Primary Menu

Top Menu

September 23, 18

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!!

மோதகப் ப்ரியன்’ விநாயகப் பெருமானைப் போற்றி மகிழும் விநாயகர் சதுர்த்தி
திருநாளை, பொன்னாளாக கொண்டாட உதவும் வகையில், ’30 வகை
கொழுக்கட்டை’களை வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் சீதா சம்பத்.
”ஆவியில் வேக வைப்பதால், கொழுக் கட்டை எளிதில் ஜீரணமாகும். எனவே, விருப்பப்படும் நாட்களில் எல்லாம் செய்து பரிமாற… பீட்ரூட் கொழுக்கட்டை, சேமியா கொழுக்கட்டை, ட்ரை ஃப்ரூட்ஸ் கொழுக் கட்டை என வெரைட்டியாக கொடுத் துள்ளேன்.

விநாயகர் அருளால் உங்கள் இல்லத்தில் எல்லா வளமும் நிறைந் திருக்கட்டும்” என்று மனமார வாழ்த்தும் சீதாவின் ரெசிபிகளை, உள்ளத்தை கொள்ளை கொள்ளும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

புரோட்டீன் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், சோயா பீன்ஸ் – அரை கப், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, தண்ணீர் – ஒன்றரை கப், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோயா பீன்ஸை ஊற வைத்து, ரவை போல கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து இதனுடன் கலக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அத்துடன் அரைத்த சோயா பீன்ஸ் விழுது சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளி போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாகும் வரை கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.கடாயில் தண்ணீர் விட்டு, சிறிதளவு உப்பு, ஒரு டீஸ் பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கிளறி எடுக்கவும். ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து அதில் சோயா பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுத்தால்… புரோட்டீன் கொழுக்கட்டை தயார்.

குறிப்பு: சத்தான, புதுமையான இந்தக் கொழுகட்டை, எல்லோருக்கும் ஏற்றது. எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது.

பீட்ரூட் கொழுக்கட்டை

தேவையானவை: பீட்ரூட் துருவல், அரிசி மாவு – தலா ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 10.

செய்முறை: அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டவும். அரிசி மாவுடன் பீட்ரூட் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, நெய் விட்டு கலந்து… வடிகட்டிய வெல்லக் கரைசலை அதில் விட்டு, கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கலவையில் சிறிது சிறிதாக எடுத்து உருட்டி, லேசாக தட்டி, ஆவியில் வேக வைத்து எடுக் கவும். மேலே முந்திரிப்பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.
ஹெர்பல் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், கொத்தமல்லி இலை – ஒரு கப், புதினா – கால் கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 4, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தண்ணீர் – ஒன்றரை கப், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாயை சுத்தம் செய்து ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு உப்பு, சிறிதளவு எண்ணெய், அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும் (ஒரு கொதி போதுமானது). இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கெட்டியாக கிளறி எடுத்து ஆறவிடவும். கையில் எண்ணெயை தடவிக் கொண்டு கலவையில் சிறிது எடுத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்தால்… ஹெர்பல் கொழுக்கட்டை தயார்.

குறிப்பு: இது, நல்ல வாசனை யாகவும் ருசியாகவும் இருக்கும். பித்தத்தை தணிக்கும். பசியைத் தூண்டக்கூடியது.

Comments

ஆயுளைக் கூட்டும் ஆட்டு மூளை ரோஸ்ட்!

ஆட்டு மூளையில் கொழுப்பு மிகவும் குறைவு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon