Primary Menu

Top Menu

September 20, 18

சுற்றுலாதலங்கள் நிறைந்த திருச்சி

திருச்சிராப்பள்ளி என்பதன் பொருள், திருச்சிராய்பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன.

இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் பாய்ந்து வளப்படுத்துகின்றன. துப்பாக்கித் தொழிற்சாலையும், பொன்மலை ரயில்வே பணிமனையும், புகழ் பெற்ற என்ஐடியும் இங்குள்ளது. மேலும் சர்வதேச விமான நிலையமும் இங்கு அமைந்துள்ளது. இது தாயுமானவர் வாழ்ந்த பூமியாகும்.

திருச்சியில் சுற்றுலாத் தலங்கள்

மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், முக்கொம்பு, கல்லணை, வயலூர் முருகன் கோயில்

கோயில்கள்: மலைக் கோட்டை தாயுமான சுவாமி கோயில்,  சமயபுரம் மாரியம்மன் கோயில்,  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில்,  உறையூர் வெக்காளி அம்மன் கோயில், திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில், வயலூர் சுப்ரமணிய சுவாமி கோயில், உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயில், மாந்துறை ஆம்ரனேஸ்வர சுவாமி கோயில்,உத்தமர் கோயில்,குணசீலம் வெங்கடாசலபதி கோயில்.

மலைக்கோட்டை

திருச்சியின் அடையாளமாய் திகழ்வது மலைக்கோட்டையாகும். மலைப்பாறை ஒன்றன் மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு தொகுதி மலைக்கோட்டை. நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது.

இம்மலைக் கோட்டையில் பல்லவர் காலக் குடைவரைக் கோயில் ஒன்றும், நாயக்கர் காலக் கோட்டை ஒன்றும் உள்ளன. 18ஆம் நூற்றாண்டில், திருச்சி அநேகமாக ஆங்கிலேயரின் ஆளுமையின் கீழ் வந்து  விட்டது. மலைக்கோட்டையின் கதவு முதன்மை அரண் கதவு (Main Guard Gate)  எனப்படலானது. இன்றும் அது அப்பெயரிலேயே வழங்கப்படுகிறது. இதனருகிலேயே  ராபர்ட் கிளைவ் வாழ்ந்ததாகக் கூறப்படும் இடமும் உள்ளது. மலைக் கோயிலை  ஒட்டிய மேற்கு வீதியில் உள்ள தெப்பக்குளத்தின் அருகில் இது உள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் ஏழு சுற்றுப் பிரகாரங்கள், 21 கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. 14ம் நூற்றாண்டு மற்றும் 17ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. சேரர்கள், பாண்டியர்கள்,சோழர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோரின் ஆட்சியில் இக்கோவில் படிப்படியாக, கட்டப்பட்டதாக கோயில் வரலாறு தெரிவிக்கிறது. 1987ம் ஆண்டு கட்டப்பட்ட கோவிலின் தெற்குப் பகுதியில் ராஜ கோபுரம் கட்டப்பட்டது. இதன் உயரம் 73 மீட்டராகும்.

இந்தியாவிலேயே மிக உயரமான கோபுரம் இதுதான். இக்கோவிலின் முக்கிய தெய்வம் விஷ்ணு என அழைக்கப்படும் பெருமாள். இருப்பினும் மத வேறுபாடுகளைக் கடந்து இஸ்லாமியர்களும் இக்கோயிலுக்கு அதிக அளவில் வருகின்றனர்.  விஜய நகரப் பேரரரசு வீழ்ச்சியடைந்த பிறகு அதிகளவில் இஸ்லாமியர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டதாக வரலாறு உண்டு.

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் கட்டப்படும் போதே, இக்கோயிலும் கட்டப்பட்டது. இது சிவன் கோவிலாகும். ஏழு கோபுரங்களைக் கொண்டது. நீரில் மூழ்கிய நிலையில் உள்ள சிவலிங்கம் இக்கோயிலின் சிறப்பம்சமாகும். வெக்காளியம்மன் கோயில்: உறையூர் வெக்காளியம்மன் கோவில் திருச்சி நகரின் முக்கிய கோயில்களில் ஒன்று.

சமயபுரம் மாரியம்மன் கோயில்: திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது.

வயலூர் முருகன் கோயில்: திருச்சி அருகேயுள்ள, பசும் வயல்கள் நடுவே அமைந்துள்ள வயலூர் முருகன் கோயில், பார்ப்பவர் கண்களுக்கு இதமான உணர்வைக் கொடுக்கும். இக்கோயிலில் வந்து வேண்டிக்கொண்டால் எதுவாக இருந்தாலும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு.

பாய்லர் ஆலை: திருவெறும்பூர் பாரத மிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.), பொன்மலை ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலை ஆகியவை திருச்சி நகரின் பிற அடையாளங்கள்.  திருச்சியிலிருந்து அரை மணி நேரப் பயண தூரத்தில் உள்ள மற்றொரு சுற்றுலா தலம், முக்கொம்பு. திருச்சி வருபவர்கள் இங்கு செல்லாமல் இருக்க முடியாது என்ற அளவில் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய வகையில், முக்கொம்பு உள்ளது.

திருச்சியில் கல்வி வசதிகள் சிறப்பான வகையில் உள்ளது. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கம்ப்யூட்டர் துறை பிரபலமானது. இது தவிர, பிராந்திய பொறியியல் கல்லூரி (என்ஐடி), தேசியக் கல்லூரி, ஜமால் கமது கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, உரு தனலட்சுமி கல்லூரி, ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி ஆகிய கல்லூரிகள் பிரபலமானவை.

Comments

சென்னூங்சியா இயற்கைக் காடு !

சீனாவின் நடுப்பகுதியிலுள்ள ஹுபெய்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon