IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

11 வருஷம்… 115 நாடு! வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை!

Get real time updates directly on you device, subscribe now.

கசி அஸ்மா அஸ்மெர்ரி எனும் 33 வயது வங்காள தேச பெண்மணி 11 வருடங்களில் 115 நாடுகளைச் சுற்றியுள்ளார். வங்காள தேசத்தின் குல்னா எனும் சிறிய நகரத்தில் பிறந்த இவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

2007ம் ஆண்டில் கசியின் பக்கத்து வீட்டுப் பெண், நீ பெண்ணாக இருப்பதால் கல்யாணத்துக்குப் பிறகு ஊர் சுற்ற முடியாது. என் மகன் இப்பவே 5 நாடுகளுக்கு போய் வந்து விட்டான், என்று கிண்டலாக கூறியிருக்கிறார். இதனால் மனம் வருந்திய கசி, ஏன் ஒரு பெண்ணால் உலக நாடுகளுக்குச் செல்ல முடியாது? என்று தன்னுள் கேள்வி எழுப்பினார். அதன் தொடர்ச்சியாக உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணித்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.

இதையடுத்து, பிபிஏ பட்டப்படிப்பை முடித்த இவர், தனது முதல் பயணத்தை 2007ல் தொடங்கினார். தாய்லாந்து நாட்டிலிருந்து அவரது பயணம் தொடங்கியது. பின்பு 2009 ஆம் ஆண்டு கசி தன் நகைகளை விற்று தனது பயணத்தை முழு மூச்சாக தொடங்கினார். குறைந்தபட்சம் 50 நாடுகளை சுற்றி வந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால் பயணத்தின் மீதான காதலால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல், உலக நாடுகளை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் கசியின் உலகம் சுற்றி வரும் முடிவு அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அதிருப்தி அளித்தால் யாரும் உதவ முன்வரவில்லை. இரண்டு வருடங்களுக்கு பின்னர் அவரின் பெற்றோர் அவரைப் புரிந்து கொண்டு உற்சாகமூட்டினர்.

இதற்கிடையில், கசி அஸ்மெர்ரி நியூசிலாந்து ரெட் கிராஸ் ரோட்டரி கிளப்பில் வேலையில் சேர்ந்தார். அதன் மூலம் கிடைத்த தொடர்புகளிடம் தனது பயண இலக்கு குறித்து தெரிவித்தார். இதையடுத்து கசிக்கு பலரும் உதவிக்கரம் நீட்டினர். ரோட்டரி க்ளப் மூலம்கிடைத்த நண்பர்கள் உதவியோடு இன்று வரை 115 நாடுகளுக்கு பயணித்து இருப்பதாகக் கூறும் கசி, தாய்லாந்து, பிரேசில், மெக்சிகோ, ஜெர்மனி, இந்தியா, பொலிவியா, சீனா, பெய்ஜிங், மங்கோலியா, ஜார்ஜியா, லடின் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

பயணத்தின்போது பல சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்ததாக கூறும் கசி, மறக்க முடியாத சம்பவமாக வியட்நாமில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். 2014ம் ஆண்டு வியட்நாம் சென்ற போது அங்கு இருந்த குடியேற்ற அதிகாரிகள் கசியை நாட்டிற்குள் அனுமதிக்கவில்லையாம். அவர்கள், கசி அந்த நாட்டிலேயே புலம்பெயர்ந்து விடுவார் என எண்ணினர். கிட்டத்தட்ட 23 மணி நேர விசாரணைக்கு பின் அவர் அனுமதிக்கப்பட்டார். 23 மணி நேரம் அவர் விமான நிலைய சிறையில் இருந்ததாகக் கூறினார். இதே போன்ற நிகழ்வு சிப்ரஸ் எனும் நாட்டில் நடந்ததாகக் கூறினார்.

2014ஆம் ஆண்டு கசி கொலும்பியாவின் தலைநகரமான பொகோட்டாவிற்கு சென்ற போது அவரின் பணம் திருடு போனது பற்றி கூறினார். உடனடி உதவிகள் அவரின் வங்கியிடம் இருந்து கிடைக்காத்தால் சிறிதளவு பணத்துடன் கிட்டத்தட்ட ஒரு 17 நாட்களுக்கு பிச்சைக்காரியாக வாழ்ந்ததாகக் கூறினார். அப்போது அங்கு தங்கியிருந்த ஹோட்டல் ஓனர் அவருக்கு பாதி விலையில் தங்க இடம் கொடுத்ததாகவும், ஒரு கொலும்பியர் அவருக்கு உணவு அளித்தைதையும் பகிர்ந்து கொண்டார்.

கசி இந்தியாவில் கொல்கத்தா, டெல்லி, ராஜஸ்தான், ஆக்ரா, ஹம்பி, பங்களூரு, மதுரை ஆகிய நகரங்களுக்கு சென்றுள்ளார். வட இந்தியாவை விட தென் இந்தியா மிகவும் பாதுகாப்பனதாக உள்ளதாகக் கசி கூறினார். அவர் இந்தியர்களின் உணவு, பழக்கவழக்கம், விஷேசங்கள் ஆகியவை மிகவும் பிடித்ததாகக் கூறினார்.

மதுரை வந்த கசி மதுரை மக்களின் வரவேற்பைப் பர்றி மிகவும் பெருமையாகப் பேசினார். மதுரை மக்கள் மிகவும் பாசமாக இருப்பதாகக் கூறினார். மேலும் அவருக்கு இட்லி மிகவும் பிடித்த உணவு எனக் கூறினார். ஹம்பியில் உள்ள துங்கபத்ரா நதி அவருக்கு மிகவும் பிடித்தமான இடம் என்றார். எல்லா நாடுகளையும் சுற்றி வர வேண்டும் என்றும், இதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களும், நண்பர்களும் பணத்தை விட விலைமதிப்பற்றவர்கள் எனக் கூறினார்.

இதுவரை 115 நாடுகளுக்குச் சென்று திரும்பியிருக்கும் வங்கதேச பெண் கசி, உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் வெற்றிகரமாக பயணிக்க in4net.com தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

பேட்டி : சக்தி பரணி

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader