12.1 C
Munich
Monday, October 3, 2022

ஏமாற்றும் பிரபலங்களுக்கு 5 ஆண்டு சிறை

Must read

பொதுமக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது நுகர்வோர்கள் மத்தியில் வரபேற்பையும், பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிரடித் திட்டம்!

இதுவரை இந்தியாவில் வெளியாகும் விளம்பரங் களுக்குக் கட்டுப்பாடுகள் என்பதே இல்லாமலே இருக்கிறது. யார் வேண்டு மானாலும் எதை வேண்டு மானாலும் சொல்லலாம் என்கிற நிலையே இருக்கிறது. மக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரம் இருந்தால், அந்த விளம்பரம் குறித்து இந்திய விளம்பர தர கவுன்சிலுக்கு (ஏ.எஸ்.சி.ஐ) புகார் அனுப்பலாம். புகார் உண்மை என்று தெரியவந்தால், அந்த விளம்பரத்தை நாளிதழ், டிவி உள்பட அனைத்து ஊடகங் களிலும் வெளியிடத் தடை செய்யப்படுகிறது.

ஆனால், அதற்குள் அந்த விளம்பரம் பட்டித்தொட்டி எல்லாம் சென்றிருக்கும். அதன் மூலம் அந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனமும் லாபம் சம்பாதித்திருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்க பரிந்துரைப்பது குறித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அதிரடியாகத் திட்டமிட்டு வருகிறது.

இது பற்றி பிராண்ட்காமின் ஸ்தாபகரும் சி.இ.ஓ.வும், பிராண்ட் துறையில் முக்கியமான நிபுணருமான ஸ்ரீதர் ராமனுஜமிடம் கேட்டோம்.

இந்தியாவில் வெளியிடப் படும் விளம்பரங்களை எல்லாம் இந்திய விளம்பர தர கவுன்சில் (ஏ.எஸ்.சி.ஐ) என்ற ஒழுங்குமுறை அமைப்பு கண்காணித்து வருகிறது. என்றாலும் இந்த அமைப்பினால் தவறான, மக்களை ஏமாற்றும் வகையில் உள்ள விளம்பரங்களைத் தடை செய்ய முடியுமே ஒழிய, அதில் நடிக்கும் பிரபலங்களுக்கு தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்க முடியாது. ஏனெனில் இது ஒரு தன்னிச்சை யான அமைப்பு. இந்த நிலையில், மக்களை ஏமாற்றும் வகையில் உள்ள விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு விதிமுறைகள் வகுப்பது வரவேற்கத் தக்கதே.

மேனி பளபளக்க!

நம் நாட்டில் மக்களை ஏமாற்றும் வகையில் உள்ள விளம்பரங்கள் ஏராளம். ஒரு பிரபலம் நடிப்பதாலேயே அந்த பொருள் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடுகிறது. ஒரு சிகப்பழகு ஸ்கீரிமை பயன்படுத்தினால் ‘சில வாரங்களில் உங்கள் மேனி பளபளவென்று மாறும்’ என்று விளம்பரம் செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட பானத்தை குடித்தால் “உங்கள் குழந்தை டபுள் வளர்ச்சி அடையும்” என தவறாகவே விளம்பரம் செய்கின்றனர். இவ்வாறு நுகர்வோர்களை ஏமாற்றும் வகையில் விளம்பரம் செய்வது சரியில்லை

அமெரிக்காவில் எந்தவொரு பிரபலமாக இருந்தாலும் ஒரு காரை விளம்பரப்படுத்துகிறார் எனில், அந்த காரை அவர், ஓட்டிப் பார்க்க வேண்டும். அதன்பின் அந்த கார் எப்படி இருந்தது என்று அந்த பிரபலம் கூறுவதன் அடிப்படையிலேயே அந்த காரை விளம்பரம் செய்வார்கள். ஆனால், இதுபோன்ற நடைமுறை இந்தியாவில் கடைபிடிப் பதில்லை.

சச்சினுக்கு வாகனமே ஓட்ட தெரியாது!

சச்சின் டெண்டுல்கர் இரு சக்கர வாகன விளம்பரத்தில் நடிக்கிறார். அதனால் அவர் ரசிகர்கள் அதை வாங்குகிறார்கள். இதனால் அந்த இரு சக்கர வாகனத்தின் விற்பனை அதிகளவில் நடக்கிறது. ஆனால், உண்மையில் சச்சினுக்கு இரு சக்கர வாகனமே ஓட்ட தெரியாது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? பைக் ஓட்ட தெரியாத ஒருவரை விளம்பரத் தூதராக நியமித்து அவர், இந்த பைக் ரொம்ப நல்ல பைக்.. என விளம்பரம் செய்வது எல்லாம் மக்களை ஏமாற்றும் செயலே.

பிரபலங்கள் மக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரங்களில் நடித்தால் சிறை தண்டனை தருவது சரியான முடிவாக இருக்காது. இது குறித்து நன்கு விவாதித்து அதன்பின்னர் முடிவு செய்ய வேண்டும். பிரபல நடிகைகள் சொல்கிறார் என்ப தற்காக அழகு சாதனப் பொருட்களை வாங்குகிறோம். அதற்காக அவர்களை சிறைக்கு அனுப்புவது எல்லாம் நிச்சயம் சரியாக இருக்காது.

இனி பிரபலங்களுக்கு பிரச்னை!

ஒரு விளம்பரத்துக்கு ரூ.5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் பிரபலங்களுக்கு ரூ50 லட்சம் அபராதம் ஒரு பெரிய தொகையாக இருக்காது. தற்போதைக்கு பிரபலங்களுக்கு அபராதம் மட்டுமே விதிப்பது நல்லது. ஆனால், இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் இனி பிரச்னையில் சிக்க வாய்ப்புண்டு. அவர்கள் இனி கொஞ்சம் கவனமாக இருப்பது மிக அவசியம்” என்றார்.

மத்திய அரசாங்கம் இப்போது கொண்டுவரவிருக்கும் அதிரடி நடவடிக்கைகளால் நுகர்வோரை ஏமாற்ற நினைக்கும் விளம்பரங்கள் குறையும் என்று எதிர்பார்ப்போமாக!

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article