IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அனில் அம்பானி சாம்ராஜ்யம் சரிந்த கதை

Get real time updates directly on you device, subscribe now.

காலம் ஒரு மனிதனை உச்சத்தில் கொண்டு போய் வைக்கும் அதே காலம்தான் படுபாதாளத்திற்கும் தள்ளி விடும். ஒரு காலத்தில் இந்திய பங்குச் சந்தையை தினசரி நிர்ணயம் செய்யும் சக்தியாக இருந்த அனில் அம்பானி குழுமத்தின் நிறுவன பங்குகள் தற்போது படு பாதாளத்தில் விழுந்துள்ளது பங்குச் சந்தை வல்லுநர்களை வருத்தமடையச் செய்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த அனில் அம்பானியின் சாம்ராஜ்யம் சரிவடைய என்ன காரணம்? விரிவாக காண்போம்.

எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய கடன் தொகையை இன்னும் 4 வாரங்களுக்குள் தராவிட்டால் 3 மாத சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அனில் அம்பானி தன்னுடைய நிறுவன சொத்துக்களை விற்கவேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது.

15 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு தமிழ் சினிமாவில் வரும் ஒரு காமெடி காட்சியில், ஒரு பால் காரர் தன்னுடைய 500 ரூபாய் மொபைல் ஃபோனில் பேசிவிட்டு, அதை பால் கரக்கும் பாத்திரத்தில் போட்டுவிட்டு நடையை கட்டுவார். அதற்கு காரணம் அந்த மொபைல் ஃபோனின் விலை வெறும் ரூ.500 மட்டுமே. அது வரையிலும் நோக்கியா, எரிக்சன் போன்ற நிறுவனங்களின் ரூ.20000, அல்லது ரூ.30000 கொடுத்து பணக்காரர்கள் மட்டுமே வாங்கி உபயோகிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

பணக்காரர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகித்த மொபைல் ஃபோன்களை சாதாரண மக்கள், வெறும் கண்ணால் வேடிக்கை மட்டுமே பார்த்த ட்ரெண்டை மாற்றி, சாதாரண மக்களும் வாங்கி உபயோகிப்பதற்கு வழி வகுத்தவர் அனில் அம்பானிதான். ஆம், வெறும் ரூ.500க்கு மட்டுமே மொபைல் ஃபோன் வாங்கி அளவில்லாமல் பேசுவதற்கு வழி காட்டிய வள்ளல் அனில் அம்பானி தான் என்று சொன்னால் அது மிகையில்லை.

ரூ.500க்கு மட்டுமே மொபைல் ஃபோனை கொடுத்த அனில் அம்பானி இன்று ரூ.500 கோடியை அபராதத்துடன் 4 வாரங்களுக்குள் செலுத்தவேண்டும் என்றும், இல்லை என்றால் சிறை செல்ல வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளதும் அவரது கெட்ட நேரம்தான் என்று சொல்ல வேண்டும்.

கடந்த 2008ஆம் ஆண்டு உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆறாவது இடம் பெற்ற அனில் அம்பானி, 2009ஆம் ஆண்டு 34வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இவரின் சொத்து மதிப்பு 50 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக குறைந்தது. இவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் மூன்றில் இரண்டு பங்கு ஷேர்கள் சரிந்ததால் அதிகளவில் நஷ்டமடைந்தார்.

அனில் அம்பானியின் அண்ணனான முகேஷ் அம்பானி எதைத் தொட்டாலும் லாபம் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கிறது. ஆனால் இவருக்கோ நஷ்டம் இரட்டிப்பாக உச்சந்தலையில் இடியாக இறங்குகிறது. 2002ஆம் ஆண்டில் திருபாய் அம்பானியின் இறப்புக்கு பின்பு சொத்துப் பிரச்சினையில் அண்ணன் தம்பிக்கு இடையே ஆன சகோதர உறவில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சமரசப் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, வற்றாத அமுத சுரபியான கச்சா எண்ணை சுத்திகரிப்பு நிறுவனமான வளம் கொழிக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Ltd) நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனங்களும் முகேஷ் அம்பானி எடுத்துக் கொண்டார்.

அண்ணன் தானே போனால் போகட்டும், விட்டுக்கொடுத்தவர்கள் என்றும் கெட்டுபோனதில்லை என்று முன்னோர்கள் சொன்ன வாக்கை நம்பி அண்ணனுக்கு விட்டுக்கொடுத்து லாபம் குறைவான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி போன்ற நிறுவனங்களை அனில் அம்பானி எடுத்துக் கொண்டார்.

தன்னுடைய நிறுவனங்களை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் 2004ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தை பாமர மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் மொபைல் ஃபோன்களை ரூ.500க்கு கொடுத்து அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

2006ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தைக் களம் உச்சத்தை தொட்ட நேரத்தில்தான் அனில் அம்பானி புதிய முயற்சியாக ஆர்.காம், ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனங்களை மேம்படுத்த இந்திய பங்குச் சந்தையில் இறங்கினார். ஆர்.காம் நிறுவனத்தின் மூலம் தொலைத் தொடர்பு துறையிலும், ரிலையன்ஸ் எனர்ஜி மூலம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான துறையிலும் இறங்கினார். 2006ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஆர்,காம் நிறுவனம் ரூ.300க்கு வர்த்தகமானாலும், 2008ஆம் ஆண்டில் உச்சபட்சமாக ரூ.800ஐ தொட்டது. மற்றொரு நிறுவனமான ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1600ஐ தொட்டது.

இதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் இயற்கை எரிவாயு நிறுவனமான (Relaince Natural Resources Ltd-RNRL)ஆர்.என்.ஆர்.எல் நிறுவனம் ரூ.250க்கும் விற்பனையானது. டெல்லி மாநகரத்திற்கும் மற்றும் சில நகரங்களுக்கும் மின் பகிர்மான திட்டத்தை ரிலையன்ஸ் எனர்ஜி நடத்தி வந்தது. இதில் தடங்கல் ஏற்பட்டது.

இதற்கு காரணம் முகேஷ் அம்பானிதான் காரணம் என்று அனில் குற்றம் சாட்டினார். ஆனாலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு முகேஷ் அம்பானிக்கு துணை நின்றது. இதனால் கோபமான முகேஷ் அம்பானி எரிவாயு சப்ளை செய்ய ஒப்புக் கொள்ளப்பட்ட தொகை கட்டுபடி ஆகாததால் கூடுதல் தொகை தரவேண்டும் என்று மல்லுக்கு நின்றார். வேறு வழி தெரியாத அனில் அம்பானி உச்ச நீதி மன்றத்தை நாடி நியாயம் கேட்டார்.

உச்ச நீதிமன்றமும் இரு தரப்பு வாதத்தை கேட்டு இறுதியில், இயற்கை வளம் என்பது முற்றிலும் நாட்டின் பொதுச் சொத்து என்பதால், இருவரும் விட்டுக்கொடுத்து பேச்சு வார்த்தையின் மூலம் சுமூக தீர்வு காணவேண்டும் என்ற சொல்லிவிட்டது. இந்த விஷயத்தில் தனக்கு தோல்வி ஏற்பட்டதாக அனில் உணர்ந்தார். இடையில் 2008ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மின் உற்பத்தி பகிர்மானத்திற்காக புதிதாக ரிலையன்ஸ் பவர் (Reliance Power) என்ற நிறுவனத்தை தொடங்கி பங்குச் சந்தையிலும் நுழைந்தார். உடன் ஆர்,என்,ஆர்,எல் நிறுவனத்தை ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துடன் இணைத்துவிட்டார்.

ரிலையன்ஸ் பவர் நுழைந்த நேரம் அனில் அம்பானிக்கு கெட்ட நேரம் ஆரம்பாமானது போல. ஆம், அமெரிக்க பங்குச் சந்தை தொடங்கி உலக பங்குச் சந்தைகள் எல்லாம் ஆட்டம் கண்ட நேரம். அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து பங்குகளும் மிக மிக மோசமான சரிவை சந்தித்தன. அந்த நேரத்தில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பங்குச் சந்தை நுழைந்ததால், பட்டியலிடப்பட்ட அன்றே ரிலையன்ஸ் பவர் நிறுவனம் படு வீழ்ச்சியை சந்தித்தது. அது போலவே, அனில் அம்பானி நிறுவன பங்குகள் அனைத்துமே கடும் சரிவை சந்தித்தன.

2008ஆம் ஆண்டு ஆரம்பித்த சரிவு இன்று வரையிலும் தொடர்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆர்.காம் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கு 2014ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் எரிக்சன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது. அதன்படி 2014ஆம் ஆண்டு தொடங்கி 7 ஆண்டுகளுக்கு ஆர்,காம் நிறுவனத்தை நிர்வகித்து தொலைத் தொடர்பு சேவையை வழங்கவேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.1600 கோடியை சேவைக் கட்டணமாக வழங்க வேண்டும் என்று ஆர்.காம் நிறுவனம் ஒப்புக் கொண்டது.

எரிக்சன் நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக தர ஒப்புக்கொண்ட தொகையில் சுமார் ரு.1000 கோடியை தராமல் ஆர்.காம் நிறுவனம் இழுத்தடித்தது. பொறுத்துப் பார்த்த எரிக்சன் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு நீதி மன்றத்திடம் முறையிட்டது.

ஆர்.காம் நிறுவனம் தன்னால் முழு தொகையையும் தர முடியாது என்றும் ரூ.550 கோடி மட்டுமே தர முடியும் என்று சரணடைந்தது. இருந்தாலும் ஒப்புக்கொண்ட தொகையை தராமல் உச்ச நீதி மன்றத்தை அணுகி, தன்னுடைய நிறுவன சொத்துக்களை விற்று பாக்கித் தொகையை அடைக்கிறேன் என்று முறையிட்டது. உச்ச நீதிமன்றமும் ஆர்.காமின் நிலைமையை உணர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை காலக்கெடு விதித்தது.

ஒரு காலத்தில் இந்திய பங்குச் சந்தையை தினசரி நிர்ணயம் செய்யும் சக்தியாக இருந்த அனில் அம்பானி குழுமத்தின் நிறுவன பங்குகள் தற்போது படு பாதாளத்தில் விழுந்துள்ளது பங்குச் சந்தை வல்லுநர்களை வருத்தமடையச் செய்துள்ளது. இளைய சகோதரனின் நிலையை உணர்ந்து சகோதரனை கை தூக்கிவிட்டு காப்பாற்றுவாரா அல்லது வியாபாரம் என்ற சறுக்கு மரத்தில் ஏற்றம் இறக்கம் எல்லாம் சகஜம் என்று ஒதுங்கி நின்று கை கட்டி வேடிக்கை பார்ப்பாரா என்பது காலத்தின் கையில் தான் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த அனில் அம்பானியை காலம் சிறைக்குள் தள்ளுமா அல்லது இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க கை கொடுக்குமா என்பதை பார்க்கலாம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader