சீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்

Get real time updates directly on you device, subscribe now.

கடந்த ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரும் பூதாகரமாக வெடித்தது. இதனால் சீனாவில் தொழில் புரியும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறத் தொடங்கின. கொரோனா பாதிப்பால் சீனா பொருளாதாரமே கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.

கொரோனா பாதிப்பால் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்த நிலையில் மற்ற நாடுகள் சீனாவுடன் வர்த்தகம் செய்ய தயக்கம் காட்டின. சீனாவுக்கு வரும் முதலீடுகளும் குறைந்து போனது. இதனால், சீனாவை விடுத்து மற்ற நாடுகளில் முதலீடு செய்யத் தொடங்கின. குறிப்பாக, இந்தியாவில் முதலீடு செய்ய நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டின. அதில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று.

கொரோனாவிற்கு பிறகு சீனாவிலிருக்கும் ஆப்பிள் நிறுவன ஆலைகள் இந்தியாவிற்கு படையெடுத்துக் கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டின் 23ஆவது தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இதில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாகப் பங்கேற்ற மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறுகையில், கொரோனா காலத்தில் உதிரிப் பாகங்கள் உற்பத்தி ஆலைகள் உட்பட மொத்தம் 9 ஆப்பிள் ஆலைகள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் ஆலை அமைத்து தொழில் புரிவதற்காக ஏற்கெனவே சாம்சங், ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான், ரைசிங் ஸ்டார், பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. மொத்தம் 22 நிறுவனங்கள் இந்தியாவில் இதற்காக 1.5 பில்லியன் டாலரை முதலீடு செய்கின்றன.

இந்த முதலீடுகள் மூலமாக இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.11.5 லட்சம் கோடி மதிப்புக்கு செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கப்படும் என்று ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

புதிதாக அமைக்கப்படும் ஆலைகள் மூலம் இந்தியாவில் நேரடியாக 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளும், 9 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் கூடுதலாக 100 கோடி டாலர் முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஃபாக்ஸ்கான் ஆலையில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஆலையின் மூலமாக சென்னையில் புதிதாக 6000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More