Primary Menu

Top Menu

September 26, 18

டாடா `இண்டிகா’ வுக்கு டாட்டா !

1991-ம் ஆண்டு குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற ரத்தன் டாடாவின் முழு முயற்சியால் வெளியானதுதான் இண்டிகா. அம்பாசிடர் காரை போன்ற ஸ்திரத்தன்மையும் அதற்குரிய இன்ஜின் நுட்பத்துடனும், மாருதி ஜென் மாடல் காருக்கு இணையான தோற்றத்தையும் ஒருங்கே கொண்டதாக இண்டிகா கார் இருந்தது.

1998-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் அப்போது மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் காரை அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் `கோஹினூர் வைரம்’ என்று இந்த காரை அவர் வர்ணித்தார்.

டாடா மோட்டார்ஸ் தயாரிப்பின் மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்த காரைப் பார்க்க அலைமோதிய கூட்டமே இதற்கு மிகச் சிறந்த சான்றாகும். அதே ஆண்டில் ஹூண்டாய், தேவூ, டொயோடா நிறுவன கார்கள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இண்டிகா காரை காண வந்த கூட்டமே அதிகம். முதலாவது ஹேட்ச்பேக் மாடலும் இதுவே. அதுவும் டீசல் இன்ஜினை கொண்ட மாடலாக இது இருந்தது பலரையும் கவர்ந்தது.

இண்டிகா அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே மாருதி நிறுவனம் தனது பிரபல மாடலான 800 மற்றும் ஜென் மாடல் கார்களின் விலையையும் குறைத்ததற்குக் காரணமே இந்த கார் ஏற்படுத்திய தாக்கமே. தொடக்கத்தில் இந்த கார் அதிக இரைச்சலை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தாலும் நாளடைவில் அது சரி செய்யப்பட்டதால் விற்பனை அதிகரித்தது. அறிமுக விழாவிலேயே ஒரு லட்சம் பேர் முன் பதிவு செய்ததும் இந்த காருக்குத்தான்.

ஏறக்குறைய 20 ஆண்டுகளாக மிகவும் பிரபலமான மாடலாக இது திகழ்ந்தது. சிறிய ரக கார்களில் அதுவும் டீசல் மாடல் காராக இண்டிகா இருந்ததால் வாடகை கார் இயக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் டாடா இண்டிகா காரைதான் தேர்வு செய்தன. பராமரிப்பு செலவு குறைவு போன்ற பல சாதக அம்சங்களும் இதற்கு இருந்ததால் வாடகைக் கார் ஓட்டுநர்கள் இந்த காரைத்தான் முதலில் தேர்வு செய்வர்.

இந்த காருக்கு மாற்றாக 2014-ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் ஜெஸ்ட் மற்றும் போல்ட் ஆகிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தியபோதிலும் இண்டிகா கார் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டது.

சமீப காலமாக இண்டிகா காருக்கான முன்பதிவு குறைந்ததைத்தொடர்ந்து இந்த கார் உற்பத்தியை நிறுத்தி விட்டதாகவும், ஏற்கெனவே இந்த கார்களை பயன்படுத்துவோருக்குத் தேவையான உதிரி பாகங்களை நிறுவனம் தயாரித்து அளிக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

செடான் பிரிவில் இண்டிகோ கார் மிகச் சிறந்ததாக இருந்தது. ஆனால் சமீப காலமாக இந்த காருக்கும் மவுசு குறைந்ததைத் தொடர்ந்து இதன் உற்பத்தியையும் டாடா மோட்டார்ஸ் நிறுத்தியுள்ளது. 2002-ம் ஆண்டில் இண்டிகோ அறிமுகம் செய்யப்பட்டது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இவற்றுக்கு மாற்றாக டியாகோ, ஹெக்ஸா, டிகோர் மற்றும் நெக்ஸான் கார்களை அறிமுகம் செய்து அவற்றை பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நான்கு மாடல் கார்களும் டாடா மோட்டார்ஸின் புணே ஆலை மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்த் ஆலையில் தயாரிக்கப்படுகின்றன.

2017-ம் ஆண்டில் மொத்தமே 19,042 இண்டிகா கார்கள்தான் உற்பத்தி செய்யப்டப்டுள்ளன. ஆனால் 2018-ம் ஆண்டில் இதன் உற்பத்தி 1,686 ஆக சரிந்துவிட்டது. இதேபோல இண்டிகோ கார் 2017-ல் 14,976 உற்பத்தி செய்யப்பட்டன. 2018-ல் இது 556 ஆகக் குறைந்து விட்டது.

1983-ம் ஆண்டு தயாரான மாருதி நிறுவனத்தின் 800 மாடல் கார் 2014-ம் ஆண்டுதான் நிறுத்தப்பட்டது. இதேபோல சிறிய ரகக் கார் பிரிவில் பிரபலமான இண்டிகாவும் இனி கிடைக்காது என்பது சற்று வருத்தமான விஷயம்தான்.

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon