12.1 C
Munich
Monday, October 3, 2022

சுத்தமான இந்தியா திட்டத்தில் பொதிந்துள்ள தொழில் வாய்ப்புகள்

Must read

இந்தியாவும் சிங்கப்பூர் மாதிரி தூய்மையான நாடாக மாற வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஸ்விட்ச் பாரத் திட்டத்தில் பொதிந்துள்ள தொழில் வாய்ப்பைக் கண்டு கொள்ளாமல் விட்டுள்ளதுதான் அரசின் துரதிருஷ்டம்.
சுத்தமான இந்தியா உருவாக வேண்டுமென்றால், கழிவுகள் அகற்றப்பட வேண்டும். அந்த கழிவுகள் மூலமான தொழில் வாய்ப்புகள் ரூ.85,800 கோடி.

திடக் கழிவு மேலாண்மையை ஒரு தொழிலாக அரசு அறிவித்து அதற்கான வழிகாட்டுதலை உருவாக்கினால் பல்லாயிரக்கணக்கான வளம் கொண்ட இத்தொழிலின் மூலம் அரசுக்கு வருமானம் கிடைப்பதுடன் நாடும் சுத்தமாகும். திடக்கழிவு மேலாண்மையில் இப்போது சிறிய அளவிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அல்லது பெரிய நிறுவனங்கள் சில மட்டுமே ஈடுபட்டுள்ளன. ஆனாலும் இது தொழிலாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை, இது ஒரு தொழிலாக அறிவிக்கப்பட்டால்தான் அதில் தொழில் ரீதியிலான நிறுவனங்கள் ஈடுபடும். இதனால் முதலீடுகளும் வரும். குறைந்தபட்சம் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்குள்ள நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்கும்.

சிங்எக்ஸ் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இந்தியாவில் உள்ள திடக்கழிவு மேலாண்மை தொழிலில் உள்ள வாய்ப்பு, வளங்களை ஆராய்ந்து வருகிறது. இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மை என்பது பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் வருகிறது. சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாறுபாடு உள்ளிட்ட துறைகளோடு அந்தந்த மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் நகராட்சி அமைப்புகளுடன் தொடர்புடையதாக உள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 6 கோடியே 20 லட்சம் டன் திடக்கழிவு வெளியாகிறது. ஆனால் 4 கோடியே 30 லட்சம் டன் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. இதில் ஒரு கோடியே 20 லட்சம் டன் மட்டுமே மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மற்றவை அப்படியே கழிவாகக் கொட்டி வைக்கப்படுகிறது.இவ்விதம் கொட்டப்படும் கழிவுகள் 2050ம் ஆண்டில் 43 கோடி டன்னாக குவிந்து விடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கழிவுகளில் 45 லட்சம் டன் கழிவுகள் மிகவும் அபாயகரமான கழிவுகளாகும். இவற்றில் மருத்துவக் கழிவுகளும் அடங்கும். 30 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும், 32 லட்சம் டன் மின்னனு சார்ந்த கழிவுகளும் ஆண்டுதோறும் வெளியாகிறது.

ரூ. 85 ஆயிரம் கோடி அளவுக்கு தொழில் வாய்ப்பு

திடக்கழிவு மேலாண்மையில் பொதிந்துள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்திய நோவோனஸ் என்ற அமைப்பு 2025-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள திடக்கழிவு நிர்வாகம் மூலம் ரூ. 85 ஆயிரம் கோடி அளவுக்கு தொழில் வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் இத்துறை ஆண்டுக்கு 7 சதவீத வளர்ச்சியடையும் என்றும் தெரிவித்துள்ளது.

மற்ற திடக்கழிவுப் பொருள் மேலாண்மையைக் காட்டிலும் தகவல் தொழில்நுட்பப் பொருள்கள் அடங்கிய இ-வேஸ்ட் ஆண்டுக்கு 10 சதவீத அளவுக்கு வளரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல மருத்துவக் கழிவுகள் 8 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இ-வேஸ்ட் சந்தை அடுத்த 3 ஆண்டுகளில் 30 சதவீத அளவுக்கு வளரும் என மத்திய தொழிலாளர் அமைச்சகம் கணித்துள்ளது.

இந்தியாவில் வெளியேறும் குப்பைகளுக்கான சந்தை 10 கோடி டாலர் அளவுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அளவுக்கு தொழில் வாய்ப்புள்ள துறையை `சுத்தமான இந்தியா’ – கோஷத்தை முன்வைக்கும் எவருமே கண்டு கொள்ளவில்லை என்று இத்துறையைச் சேர்ந்த தனியார் நிறுவன நிர்வாகி ஒருவர் தெரிவிக்கிறார்.

பொதுவாக கழிவுகளில் பல வகை உண்டு. சில வகைக் கழிவுகளில் மதிப்பு மிக்க தாது, கனிமங்கள் இருக்கும். இத்தகைய கழிவுகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அங்கு இதில் உள்ள பிளாட்டினம், தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோக கனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இவை மீண்டும் இந்தியாவிடமே அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்கிறார்.

இதேவேளையில் மின்னணு கழிவுகளைக் கையாளும் முதலாவது தொழில்முறை நிறுவனமான எகோ ரீ சைக்ளிங் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த பி.கே. சோனி, இந்தியாவில் 3 கோடி பேர் கழிவுகளைக் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முறைசாரா தொழிலாக இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களது ஆயுள்காலம் அதிகபட்சம் 45 ஆக உள்ளது. இவர்கள் ஈட்டும் ஊதியத்தில் 30 சதவீதம் இவர்களது மருத்துவ செலவுகளுக்கே சென்று விடுகிறது என்றும் சோனி குறிப்பிட்டுள்ளார். குறைந்தபட்சம் கழிவு மேலாண்மைத் தொழிலை ஒரு தொழிலாக அரசு அங்கீகரிக்க வேண்டும். அப்போதுதான் இதில் உள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article