Primary Menu

Top Menu

August 18, 18

மதுரையும் சிறு தெய்வங்களும்

#மதுரை நகரம் ஒரு காலத்தில் பெரிய கிராமமாக இருந்தது.
இயற்கையின் மீதான பக்தியும், #தெய்வ நம்பிக்கையும், #நேர்மையும், தான் பசி கொண்டாலும் பிறர் பசியைக் காணப் பொறாத #பரந்த உள்ளமும் கொண்டிருந்தனர்.
 வணிக நேர்மை இருந்தது. பக்கத்துக் கிராமங்களில் விளைந்த பொருட்களைச் சந்தைப் படுத்துவதற்காக மதுரையைத் தான் நாடியும் நம்பியும் வந்தனர்.
இன்றும் அது தொன்ம வழக்கமாக நீடித்து வருகிறது. மதுரையின் மேன்மையே நீதிக்காக உயிர் விட்ட மன்னன் வாழ்ந்த பூமி. சோனகரும், யவனரும் வணிக நிமித்தம் வந்த ஊர் என்பதாகும்.
பூம்புகாரில் வாழ்வைத் தொலைத்த கண்ணகி கணவன் கோவல னோடு இழந்த வாழ்வை மீட்டெடுக்க மதுரைக்குத் தான் வந்தாள். வருவாரை வருகவென்றழைக்கும் விதத்தில் ஆடும் பலவண்ணக் கொடிகளும் கோட்டை கொத்தளங்களும் நாளங்காடி (பகல் நேர) கடை களும் அல்லங்காடி என்னும் இரவில் வணிகர்கள் நடத்தும் கடைகளும் மதுரைப் பொருளாதார மேன்மையைப் புலப்படுத்துகின்றன.
இசைவாணர் களின் யாழொலியும் குரல் விற்பன்னர்களின் இசைப் பாடல்களும் ஒலிக்கும் மதுரைத் தெருக்களில் சிலம் பொலிக்க வந்த கண்ணகியை இன்றைய வடக்கு மாசி வீதியான அன்றைய பகுதியில் கோவலன் இடைக்குலமங்கை மாதரி வசம் அடைக்கலமாக ஒப்படைத்த பின் நகருக்குள் சென்றதாகச் சிலப்பதி காரத்தின் மதுரைக் காதை பகர்கிறது.
ஒரு முலை எறிந்து மதுரையை எரித்த திருமா பத்தினி கண்ணகி, பசு, பத்தினிப் பெண்டிர், அறவோர், அந்தணர், குழந்தைகள் நீங்கலாகத் தீத்திறத்தார் பக்கமே சேர்க என்று கூறி மதுரையை எரித்த போது எரியாத பகுதிகளில் இப்பகுதியும் ஒன்று.
இப்பகுதி இன்று செல்லத்தம்மன் கோவில் தெரு என்று அழைக்கப்படுகிறது. பத்தினிக் கண்ணகிக்குத் திருவுருவச் சிலை இங்கே தான் உள்ளது.
இன்று பல குலப்பெண்களும் திரண்டு வந்து திருவிளக்கு வழிபாடும் விழாக்களுமாக அமர்க்களப்படுத்துகின்றனர். சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய இப்பகுதியின் இக்கோவில் சிறு தெய்வக் கோயில்களில் சிறப்பிடம் பெறுகிறது.
ஆயிரம் வீடுகளைக் கொண்ட யாதவர்கள் தீப்பந்த வெளிச்சத்தில் இராமாயணம் படித்து விரிவுரை சொல்லிய இராமாயணச் சாவடி இப் பகுதியில் தான் உள்ளது. பெருந்தெய்வம் திருமால் பற்றிய அழகர்வர்ணிப்புப் பாடலை இப்பகுதிப் பெரியவர்கள் இசையோடு பாடக்கேட்பது மன திற்குக் கிளர்ச்சியூட்டுவதாகும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள தேரடி முத்தையா சன்னதியும் வெண்ணெய்க்காளியும் சிறு தெய்வ வரிசையில் இடம்பெற்றவர்கள். இவர்களை வழிபட்ட பின்னரே இன்றளவும் மக்கள், பெருந்தெய்வம் முருகனைக் காணச் செல்கின்றனர்.
இப்பகுதி புகைவண்டிப் பாதை அருகே அமைந்த வெயில் உகந்த அம்மன் மதுரையை நோக்கிய வாறு நின்ற கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளாள். நாள்தோறும் பொங்கலிடல், காது குத்துதல், அன்னதானம் என்று இக்கோவில், மக்களால் நிறைந்து நிற்கிறது.
#எத்தைத் #தின்றால் #பித்தம் #தெளியும் என்ற மனச்சிக்கலிலும் வாழ்க்கைப் போராட்டங்களிலும் தங்களை வருத்திக் கொள்கிற மக்களின் கடைசி நம்பிக்கை தெய்வ நம்பிக்கை என்று மானுடவிய லாளர் கூறுகின்றனர்.
#சிறு #தெய்வங்களே தம்மை விரைவில் காக்கும் என்ற முடிவில் தான் மக்கள் ரேஷன் பொருளும், ஏன் ஆதார் அட்டை கிடைக்கா விட்டால் கூடக் குறிகேட்கிற நிலைமையில் உள்ளனர்,
 ஜோதிடம், முத்துப் (சோழி) போட்டுப் பார்த்தல், அலகு குத்துதல், காவடி சுமத்தல், பாதயாத்திரை செல்தல் போன்றவற்றால் தங்களின் வாழ்க்கைச் சிக்கல் தீரும் என்று நம்புகின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கிழக்குக் கோபுர மதில் சுவரை ஒட்டி இருப்பவைகள் சுடலை மாடன் கோவிலும் மதுரை வீரன் கோவிலுமாகும்.
திருமலை மன்னர் மதுரையை ஆண்ட போது அவரிடம் காவல் வீரனாக இருந்த அருந்ததியர் சமூகம் சார்ந்த மதுரை வீரன் மீது தளபதி சூழ்ச்சி யாக மன்னரிடம் பழி கூற மன்னர் மதுரை வீரனுக்கு மாறுகால் மாறுகை வாங்கக் கட்டளை யிட்டதாகவும் இவ்வாறே வெட்டுப்பட்ட மதுரை வீரனுடன் அவனது மனைவியர் வெள்ளையம் மாளும் பொம்மி என்பாளும் உயிர் நீத்தனர்.
பின்னர் மன்னர் தனது தவறுணர்ந்து தளபதியைத் தண்டித்த பின் மதுரை வீரனுக்குச் சிற்றாலயம் எழுப்பியதாகவும் மதுரை வீரன் கதை கூறுகிறது.
தலித்களும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் நாள் தோறும் வந்து வணங்குகிற இக்கோவில் மதுரை வரலாற்றோடு சம்பந்தப்பட்டது என்பார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் அரண்மனை வேலைக்கு வரக்கூடாது என்ற உயர் சாதி சூழ்ச்சி தளபதி மூலம் நிறைவேறியதாகச் சொல்லப்படுவது கூர்ந்து கவனிக்கத்தக்கது.
திருமலை நாயக்கர், பண்டார வகுப்பினர்கள், பிற்பட்டவர்களை அரசுப் பணி, ஆலயப் பணிகளில் ஈடுபடச் செய்ததாகவும், இது பிடிக்காத உயர் சாதி மனிதர்கள் அவர் தனது அரண்மனையிலிருந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகிறபோது சுரங்கப் பாதையை மூடிவிட்டதாகவும் மதுரையில் ஒரு கதை உண்டு.
இச்சுரங்கப் பாதை சொக்கநாதர் சன்னதியின் வடபுறம் மகாலெட்சுமி சன்னதி அருகே “பொற்படியான்” என்ற சிறிய கதவை உடையதாக உள்ளது.
சுரங்க வாயிலைக் கூட பொற்படியான் சன்னதியாக்கிவிட்ட புத்திசாலி களின் சாகசம் உண்மையிலேயே வியப்பைத் தருகிறது. இதை வரலாற்றாய்வாளர்கள் சுரங்கப் பாதையைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் வடக்குப் பகுதி கோபுர வாயிலின் மேல்புறம் வடக்குக் கோபுரம் என்கிற மொட்டைக் கோபுரம் முனீஸ்வரர் கோவில் உள்ளது. மொட்டைக் கோபுரம் என்ற பெயருக் கேற்ப இக்கோபுரத்தில் பிற கோபுரங்களைப் போலச் சுதைச் சிற்பங்கள் கிடையாது.
மாடம் போன்ற அமைப்பும் தூண்களும் அமைந்துள்ள கோபுரத்தில் வெள்ளி செவ்வாய் மற்றும் விழா நாட்களில் கோபுரத்தின் உச்சியிலிருந்து முனீஸ்வரர் சன்னதி வரை பூ மாலைகள் பூச்சரங்களாய்த் தொங்கி நிற்கும்.
