IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்திய அரசியலில் தனித்துவமான தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய்

Get real time updates directly on you device, subscribe now.

இந்திய அரசியலில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் முக்கியமான தலைவர்களில் ஒருவராகத் திகழ்பவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்.

வாஜ்பாய் கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயிக்கு டிசம்பர் 25, 1924 அன்று குவாலியரில் பிறந்தார். அவரது தாத்தா, பண்டிட் ஷியாம் லால் வாஜ்பாய், உத்தரப் பிரதேசத்தின் பாதேஷ்வர் என்ற அவரது பூர்வீக கிராமத்திலிருந்து குவாலியருக்கு குடியேறினார்.

தந்தை, கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயி, தனது சொந்த ஊரில் ஒரு கவிஞரும் பள்ளிக்கூட ஆசிரியரும் ஆவார். வாஜ்பாய் குவாலியரில் தனது ஆரம்ப பள்ளி படிப்பை முடித்தார். குவாலியரில் தற்போதைய லக்ஷ்மி பாய் கல்லூரியில் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார்.

1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக 23 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தார். ஆர்ய சமாஜத்தின் இளைஞர் பிரிவான ஆர்ய குமார் சபாவில் 1944ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். 1939ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இணைந்தார். பாபா சாஹேப் ஆப்டி மீதான ஈடுபாடு காரணமாக 1940-44ல் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்களுக்குச் சென்றார். 1947ஆம் ஆண்டில் முழுநேர ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் ஆனார். அப்போது இந்திய பிரிவினையை ஒட்டி நடந்த கலவரத்தினால் அவரது சட்டப்படிப்பு பாதியில் தடைபட்டது.

1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடைசெய்யப்பட்டது. தீன்தயாள் உபாத்யாயா மூலம் 1951ஆம் ஆண்டு சியாம பிரசாத் முகர்ஜி தொடங்கிய பாரதீய ஜன சங்கம் என்ற இந்து தேசியவாத வலதுசாரிக் கட்சியில் சேர்ந்தார். அதன் வடக்கு மண்டல தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சியாம பிரசாத் முகர்ஜியைப் பின்தொடர்பவராக தன்னை மாற்றிக்கொண்ட வாஜ்பாய், அவருடன் இணைந்து 1953ஆம் ஆண்டு காஷ்மீரைச் சேராதவர்கள் காஷ்மீரில் ஒடுக்கப்படுவதை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அந்தப் போரட்டத்தின் போது முகர்ஜி உயிரிழந்த பின், ஜன சங்கத்தை வழிநடத்தும் பொறுப்பு தீன்தயாள் உபாத்யாயாவிடம் வந்தது.

1957ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் பல்ராம்பூர் தொகுதியில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினரானார். தீன்தயாள் உபாத்யாயாவின் மறைவுக்குப் பின் 1968ஆம் ஆண்டில் ஜன சங்கத்தின் தலைவர் பொறுப்பு வாஜ்பாய் வசம் அளிக்கப்பட்டது. அவருடன் எல்.கே. அத்வானி, நாநாஜி தேஷ்முக், பல்ராஜ் மதோக் ஆகியோரும் ஜன சங்கத்தின் முக்கியத் தலைவர்களாக விளங்கினார்கள்.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சி வென்று ஆட்சி அமைத்தபோது, மொரார்ஜி தேசாய் பிரதமரானார். வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சரானார். 1979ஆம் ஆண்டு ஜூலை 28 வரை மட்டுமே இந்த ஆட்சி நிலைத்தது.

Your Digital PR


1980ஆம் ஆண்டு தனது சகாக்களான எல்.கே. அத்வானி, பேரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் கைகோர்த்து ஜன சங்கம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை ஒருங்கிணைத்து பாரதீய ஜனதா கட்சியைத் தோற்றுவித்தார் வாஜ்பாய். அதன் முதல் தலைவராகவும் பொறுப்பேற்றார். இதன் மூலம் காங்கிரஸ் அரசின் வலிமையான விமர்சகராகவும் வாஜ்பாய் உருவெடுத்தார்.

1996ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதமர் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக வாஜ்பாய் அறிவிக்கப்பட்டார். ஆனால், அப்போதைய பாஜக தலைவர் எல்.கே. அத்வானி. தேர்தல் முடிவுகள் வெளியானதும் மே 16, 1996ல் 10வது இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவி ஏற்றார். அவரது பதவி வெறும் 13 நாட்கள் மட்டுமே நீடித்தது.

1998ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றார். ஆனால் இந்த முறையும் 13 மாதங்கள் மட்டுமே பதவியில் நிலைத்தார். 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரே வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டதால் ஆட்சி கவிழ்ந்தது. இந்த 13 மாத ஆட்சியில் 1998ஆம் ஆண்டு மே 11,13 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள போக்ரான் பாலைவனப்பகுதியில் 5 அணுகுண்டு வெடிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. இதே இடத்தில்தான் இந்தியா ‘சிரிக்கும் புத்தர்’ என்ற பெயரில் தனது முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனையை 24 ஆண்டுகளுக்கு முன் 1974ல் நடத்தியிருந்தது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் வாஜ்பாய் இந்த காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். லாகூர் – டெல்லி இடையே முதல் பேருந்து சேவை தொடங்கி வைத்தார். மேலும் 1999ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில் இரு நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. லாகூர் ஒப்பந்தம் எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மேலும் பிரச்னைகளைத் தீர்க்கவும் வர்த்தக உறவை மேம்படுத்தவும் இருநாட்டு நட்புறவை வலுப்படுத்தவும் உறுதியளிக்கும் விதமாக அமைந்தது. 1998ஆம் ஆண்டு போக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனைகளால் அதிருப்தியுற்ற பாகிஸ்தானும் பிற தெற்காசிய நாடுகளும் இதனை வரவேற்றன.

Your Digital PR

1999ஆம் ஆண்டில்தான் தமிழகத்தின் அதிமுக கட்சி வாஜ்பாய் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை விலகிக்கொள்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். இதனால், வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது. அக்டோபர் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் பல கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியைக் கட்டமைத்த வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பில் அமர்ந்தார். இந்த முறை 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவுசெய்த அவர், இந்தியப் பிரதமராக முழு பதவிக்காலத்தை பூர்த்திசெய்த முதல் காங்கிரஸ் கட்சியைச் சாராத பிரதமர் என்ற பெருமைக்கு உரித்தானார்.

1999 ஜூன் மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்த ஆபரேஷன் விஜய் என்ற தாக்குதலை இந்திய ராணுவம் திட்டமிட்டது. இத்திட்டத்தின் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தைத் தாக்கி பெரும் சேதத்தை உண்டாக்கியது. இதனால் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின; கார்கில் போர் இந்தியாவின் வெற்றியுடன் முடிந்தது.

மூன்றாவது முறை பிரதமரானபோது, 1999 டிசம்பரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது, 2001 டிசம்பரில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது, 2002 குஜராத் கலவரத்தில் சுமார் ஆயிரம் இந்து – முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டது போன்றவை வாஜ்பாய் அரசிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தின.

தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகிய குறிப்பிடத்தக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சர்வதேச உறவுகளை மேம்படுத்துவது, தனியார் நிறுவனங்கள் மற்றும் அந்நிய மூதலீடு ஊக்குவிப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

வாஜ்பாயி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், நமிதா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார். அவருக்கு இயற்கையின் மீது தனி விருப்பம் உண்டு. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலி அவருக்குப் பிடித்தமான இடங்களில் முதன்மையானது. இசையிலும் நடனத்திலும் ஆர்வம் அதிகம் கொண்டவர். பள்ளிப்பருவத்திலிருந்து இலக்கிய ஈடுபாடு கொண்டதால் எழுத்திலும் முத்திரை பதித்தார்.

பாஞ்சஜன்யா, ராஷ்டிரதர்மா ஆகிய இந்தி மாத இதழ்களிலும் அர்ஜுன், ஸ்வதேஷ் ஆகிய நாளேடுகளிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். பல கவிதை நூல்களையும் சுயசரிதையையும் எழுதினார். வாஜ்பாய் கவிதைகள் என்ற தலைப்பில் தமிழிலும் அவரது கவிதைகள் வெளியாகியுள்ளன.

2001ஆம் ஆண்டு முதல் பல்வேறு காரணங்களுக்காக 10 அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டிருக்கிறார். ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டிருக்கிறது. பக்கவாதத்தினால் சரியாக பேசமுடியாத நிலை ஏற்பட்டது. சர்க்கரை நோயால் பல ஆண்டுகள் கடினமானதாகக் கழிந்திருக்கின்றன. 2005ஆம் ஆண்டுக்குப் பின் பொது வாழ்க்கையிலிருந்து விலகினாலும் தன் உடலுடன் போராடிக்கொண்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக 50 ஆண்டுகள் செயல்பட்ட வாஜ்பாய் கட்சி பேதமில்லாமல் அனைவரது மனதிலும் நீங்காத இடம்பிடித்தார். 1962ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 7 முறை மக்களவை உறுப்பினராகவும் 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977-79ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

வாஜ்பாய் இளைய வயதில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளைக் கேட்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பெரிதும் பாராட்டிப் பேசினார். “வாஜ்பாய் என்ற இந்த இளைஞர் ஒருநாள் இந்தியாவின் பிரதமராக வருவார்” என நேரு தன் கணிப்பை வெளியிட்டார். நேருவின் கணிப்பை வாஜ்பாய் தன் செயல்திறத்தால் செய்துகாட்டினார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader