அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் – மதுரை

Get real time updates directly on you device, subscribe now.

பெயர் : அன்னை வேளாங்கண்ணி திருத்தலம்
இடம் : அண்ணாநகர், மதுரை.

வரலாறு :

மதுரை உயர் மறைமாவட்டத்தில் அண்ணாநகரில் அமைந்துள்ள புகழ் பெற்ற அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் வரலாற்றைக் காண்போம்.

இன்று அண்ணாநகர் என்று அழைக்கப்படும் சாத்தமங்கலம் பகுதியில் முந்திரித்தோப்பு என்னும் குடியிருப்புப் பகுதி மட்டுமே அமைந்திருந்தது. அப்பகுதியில் திரு. வேதமுத்து பிள்ளை, திரு. சூசை மாணிக்கம் பிள்ளை, திரு. தாமஸ், திரு.ஐ. குழந்தைசாமி, திரு. பிச்சை, திரு. எ. குழந்தைசாமி ஆகிய ஆறு கிறிஸ்தவ குடும்பங்களே இருந்தன. அந்நிலையில் மதுரை வீட்டு வசதி வாரியத்தால் பல்வேறு நிலைகளான குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன.

1974, ஜனவரி 4-ம் நாள் அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் முதல் கட்டமாக 211 இல்லங்களைக் கொண்ட இன்றைய வைகை காலனி திறந்து வைக்கப்பட்டது. அதில் மக்கள் தொடர்ந்து குடியேறினார்கள்.

1974, ஜூலை மாதத்தில் வைகை காலனி குடியிருப்போர் நலன் கருதி அங்கு வாழ்ந்தவர்களால் வைகை காலனி நலக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்ற முதுமொழியின்படி அதே ஆண்டு ஆகஸ்ட் திங்களில் மும்மதங்களுக்கான (இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்) ஆலயங்கள் கட்டுவதற்கு வைகை காலனி நலக்கழகத்தில் மூன்று துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

கிறிஸ்தவர்களுக்கான ஆலயம் எழுப்ப திரு. நம்பிக்கைராஜ் அவர்களை தலைவராகவும், திரு. எஸ். ரத்தினம் அவர்களை செயலராகவும், திரு. ஐ. அருள்ஜோசப் அவர்களை பொருளாளராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அக்குழு நலக்கழகத்தின் பிறசமய நண்பர்களோடு நமது மறை மாநில பேராயர் இல்லம் சென்று அன்றைய மறைமாநில நிதியாளர் அருட்தந்தை எஸ். யேசுதாசன் அவர்களையும் அன்றைய பேராயர்மேதகு. பி. ஜஸ்டின் திரவியம் ஆண்டகை அவர்களையும் சந்தித்து ஆலயம் கட்டிக்கொடுக்கும்படி கேட்டுக் கொண்டது. ஆலயம் கட்ட இடம் வாங்கித் தந்தால் ஆலயம் கட்டிக் கொடுப்பதாக உறுதி கூறப்பட்டது.

அதன்படி குழுவின் செயலர் திரு. எஸ். ரத்தினம் அவர்கள் மதுரை வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளர் திரு. செல்லராஜ் அவர்களை அணுகி, ஆலயமெழுப்பஇடஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் ஆலயங்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இடங்களில் மூன்றை குறிப்பிட்டு தேவையான இடத்தை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் பேரில் செயலர் திரு. எஸ். ரத்தினம் அவர்கள் மறைமாநில நிதியாளர் அருட்தந்தை. யேசுதாசன் அவர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இடங்களை பார்வையிட்டு, இன்று ஆலயம் இருக்கும் இடத்தில் 5 கிரவுண்டு மட்டும் வாங்கித் தர நிதியாளர் பணிந்தார்.

ஆலய குழுவின் பெருமுயற்சியால் மதுரை வீட்டு வசதி வாரியம் திரு. எஸ். ரத்தினம் செயலர், ஆலயகட்டுமானக் குழு என்ற பெயருக்கு கிரவுண்டு ஒன்றிற்கு ரூ.7000 வீதம் 5 கிரவுண்டு நிலத்தை 1975 ஏப்ரல் திங்களில் ஒதுக்கீடு செய்தது.

நிதி திரட்டல் :

1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் நாள் ஆலயக்குழுவால்லெட்சுமி சுந்தரம் ஹாலில் திரைப்பட பின்னணி பாடகர் பத்மஸ்ரீ. ஜேசுதாஸ் அவர்களால் நடத்தப்பட்ட இன்னிசை கச்சேரியின் மூலம் நிதி திரட்டப்பட்டது. மறைமாநிலநிதியாளர் முதல் தவணை செலுத்தி இடத்தை வாங்கினார்கள்.

செயல்திட்ட பணிகள் :

வாங்கப்பட்ட இடத்தில் 08.09.75 அன்று பெயர்ப் பலகை அருட்தந்தை. யேசுதாசன் மற்றும் மரியன்னை பேராலயத்தின் அன்றைய பங்குத்தந்தைஅருட்திரு. குழந்தைராஜ்ஆகியோரால்அமைக்கப்பட்டது.

தொடர்ந்து முன்னர் வாங்கிய இடத்திற்கு அருகாமையில் உள்ள 9 கிரவுண்டுஇடத்தையும்ஆலய குழு வாங்கிக் கொடுத்தவுடன்ஆலயமகட்டிக கொடுப்பதாக பேராயர்அனுமதியுடன் மறை மாநில நிதியாள்h உறுதி கூற ஆலய குழு செயலாளர் திரு.எஸ். ரத்தினம் அவர்கள் நலக்கழக நண்பர்களுடன் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

முதல் திருப்பலி :

1975-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் நாள் ஆலயத்திற்கு வாங்கிய இடத்தில் ஆலய குழு மற்றும் மக்களின் பெரும் முயற்சியால் அழகிய தொருபந்தலிட்டு கிறிஸ்துமஸ் திருப்பலி மறைமாநில நிதியாளர் அருட்தந்தை. யேசுதாசன் அவர்களால் முதன்முறையாக நிறைவேற்றப்பட்டது.

இடம் விரிவுக்கம்:

1975, ஜூன் திங்களில்மறைமாநிலநிதியாளர் ஏற்கனவே பணித்தபடி மீதமுள்ள 9 கிரவுண்டு இடமும் வாங்கப்பட்டது.

ஆவண மாற்றம் :

1976, ஜூலை மாதம் 22-ம் நாள் ஆலயகுழுச் செயலாளர் திரு. எஸ். ரத்தினம் அவர்களது பெயரில் வாங்கப்பட்டஆலயத்திற்கான இடத்தை வீட்டு வசதி வாரியத்தின் ஒப்புதலோடு மறைமாநில நிதியாளர் பெயருக்கு மாற்றப்பட்டது.

சிற்றாலயம் :
மறைமாநில பேராயர் மேதகு.P. ஜஸ்டின் திரவியம் ஆண்டகை அவர்களது ஆசியோடு, பொருளாளர் அருட்தந்தை. யேசுதாசன் அவர்களது பெருமுயற்சியால் அன்னைக்கு ஒரு சிற்றாலயம் அமைக்கப்பட்டு 01.09.1976- புனித தெரசாள் மடத்திலிருந்து அன்னையின் சுரூபம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மேதகு. பேராயர் P. ஜஸ்டின் திரவியம் ஆண்டகை அவர்களால் அர்சிக்கப்பட்டது.

அதே மாதம் 8 -ஆம் நாள் அன்னையின் பெருவிழா திரளான மக்கள் கலந்து கொள்ள, சிறப்புடன் நடைபெற்றது.

திருத்தல ஆலயம் :

மக்கள் கூட்டம் திரளாக வழிபாட்டிற்கு வருவதை அறிந்த பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்கள், பெரியதோர் ஆலயம் கட்டக் கருதி ஜெர்மனி நாட்டுக்கு சென்ற போது அங்கு கண்ட ஆலயவடிவிலேயே (அப்ப ரசக்கிண்ண வடிவில்) கட்ட முடிவெடுத்து அதற்கான பொருளும் திரட்டி வந்தார்கள்.

நிதியாளர் அருட்தந்தை. யேசுதாசன் அவர்களது அயராத முயற்சியால் பல வண்ண கற்களால் அழகிய தோர் திருத்தலம் உருவாகியது. 06.10.1979 அன்று மக்கள் கூட்டம் அலைமோத பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

ஆலயக் கண்காணிப்பாளரும், பங்குத்தந்தையரும் :

சிற்றாலயம் அமைந்த 01.09.1976 முதல் 23.01.1980 வரை மறைமாநில நிதியாளர் பொறுப்புடன் ஆலய கண்காணிப்பாளராகவும் அருட்தந்தை. யேசுதாசன் அவர்கள் பாங்குடனே பணி புரிந்தார். அவர் வழியே மறை பரப்பும் பணிக்குழு செயலராக பொறுப்பில் இருந்த அருட்தந்தை N.P. அல்போன்ஸ் அவர்கள் 24.01.1980 முதல் 06.02.1983 வரை அன்னையின் புகழ் பரப்ப சிறப்பான சேவை செய்தார். அதன் பின்னர் கத்தோலிக்க சேவை ஆசிரியராக, நொபிலி மறைப்பணி நிலைய இயக்குநராக இருந்த அருட்தந்தை. லாரன்ஸ்சேவியர் அவர்கள் 07.02.1983 முதல் 30.05.1985 வரை ஆலய கண்காணிப்பாளராக அன்னையின் ஆலயத்தில் சிறப்பாக பணி புரிந்தார்.

31.05.1985 அன்று மரியன்னை பேராலயபங்கிலிருந்து அண்ணாநகர் வேளாங்கண்ணி ஆலய பங்கு உதித்தது. இதற்காக மரியன்னை பேராலய அன்றைய பங்குத்தந்தை அருட்திரு. அம்புரோஸ் அவர்களின் பணி மகத்தானது. பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை. யேசுதாசன் அவர்கள் பொறுப்பேற்றார்கள். அவர் தம் பணிக்காலத்திலே நவநாள் பக்தி முயற்சிகள், பங்கின் கத்தோலிக்க இல்லங்களைச் சந்தித்தல், மருத்துவமனை சென்று நோயாளிகளை ஆறுதல்படுத்துதல், ஆலயபணிகளுக்கென்று வின்சென்ட்தே பவுல் சபை, மரியாயின் சேனை, இளைஞர் மன்றம், இளம் பெண்கள் இயக்கம் ஆகிய சபைகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை பணியேற்ற நாள் முதல் 09.05.1992 வரை சிறப்புடன் செய்தார். அவர் பணிக்காலத்தில் தான் மாதா மன்றம் மற்றும் அதற்கு தெற்கே உள்ள கட்டிடங்கள் கட்டப்பட்டது.

அருட்தந்தை.N. மனுவேல், பங்குத்தந்தையாக 10.05.1992 முதல் 13.05.1995 வரை சீரிய முறையில் சிறப்புடனே பங்கு மக்களை வழி நடத்தினார். அவரது பணிக்காலத்தில் ஆரோக்கிய அன்னை அரங்கம் அமைக்கப்பட்டது.

பின்னர் அருட்தந்தை. ஆ. திவ்யானந்தம் அவர்கள் சிறப்பான முறையில் பணியாற்றினார். 14.05.95 முதல் 09.06.2000 வரை அவர் பொறுப்பில் இருந்த காலத்தில் அன்னையின்பக்தியுடன் திரு இருதயபக்தியை பெரிதும் வளர்த்தார். மேலும் நற்கருணை சிற்றாலயம், ஒப்புரவு ஆலயம், விவிலியஅறிவாலயம் ஆகிய அமைப்புப்பணிகளில் வெற்றி கண்டார்.

அதன் பின்னர் 11.06.2000 முதல் அருட்தந்தை. ஆ. முடியப்பன் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று, அவரது வழிகாட்டலில் 2002 ஆண்டு முடிய பங்குப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அவரது அரும்பணியால் வெள்ளிவிழா நினைவாக திருப்பயணியர் இல்லம் 02.09.2000 அன்று மக்கள் பேராயர்மேதகு. ம. ஆரோக்கியசாமி ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு அவ்வில்லம் மக்களின் வசதிக்காக சிறு சிறு நிகழ்ச்சிகள் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஓய்வு இல்லமாக பயன்பட்டு வருகிறது. மேலும் அருட்தந்தை அவர்களின் பெரும் முயற்சியால் ஆலயத்தை சுற்றிலும் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.

மேலும் 2002 முதல் பொறுப்பேற்ற அருட்தந்தை. ஆரோக்கியம் அடிகளார் அவர்களின் பணிக்காலத்தில் பங்கின் அடிப்படைத் தேவையான கல்லறை இடம் பங்கின் எல்லைக்குட்பட்ட நகரில் ஏறத்தாழ 2 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு, ஒரு கெபி மற்றும் திருப்பலி மேடை ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அமைதியான பக்தி முயற்சிகள் சிறப்பாக நடைபெற்று 2007 ஆண்டு வரை தொடர்ந்தது.

பின்னர் 2007 ம் ஆண்டு பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்தந்தை. ஞானபிரகாசம் அடிகளாரின் பணி அன்னை ஆலயத்தின் பொற்காலமாகும். பங்கின் பக்தி முயற்சிகளின் முக்கியமான அன்னையின் பக்தி முயற்சிகள் அனைவராலும் பராட்டும் வண்ணம் அமைந்தது. அவரின் பணிக்காலத்தில் அன்னைக்கு ஒரு அழகிய கெபி ஒன்று எழுப்பப்பட்டு பிரதிமாதம் முதல் சனிக்கிழமைகளில் அன்னைக்கு கெபியில் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறச் செய்தார். மேலும் அண்ணாநகரின் துணை பங்கு ஜூபிலி டவுனில் நமது பேராயர் மேதகு பீட்டர் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, புனித பிரான்சிஸ் சவேரியாருக்கு அழகிய ஆலயம் அமைக்கும் பணியில் சாதனை படைத்தார். 25.12.2011 அன்று மேதகு பேராயர் பீட்டார் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் பங்கு ஆலயம் மதுரை உயர்மறை மாவட்டத்தின் திருத்தலமாக அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அருட்தந்தை அவரின் வழிகாட்டலில் புனித வின்சென்ட்தேபவுல் சபை சார்பில் அமைக்கப்பட்டது.

பின்னர் 2012 -ல்அருட்தந்தை. அப்போலின் கிளாரட்ராஜ் அடிகளார் பணிக்காலத்தில், பங்குத்தந்தையின் பணிகளை மெருகேற்றியும், ஆலய வளர்ச்சியில் புதிய திட்டங்களை நிறைவேற்றவும் பங்குப் பேரவையுடன் இணைந்து மிகச்சிறப்பாக பணியாற்றினார். அன்பியக் குடும்பங்களை சந்திப்பது, பக்தசபைகளின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக அவர்களை ஊக்குவிப்பது மற்றும் மறைகல்வி மாணவ மாணவியரின் மறை வகுப்புகளுக்கு இடையே களப்பணிகளுக்கு முக்கிய தளங்களுக்கு அழைத்து செல்வது, மேலும் முதியோர் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு பங்கு மக்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு உதவுவது போன்ற அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட செயல்களைச் செய்தார். மேலும் அருட்தந்தையின் வழிகாட்டலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க பங்கின் நல்லமனம் படைத்த அன்பரின் உதவியால் ஒரு ஆழ்துறை கிணறு போடப்பட்டதன் விளைவாக ஆலயத்தை சுற்றிலும் ஒரு சோலை போன்று சுற்றிலும் மரங்கள் அமைந்துள்ளது. மாநகர காவல் ஆணையரின் ஆலோசனையின் பேரில் அருட்தந்தை அவர்கள் ஆலயத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள்வைக்கப் பட்டது. பங்குத்தந்தையின் இல்லங்களை சூரிய ஒளியால் இணைத்துள்ளார். மேலும் கே.கே. நகர் அந்தோனியார் ஆலயத்திலும் சூரிய விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் ஆலயப்பணியுடன் சமுதாயப்பணிகளை மேற்கொண்டு, சமூகத்தில் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டட மக்களின் பிரச்சனைகளில் முன்னின்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தார்.

தொடர்ந்து பொறுப்பேற்ற பங்குத்தந்தை அருட்பணி. லூயிஸ் அவர்களின் முயற்சியால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு 11.10.2020 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

பங்குப்பேரவை:

திருத்தல பங்குத் தந்தைக்கு உதவி புரியவும், ஆலோசனை வழங்கவும் திருத்தலப் பங்கு உருவாகிய 1985 முதல் இன்று வரை பங்குப் பேரவைகள் சிறப்பாக பணியாற்றி வருகிறது.

திருத்தல பங்குத்தளத்தில் பக்த சபை களான
புனித வின்சென்ட்தேபவுல் சபை
மரியாயின் சேனை
சூசையப்பர் சபை
இளைஞர் இளம் பெண்கள் இயக்கமும் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன.

புகழ் வாய்ந்த மகத்தானமாதாவின்இத்திருத்தலம் அண்டி வந்த அனைவரையும் மகிழ்விக்கும், அரவணைக்கும் ஆலயமாகத் திகழுகிறது.

அன்னையின் திருத்தலம் வாருங்கள்…

ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்லுங்கள்…

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader