IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஆசிரியர் தினத்தில் மட்டுமல்ல; எல்லா நாளும் ஆசிரியர்களை போற்றுவோம்!

4

உலகம் முழுவதும் வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வி தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களை பெருமைப்படுத்தும் வகையிலும், அவர்களை நினைவு கூறும் வகையிலும் ஆசிரியர் தினமானது கொண்டாடப்படுகிறது.


சிறு வயதில் நமக்கு அ, ஆ சொல்லிக் கொடுத்த ஆசிரியர் முதல், நாம் கல்வி கற்ற அனைத்து ஆசிரியர்களையும் இந்த தினத்தில் நினைத்து பெருமிதம் கொள்வோம். அவர்களிடம் கற்ற கல்வி முறையை நினைத்து பார்த்தால் பலருக்கு கண்ணீர்தான் வரும். சில ஆசிரியர்கள் அடித்து கண்டித்து நாம் அனைவருக்கும் கல்வியை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். ஆனால் நம்மை அவர்கள் அடிக்கும்போது மனத்திற்குளேயே திட்டியிருப்போம். அல்லது அவரை பழிவாங்க எண்ணி அவருடைய சைக்கிள் அல்லது மோட்டார் பைக்கை பஞ்ச்சர் செய்திருப்போம். கண்டிப்பான ஆசிரியர்களை மறைந்து இருந்து கல்லால் அடிப்பது போன்ற காட்சிகள் சில சினிமாக்களில் மட்டுமல்ல நிஜத்திலும் அரங்கேறியுள்ளன. ஆசிரியர்கள் அடிப்பது நாம் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக என்பதை நம்மில் பலர் அப்போது புரிந்து கொண்டிருக்க மாட்டோம்.


நம் வாழ் நாளில் பெற்றோர்களுடன் இருக்கும் நேரத்தை விட ஆசிரியர்களோடுதான் அதிக நேரம் இருகின்றோம். ஆசிரியர்கள் யாரும் மாணவன் என பார்க்காமல் தனது சொந்த பிள்ளைகளாகவே வகுப்பில் இருக்கும் அனைவரையும் பார்ப்பார்கள்.


ஆசிரியர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பது மட்டும் வேலையாக பார்க்காமல் ஒரு நல்ல மனிதனை உருவாக்கும் பணியையும் செய்து வருகின்றனர். ஆசிரியர்கள் இரண்டே விதம்தான் ஒன்று பாசத்துடன் பாடம், ஒழுக்கம், பண்பு அனைத்தையும் சொல்லி கொடுப்பது. மற்றொன்று அடித்து இவை அனைத்தையும் சொல்லி கொடுப்பது.


ஆசிரியர் என்றால் தங்களுக்கு பாடம் எடுப்பவர்கள் மட்டும் அல்ல. வாழ்க்கை பாடத்தையும் கற்று கொடுப்பவர்களும் ஆசிரியர்கள் தான். ஒருவரை சரியான பாதையில் அழைத்து சென்றால் அவர்களும் ஆசிரியர்கள் தான். ஆசிரியர் பணியை ஒரு புனிதமான பணியாக பலர் நினைத்து தன் வாழ்நாட்களையே அர்பணிகின்றனர்.


பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெறும்போது பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைத் திட்டினால் ஆசிரியர்கள் விட்டு கொடுக்காமல் பேசுவார்கள். திட்டாதீர்கள் இனி சரியாக இருப்பான், நான் பார்த்து கொள்கிறேன் என கூறி பெற்றோரை அனுப்பி வைப்பார்கள். அதற்கு பிறகு அந்த மாணவனை கூப்பிட்டு அறிவுரை கூறி அவர்களை மாற்றுவார்கள்.


கண்டிப்பாக நம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு ஆசிரியரையாவது மறக்கவே மாட்டோம். அவர்களை என்றாவது பார்த்துவிட முடியாதா என நம்மில் பலர் நினைத்து கொண்டிருப்போம். அவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் யாரும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்.


ஆசிரியர்களுக்கு நாம் கொடுக்கும் சிறந்த பரிசு வாழ்க்கையில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது மட்டுமே தான். நாம் வாழ்க்கையில் முன்னேறினால் அதில் பாதி பங்கு ஆசிரியர்களுக்கே ஆகும். நம்மை வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச் செய்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் இன்று ஆசிரியர் தினத்தில் தெரிவித்து மகிழ்வோம்! அதோடு ஒவ்வொரு நாளும் நினைத்து பெருமைப்பட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்பதையும் மறந்து விடாதீர்கள்!

-அ.சுஸ்மிதா