத வளமையும், குன்றாத இளமையும்
கழு பிணி இலாத உடலும்
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்
தடைகள் வராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும், ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரோடு கூட்டுக் கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே!
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி,
அருள்வாழி, அபிராமி!

கல்வி:

கல்வியைப் பற்றிப் பேசாத நூல்கள் இல்லை எனலாம். கல்வியால் உயர்ந்தவர் வாழ்வு கண்டு கண்ணால் பார்த்து வியக்கிறோம் அல்லவா? மகளிர் தினம் கொண்டாடும் இவ்வேளையில் பெண்கள் தங்கள் கல்வித் தகுதியை அதிகமாக்கி, நாம் செல்லும் இடமெல்லாம் சிறப்பைத் தேடி, தக்க வைத்துக் கொள்வோம்.

குறையாத வயது:

அழகு வயதைக் குறைத்துக் காட்டும் என்பது பழமொழி. அதே பழமொழி மற்றொரு கோணத்திலும் சிந்திக்கிறது. அதாவது, ராஜா மெச்சியவள் ரம்பை & காண்பவர் கண்ணே அழகின் அடித்தளம். வயது எப்படி குறையாமல் இருக்கும் என சந்தேகம் வருகிறது அல்லவா? என்றும் பதினாறாக இருக்க, மரவு ரீதியான உடல்வாகு ஒரு காரணம். என்றும் இளமையான மனம், ஒழுக்கமான வாழ்க்கை முறை, நேரத்திற்கு உணவு என நிறைய காரணங்களை சொல்ல முடியும்.

கவடு வராத நட்பு:

நட்பைக் கூட கற்பைப் போல் எண்ணுவேன் என்ற பாடல் வரிகள் தளபதி படத்தில் வரும். கண்ணன், குசேலர் நட்பின் பெருமை அனைவரும் அறிந்ததே. நட்புக்காக உயிரையும் கொடுங்கள் என்று பைபிள் கூறுகிறது. அதனால் நட்பை என்றென்றும் போற்ற வேண்டும்.

குன்றாத வளமை, குன்றாத இளமை, கழுபிணி இலாத உடல்:
வளமை என்பது செல்வ வளம், அதிகார பதவி, நல்ல மக்கள், பொன் & பொருட்கள், நிலங்கள் போன்ற பலவற்றைக் குறிக்கும். குன்றாத வளமை இருந்தால் குன்றாத இளமை வந்து விடும். இளமையாய் இருக்க காய கல்பம் தேவையில்லை. பக்குவப்பட்ட வாழ்க்கை முறையே போதும். வளமையும், இளமையும் இருந்தால் பிணி ஓடி விடும்.

சலியாத மனம்:

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க… என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய வைர வரிகளை நினைத்துக் கொள்ளுங்கள். துன்பமும், இன்பமும் இரயில் தண்டவாளங்கள் போலத்தான். தண்டவாளம் பிரிந்தால் ரயில் ஓடாது. அதுபோல இன்ப, துன்பத்தோடு இல்லாத வாழ்க்கை முழுமை அடையாது. சலியாத மனம் இருந்ததால் எவ்வகை துன்பமும் காணாமல் போய் விடும்.

அன்பு அகலாத மனைவி:
இல்லறம் நல்லறமாக சிறக்க, அன்பு எனும் வேலி இன்றியமையாததாகும். கணவன் & மனைவியிடத்தில் காட்டும் அன்பு, மனைவி & கணவனித்தில் காட்டும் அன்பு காதலைக் குறிக்க வேண்டும். குறுந்தொகையில் காதலுடன் கூடிய அன்பிற்கு எடுத்துக் காட்டாக, செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சந்தான் கலந்தனவே என்கிறார் புலவர். அதுபோலதான் அன்பு அகலாத மனைவியாக ஒவ்வொரு பெண்ணும் வாழ வேண்டும்.

தவறாத சந்தானமும்:
குழந்தைகள் இல்லாத உலகை கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. இவ்வுலகத்தின் நடமாடும் மலர்கள் குழந்தைகள்தான். அத்தகைய குழந்தைப்பேறு தவறிப்போகக் கூடாது.

தாழாத கீர்த்தி:

கீர்த்தி என்றால் புகழ்.
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பதென்று இல் &என்றான் வள்ளுவன். உயர்ந்த புகழைத் தவிர உலகில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைத்து நிற்க வல்லது வேறெதுவும் இல்லை என்பதுதான் வள்ளுவன் வாக்கு. புகழ் என்ற சொல்லுக்குப் பொருள் சேர்க்க வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? தேடிச் சேர்ப்பது புகழ் அல்ல; தானாக வருவதுதான் புகழ். அப்புகழ் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கர்மவீரர் காமராஜர், மேதகு மறைந்த அப்துல்கலாம் போன்றோரின் புகழ்தான் சிறந்த முன்னுதாரணம்.

மாறாத வார்த்தை:
தசரத மகாராஜா தான் கொடுத்த வரத்தை மீறாமல் காத்தார். அரிச்சந்திரா மகாராஜா தன் வார்த்தையில் சத்தியத்தை கடைபிடித்தார். காந்தியடிகள் தன் வாழ்க்கையில் மாறாத வார்த்தைக்கு கட்டுப்பட்டு சேவையாற்றினார். திருமணங்களில் அக்னி சாட்சியாக நிறைய வாக்குறுதிகள் தருகிறார் என்றால், அந்த வார்த்தை மாறாது மண வாழ்க்கைக்கு மணம் சேர்க்க வேண்டும்.

தடைகள் வராத கொடை:
கொடை கொடுப்பதில் தடை வரக் கூடாது. சுற்றம் தடுக்கலாம், தொழிலில் பிரச்னை வரலாம். இவையெதும் இல்லாமல் எப்போதும் செல்வ வளமையுடன், நல்ல மனம் கொண்ட சுற்றமும், தடையில்லா வரவும் அமைய இறைவன் அருள வேண்டும்.

தொலையாத நிதியம்:
நிதியை கையாளும் மேலாண்மை வேண்டும். இல்லையென்றால் செல்வம் நிலைக்க வழி இல்லாதுபோகும். ஆக செல்வம் தொலையாது இருக்க வேண்டும். சேமிப்பு வேண்டும். செல்வத்தை பாதுகாக்கத் தெரிய வேண்டும். இதுவரை இல்லையென்றாலும் இனி, தொலையாத நிதியத்தை பெறுங்கள்.

கோணாத கோல்:
உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் மழையை நோக்கி வாழ்கின்றன. அதுபோல் குடிமக்கள் அனைவரும் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர் என்பது வள்ளுவன் வாக்கு.

துன்பம் இல்லா வாழ்வு:
இன்பத்தை விரும்பியும், துன்பத்தை வெறுத்தும் கவலை அடைதல் கூடாது. இறைவனின் தாள் பணிந்து, துன்பம் இல்லாத வாழ்வு அடைய வேண்டும்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article