சிறிய பலிபீடமும் ஒரு ஆள் மட்டுமே அமரக்கூடிய இடத்தில் முனியாண்டி சிலையும் அலங்காரத்தோடு அமைந்துள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள முனீஸ்வரர் கோவில்களுக்கெல்லாம் இந்த முனீஸ்வரரே தலைமையாக உள்ளார் என்று நம்புகின்றனர்.
சிலையின் இரு பக்கங்களிலும் கதைகள், அரிவாள்கள் உள்ளன. முறுக்கிய மீசையும் வீரத்தை வெளிப்படுத்தும் விழிகளும் கவசங்களோடும் பாதுகைகளோடும் நிற்கும் முனீஸ்வரர் கோவிலை நெருங்கும் போதே பெண்கள் சிலர் குலவையிடு வதையும் சாமியாடுவதையும் காணலாம்.
இக்கோவில் மூலவர் முனீஸ்வரர் வடக்குக் கோபுரத்திலேயும் சிலையாக வடிக்கப்பட்டுள்ளார். வடக்கு கோபுரம் எவ்வளவு முயன்றும் கட்ட முடியாமல் தடைப்பட்ட போது,
இக்கோபுரத்தைத் திருப்பணி செய்த #நாகப்ப செட்டியார் இங்கு முனீ சுவரர் சாந்நித்யம் இருப்பதை அறிந்து முனீஸ்வரருக்கு ஒரு #உறுதிமொழி கொடுத்தார்.
இக்கோபுரம் போது முனீஸ்வரருக்கும் சன்னதி எழுப்பப்படும் எனச் சத்தியம் செய்தபடி இப்போதுள்ள மகா முனீஸ்வரர் ஆலயத்தை வடக்கு வாசலை ஒட்டி எழுப்பினார்.
இக்கோவில் கட்டப்பட்ட காலந் தொட்டு, யாழ்கீத சுந்தரம் குடும்பத்தினர் தான் பூசனை செய்தல், பூ மாலைகள் அபிஷேகப் பொருட்கள் கொடுத்தல், விழா நடத்துதல் போன்ற வற்றைச் செய்து வருகின்றனர்.
எட்டு தலை முறையாக இவர்கள் குடும்பப் பணி தொடர்கிறது.
மீனாட்சியம்மன் கோவிலில் பணியாற்றும் பட்டர்கள் எனப்படும் அர்ச்சகர்கள் பலருக்கு மகா முனீசுவரரே குல தெய்வமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிராமண சமூகத்தினர் பலருக்கு சிறு தெய்வங்கள் குல தெய்வமாக உள்ளது ஆய்வுக் குரியது. ஆனால் அவர்கள் பெருந்தெய்வக் கோவில் அர்ச்சகர்களாக இருக்கின்றனர்.
இக்கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமல்லாது, இஸ்லாமியர், கிறிஸ்துவ மதத்தினரும் வருகின்றனர். பிறந்த குழந்தைகளை, பிறந்து 31 நாட்கள் கழித்த பின் இக்கோவிலில் தான் சன்னதி முன் கிடத்தி வணங்குவர். இதன் மூலம் இக்குழந்தை நலனை முனீசுவரரே பேணுவார் என்று நம்புகின்றனர். சுற்றுலாப் பயணிகள் இங்கே வந்து செல்கின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தாண்டி மேலமடையில் ரிங் ரோட்டின் மேல் பாண்டி முனிகோவில் உள்ளது. மதுரையின் துடியான (கோப)சாமி என்று மக்களிடையே வழக்கு உள்ளது.
 கிழக்குப் பார்த்த பெரிய மாடம் போன்ற இடத்தில் உயரமான பீடத்தில் அமர்ந்த நிலையில் பாண்டிய முனி சிலை அமைக்கப் பட்டுள்ளது. பாண்டி(யன்) நாட்டு மக்களைப் பாண்டி முனி காப்பான் என்று தென்மாவட்ட மக்கள் மிகவும் நம்புகின்றனர்.
இக்கோவில் எப் போதும் விழாக்கோலம் பூண்டு ஒரே கொண்டாட்ட மாக இருக்கிறது. முனி என்பதற்குச் சினம் என்ற பொருளும் உண்டு.
பிராமணரல்லாத பெருவாரியான மக்கள் தான் சாதி வேறுபாடின்றி இங்கே வழிபாடு செய் கின்றனர். ஆடு, கோழி, உயிர்ப் பலியிடலைத் தமிழக அரசு தடை செய்த போது இக்கோவிலுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டது. பின்னர் இது மக்கள் பிரச்சினை, மத நம்பிக்கை சார்ந்தது என்று அரசு தடையை விலக்கிக் கொண்டு ரத்து செய்து அரசாணை பிறப்பித்தது.
முனிப்பாண்டி, செல்லப்பாண்டி, தங்கப்பாண்டி என்று இத்தெய்வம் சார்ந்தே பெயர் சூட்டுதல் இக்கோவில் வழிபடுவோரின் வழக்க மாக இருக்கிறது. பாண்டிய முனியின் எதிரில் உள்ள பகுதியில் லாட சன்யாசி, இருளப்பன் என்றெல்லாம் சிறு தெய்வங்கள் உள்ளன.
இப்பாண்டி முனி, #பாண்டியன் #நெடுஞ்செழியன் மறு பிறப்பு என்றும் பாண்டிய நாட்டுச் சித்தர் ஒருவர் முனிவர் என்ற பெயரைத் தாங்கியும் இருப் பவர் என்றும் செவி வழிக்கதைகள் சொல்லப் படுகின்றன.
இக்கோவிலில் குறி சொல்வது, அருள் வாக்கு உரைப்பது, நல்ல செயல்களில் ஈடுபடும் முன் பூக்கட்டிப் போட்டுப் பார்ப்பது என்பதோடு மட்டுமல்லாமல் நீதிமன்றங்களுக்குச் செல்ல விரும்பாத மனிதர்கள் இக்கோவிலில் வந்து தங்கள் பிரச்சினை களைப் பஞ்சாயத்து மூலம் பாண்டி முனி முன்னி லையில் பேசித் தீர்த்துக் கொள்கின்றனர்.
தனியார் வசமிருந்த இக்கோவில் இன்று அற நிலையத்துறை கண்காணிப்பில் உள்ளது. மதுரையின் கிராமியப் பண்பாட்டில் பாண்டி முனி கோவில் முக்கிய பங்கே வகிக்கிறது.
இதே போல மதுரை நகரின் பல பகுதிகளில் முனியாண்டி, பாண்டி முனி கோவில் பல பெயர் களில் உள்ளன. சடையாண்டி முனி, செவிட்டு முனி, அய்யனார் என்று பல தெருக்களில் வழிபடப் படுகின்றன. செம்பியன் கிணற்றுத் தெருவில் உரல் சோணை முனி பிரசித்தம்.
அரசியோ அல்லது அரச குடும்பத்தின் மூத்த பெண் வாரிசோ இறந்துவிட்டால் அவர்களைப் புதைத்துக் கோவில் எழுப்புவார்கள். பிறகு இந்த இடங்களைப் பட்டத்தரசியம்மன் என்றோ பட்டத் தளைச்சி அம்மன் என்றோ பெயர் சூட்டி வணங்க, மக்களும் வணங்குவார்கள் என்று சிறு தெய்வம் பற்றிக் கூறும் போது கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
தமிழகம் முழுவதும் மாரியம்மனுக்குத் தனிக் கோயில்களும் வழிபாடுகளும் நிறைய உண்டு. தெருவிற்கு ஒரு மாரியம்மனாவது கோவில் கொண்டிருப்பாள்.
பெண் தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தரும் மதுரையில் மாரியம்மன் கோவில்கள் அதிகம். தண்டு மாரி, தங்க மாரி, பூமாரி, வண்டியூர் மாரியம்மன் என்ற வரிசையில் நேதாஜி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் வரலாற்றோடு இணைந்தது.
மதுரைக் கோட்டையில் காவலுக்காகத் தண்டு இறங்கும் (முகாம்) படை வீரர்கள் கோட்டையின் எதிரில் உள்ள இந்த மாரியம்மனை வழிபட்டதாக வயதான பெரியவர்கள் இன்றும் நினைவு கூர்கிறார்கள்.
மதுரையின் கிழக்கு எல்லைத் தெய்வமாக உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் தென் மாவட்டங் களில் பிரசித்தி பெற்றது.
மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் நாற்பது ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட தெப்பக்குளத்தின் வடகரையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு வழி பாட்டிற்காகவும், மொட்டை எடுத்தல் முதலிய நேர்த்திக்கடன்களுக்காகவும் மக்கள் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஆடி மாதங்களில் திருவிழாக் கூட்டம் திரளும்.
இக்கோவிலின் பின்புறம் கால பைரவர் கோவில் உண்டு. கீழ ஆவணி மூல வீதி கால பைரவர், மீனாட்சியம்மன் கோவில் சாமி சன்னதி எதிரில் உள்ள பைரவர் கோவில் போன்றவை சிறு தெய்வ வரிசையில் இடம் பெற்றிருப்பவைகள்.
தம்மைக் காக்கும் காவல் மனிதனாகவும் துஷ்ட விலங்குகளிடமிருந்தும், கள்ளர்களிடமிருந்தும் தம்மைக் காக்கும் நாய்களையும் போற்றுகின்ற தன்மையின் வெளிப்பாடே பைரவர் வழிபாடு.
சில இடங்களில் நிர்வாணக் கோலத்தோடு திகழும் பைரவர் மூர்த்தங்களின் காலடிப் பகுதிகளில் விடைத்த காதுகளோடு நிற்கும் நாய்களைக் காணலாம். பைரவர் என்ற சொல் நாய்களைக் குறிக்கும் என்பார்கள்.
ஆனால் நாட்டார் வழக்காற்றியல் மாரியம்மனையும் பைரவரையும் பிராமணர் அல்லாதாருக்கும் பிராமணர்களுக்கும் இடைப்பட்ட இடைநிலைத் தெய்வங்களாகச் சொல்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் பைரவர் வழிபாடு மிகவும் புகழ் பெற்றது.
எல்லாச் சிறு தெய்வக் கோவில்களிலும் தவறாமல் விழா எடுத்தல், விரதம் இருத்தல், கரகம் சுமத்தல், காப்புக் கட்டுதல், கொடை நடத்துதல், மாவிளக்கு, முளைப்பாரி, பால் குடம், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், மொட்டை எடுத்தல், நூற்று எட்டுத் திரு விளக்கு பூஜை நையாண்டி மேளதாளங்களோடு கொண்டாட்டம் என்று மதுரை நகரின் ஒவ்வொரு தெருவிலும் உற்சவங்கள் நடக்கின்றன. .
சிறு தெய்வ வழிபாட்டுக் கோயில்களில் பூசனைகள் அலங்காரங்கள், திருநீறு, குங்குமம் தருதல் போன்றவற்றைப் பூசாரிகள் என்று அழைக்கப் படும் பிராமணரல்லாத மக்களே செய்வதோடு தாய்மொழியிலேயே பூசை செய்வதும் சிறப்புமிக்க ஒன்றாகும். எம்ஃபில், முனைவர் பட்டங்கள் பெற சிறு தெய்வக் கோவில்களைத் தான் ஆய்வு செய் கின்றனர்.
ஆனால் #பெருந்தெய்வக் கோவில்களில் #புரியாத #வடமொழி, #சமசுகிருதம் போன்ற இலக்கியமும் பேச்சு வழக்கமும் இல்லாத மொழிகளிலேயே வழிபாட்டை பிராமணர்கள் மட்டுமே செய்கின்றனர்.
 இவர்களைத் தவிர வேறு எவரும் கோவிலைக் கட்டியவரோ, அதிகாரிகளோ ஏன் அறநிலையத் துறை அமைச்சர்களே கூட தெய்வச் சிலை அருகில் செல்ல முடியாது.
ஆனால் #சிறு #தெய்வக் கோவில்களில் #கிட்ட நின்றே #வழிபாடு செய்யலாம். சிறு தெய்வ வழிபாடு என்பது தொல் பழங்கால வாழ்வின் எச்சம். இன மரபியல் சார்ந்த வாழ்க்கையோடு தொடர்புடையது. தொன்மத்தின் தொடர்ச்சியான சிறு தெய்வ வழி பாடுகளே தம்மைக் கால்மாடு தலைமாடு நின்று காப்பாற்றும் என்பதும், குல தெய்வங்கள் தங்கள் வாழ்வில் உடைமையையும் உயிரையும் காப்பவை என்பதும் விளிம்புநிலை மக்களின் நம்பிக்கை. குலதெய்வங்களைத் தங்கள் பரம்பரையின் மூத்த உறுப்பினர்களாகவே கருதுகின்றனர்.
மதுரை #நாகரிகமாகக் காணப்பட்டாலும் உள்ளூரக் குருதியோட்டமாக ஓடுவது #கிராமியப் #பண்பாடு தான்.
இந்த மண் மணம் சார்ந்த பண் பாட்டினால் தான் மதுரையின் வாழ்வில்
பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் தானாக வந்து சேர் கிறது.
#கோடி #நாகரிகம் கடல் தாண்டி வந்தாலும்
மதுரை நாகரிகம் மட்டும் என்றும் மாறாதது என்பது மதுரை வாசிகளின் அசையாத மன உறுதி, நம்பிக்கை !
Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon