10.1 C
Munich
Monday, October 3, 2022

ஐஓசி இடத்தை யாராலும் பிடிக்க முடியாது ! யு.வி.மன்னூர்

Must read

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி). தமிழகத்தில் இரண்டு இடங்களில் எண்ணெய் சுத்திரிகரிப்பு ஆலைகளை வைத்துள்ள நிலையில் தற்போது திருநெல்வேலியில் புதிதாக எரிவாயு நிரப்பும் மையத்துக்கான பணிகளை நிறைவு செய்துள்ளது.
தங்களோடு தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டாலும் எங்களது இடத்தை பிடிக்க முடியாது என்று வெற்றி பேச்சை வித்திடுகிறார் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் (ஐஓசி) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான செயல் இயக்குநர் யு.வி மன்னுர்.

தமிழகத்தில் ஐஓசி மேற்கொள்ளும் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரபல ஆங்கில நாளிதலுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி.!

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விற்பனையில் ஐஓசியின் பங்கு என்ன?

தமிழகம், புதுச்சேரியைப் பொறுத்தமட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனையில் ஐஓசி முதலிடத்தில் உள்ளது. அதேபோல, நிறுவனத்துக்கு லாபம் ஈட்டித் தருவதிலும் தமிழகத்தின் பங்களிப்பு அபரிமிதமாக உள்ளது. தமிழக அரசுக்கு கடந்த ஆண்டில் ரூ.5,178 கோடி வரியாக செலுத்தியுள்ளோம் என்கிறார்.

ஐஓசியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டம் உள்ளதா?

ஐஓசி நிறுவனத்துக்கு தமிழகத்தில் மணலி, நரிமணம் ஆகிய 2 இடங்களில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. 9 இடங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பும் மையங்களும், 11 இடங்களில் சமையல் எரிவாயு நிரப்பும் மையங்களும், 7 இடங்களில் விமான எரிபொருள் நிரப்பும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைதவிர தற்போது திருநெல்வேலியில் புதிதாக சமையல் எரிவாயு நிரப்பும் மையம் அமைத்து வருகிறோம். அதற்கான பணிகள் முடிந்துவிட்டன. இது ஓரிரு மாதங்களில் செயல்படத் தொடங்கும்.

ஏழைகளுக்கு இலவசமாக சமையல் எரிவாயு, சிலிண்டர் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தால், தமிழகத்தில் பயன்பெறுவோரின் எண்ணிக்கைகள் குறித்த விவரம் உள்ளதா?

இதுதொடர்பான சர்வே தற்போது மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக வழங்கும் திட்டம் தமிழகத்தில் ஏற்கெனவே இருந்துள்ளது. நாட்டுக்கே தமிழகம்தான் முன் னோடியாகவும் விளங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் சுமார் 40 லட்சம் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது 92 சதவீதமாக உள்ளது. தேசிய சராசரி அளவைவிட இது மிக அதிகம். இங்குள்ள நகர்ப் புறங்களில் ஏறக்குறைய 100 சதவீதம் பேர் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். தென்மாவட்டங்களின் சில பகுதிகளில் மட்டும் குறைவாக உள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய திட்டத்தின்மூலம் 100 சதவீத சிலிண்டர் பயன்பாட்டினை கொண்டு வந்துவிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் சமையல் எரிவாயு பயன்படுத்துவோரின் தேவை அதிகரிக்கும் நிலையில், அவற்றை நிரப்பும் மையங்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்படுமா?

அதற்கான தேவை ஏற்பட வில்லை. தற்போது தேவைப்படும் அளவைவிட கூடுதலாக சேமித்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஐஓசி-யின் கட்டமைப்புகள் உள்ளன.

பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்து வருவதால் கூடுதலாக சில்லறை விற்பனை நிலையங்கள் அமைக்க வாய்ப்பு உள்ளதா?

தமிழகத்தில் தற்போது 2,081 சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றை அதிகப்படுத்தும் பணிகளை 2014-ம் ஆண்டே தொடங்கிவிட்டோம். நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிசான் சேவா கேந்திரா திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களிலும் 100 சில்லறை விற்பனை நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், ஒரு சிலர் இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகியதால் அந்த பணிகள் தாமதமாகின. நீதிமன்ற அனுமதியுடன் மிக விரைவில் இந்த 100 விற்பனை நிலையங்களும் அமைக்கப்படும்.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதாக பயனாளர்களிடமிருந்து அடிக்கடி புகார் வருகிறதே?

தற்போது 650 விநியோகிஸ்தர் கள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. பயனாளர்களின் எண்ணிக் கையைக் கணக்கில் கொண்டு, கூடுதலாக மேலும் 100 விநி யோகிஸ்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். மிக விரைவில் இதற்கான பணிகள் மேற் கொள்ளப்படும்.

பெட்ரோல், டீசல் விநியோகத்தின் போது சில விற்பனை நிலையங்களில் தவறுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுகிறதே? ஐஓசி விற்பனை நிலையங்களில் இதுபோன்ற புகார்கள் எழவே வாய்ப்பில்லை. எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள 824 விற் பனை நிலையங்கள் நவீனப் படுத்தப்பட்டுள்ளன. இங்கு 50 மி.லி குறைவாக அளித்தால்கூட இயந்திரங்கள் காட்டிக் கொடுத்து விடும். இதுதவிர புதுச்சேரி, கோவை, திருப்பூரிலுள்ள அனைத்து விற்பனை நிலையங்களும் தானியங்கி முறைக்கு (ஆட்டோமேசன்) கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஒவ்வொரு நொடியும் ஜிபிஎஸ் முறையில் கண்காணிக்கப்படுகின்றன. இதன்மூலம் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் நடைபெறுவதாக கூறப்படும் தனி மனித தவறுகள் முற்றிலும் களையப்படும். வெளிப் படையான நிர்வாகத்தை அளித்து, நுகர்வோருக்கு தரமான சேவை வழங்குவதே எங்கள் நோக்கம்.

சென்னையில் வெள்ளம் வந்த போது பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். இது போன்று மீண்டும் ஒரு இயற்கை பேரிடர் நிகழ்ந்தால் அதை சமாளிக்க எத்தகைய திட்டம் வைத்துள்ளீர்களா?

சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் எங்களுக்கு நல்ல அனுபவத்தை அளித்துள்ளது. அங்கு பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தபோது திருச்சி, பெங்களுரு, சங்ககிரி உள்ளிட்ட நகரங்களில் இருந்து எரிபொருளை வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விநியோகித்தோம். தமி ழகம், புதுச்சேரிக்கு உள்பட்ட பகுதிகளில் மீண்டும் அவ்வாறு ஒரு பேரிடர் நிகழ்ந்தால் அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். சென்னையிலிருந்து திருச்சி வழியாக மதுரை வரை குழாய்ப்பாதை (பைப்லைன்) பதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சென்னை, தூத்துக்குடியிலிருந்து கடல் மார்க்கத்திலோ, சாலை மார்க் கத்திலோ எரிபொருளை எடுத்துச் செல்வதற்கான திட்டமும் தயாராக உள்ளது.

ஐஓசி நிர்வாகத்தில் பசுமைத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் உண்டா?

நிச்சயமாக அளித்து வருகி றோம். நரிமணம் சுத்திகரிப்பு நிலையத்தில் சூரிய ஒளி மூலம் 4 மெகாவாட் அளவுக்கு மின் சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 220 விற்பனை நிலையங்கள் சூரிய ஒளி மின் உற்பத்தியுடன் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு விரும்பும் விநியோகிஸ்தர்களுக்கு வங்கி மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்து தருகிறோம்.

பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள திட்டம் குறித்து உங்களின் கருத்து என்ன?

இந்த திட்டத்தை செயல் படுத்தும்போது இரு சக்கர வாக னங்களின் எண்ணிக்கை நிச்சயம் பலமடங்கு உயரும். அதற்கு தேவையான அளவுக்கு பெட்ரோல் விநியோகம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இந்த திட் டத்தினால் பெண்களுக்கு பயன் கிடைப்பது மட்டுமின்றி, பெட்ரோல் விற்பனை மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.

பெட்ரோல், டீசல் விற்பனையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் எப்படி உள்ளது?

பெட்ரோல், டீசல் விற்பனையில் தனியார் நிறுவனங்களும் அதிக ளவில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்களால் பெரிய அளவில் சந்தையை பிடிக்க முடியவில்லை. எத்தனை தனியார் நிறுவனங்கள் வந்தாலும் ஐஓசி தான் முதலிடத்தில் இருக்கும். எங்களிடம் உள்ள மிகப்பெரிய நெட்வொர்க் மற்றும் வலுவான அடிப்படை கட்டமைப்புகளே இதற்கு காரணம் என்றார்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article