Primary Menu

Top Menu

September 26, 18

வீட்டு தோட்டம் !!

காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவை ருசியாக்குகின்றன. ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த நபர், சீரான திட்ட உணவிற்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும். ஆனால் தற்போதைய காய்கறி உற்பத்தியை கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஒரு நபர் ஒரு நாளுக்கு 120 கிராம் காய்கறிகளையே பெற முடிகிறது.

மேற்கண்ட கருத்துக்களை மனதில் கொண்டு நாம் நமது அன்றாட வாழ்விற்கு தேவையான காய்கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில், நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், இதனால் ஏற்படும் சுகாதார கேட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது. பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளமுடிகிறது. மிகக் குறைவான இடத்தில் சாகுபடி செய்யப்படுவதால், மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடிகிறது. மேலும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினால் போதுமானதாகும். இதனால் காய்கறிகளில் நச்சு இரசாயணங்கள் படிவதை தவிர்க்க முடிகிறது.

குளியலறைக் கழிவு நீர் வெளியேறும் இடத்தில் கல்வாழை, சேப்பங்கிழக்கு செடிகளை வைத்தால் அந்த சோப்புத் தண்ணீர் சுத்தமாகி விடும். இப்படி எல்லாவற்றையும் ரீ-சைக்ளிங் செய்வதுதான் இந்த முறையின் முக்கியமான அம்சம். இப்படி ரீ-சைக்ளிங் செய்ய ஆரம்பித்தால், கழிவு நீர் என்பதே இருக்காது. கழிவு நீர் இல்லை என்றால் கொசு இருக்காது. இதை எல்லாம் செய்தால் வீட்டில் எப்போதும் குளிர்ச்சி இருக்கும்.

வீட்டுக்காய்கறித் தோட்டம்

ஒவ்வொருத்தரும் தன்னால் முடிஞ்சவரை, வீட்டுத்தோட்டங்களில் காய்கறி, கீரைகள், பூச்செடிகளை வளர்த்தாலே தன்னுடைய குடும்பத்தின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்துக்க முடியும். அதெல்லாம் கிராமங்களுக்குத்தான் சரிப்படும்.. நகரத்தில் ஏது வசதின்னு நிறையப்பேர் அலுத்துப்பாங்க. மனசிருந்தால் இடமுண்டு. மும்பையில், குடிசைப்பகுதிகள்லயும் தொட்டிகளை வைக்க இடமில்லாட்டாக்கூட அதுகளை கயித்துல கட்டி கூரையின் பக்கக்கம்புகளில் தொங்கவிட்டுருப்பாங்க. சில இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளுக்கு மேலயும் ரோஜாத்தொட்டிகளை வெச்சிருக்கறதுண்டு.

பால்கனிகளில், மொட்டைமாடிகளில், ஏன்.. ஜன்னல் விளிம்புகளில் கூட தொட்டிகளைவைத்து, செடிகளை வளர்க்கலாம். அதுக்குன்னு ஓவல் வடிவமைப்புள்ள தொட்டிகளும் கிடைக்குது. சிலவீடுகளில் அடுக்களையில் ரெண்டு சுவர்கள் சேரும் மூலைகளில் மார்பிள், கடப்பா போன்ற கற்களை ஷெல்புமாதிரி பதிச்சு, அதுல கனமில்லாத தொட்டிகளை வெச்சிருப்பாங்க. கொத்தமல்லி, வெந்தயம், அரைக்கீரை வகைகளை அதுல வளர்க்கும்போது அழகான உள்அலங்காரமாவும் இருக்கும்.

அபார்ட்மெண்டில் குடியிருப்பவர்கள், மொட்டைமாடியில் தோட்டம் அமைத்து, உழைப்பையும் செலவையும் பகிர்ந்துக்கிட்டா, பூச்சிக்கொல்லியின் நச்சு கலக்காத புத்தம்புது காய்கறிகள், பூக்கள் தங்குதடையில்லாம கிடைக்குமே. நல்ல உடற்பயிற்சியாவும், பயனுள்ள பொழுதுபோக்காவும் இருக்கும். மொட்டைத்தலையில்.. ச்சே.. மொட்டைமாடியில் பச்சைபசேல்ன்னு.. அழகா பூத்துக்குலுங்கும் தோட்டத்தையும் அதில் விளையாடவரும் அணில்கள்,குருவிகளையும் யாருக்குத்தான் பிடிக்காது!!

அமோகமான நல்ல விளைச்சல் கிடைக்கணும்ன்னா, முதல்ல மண் ஆரோக்கியமா இருக்கணும். செடிகள் தங்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்தும், மிச்சத்தை காற்றிலிருந்தும் கிரகிச்சுக்குது. அதனால மண்ணும் சத்து நிரம்பியதா இருக்கணும். இதை, இப்பல்லாம் செடிகளுக்கான நர்சரிகளிலேயே ரெடிமேடா விக்கிறாங்க. செயற்கையுரம் போடாம, மட்கும் குப்பைகள், மாட்டுச்சாணம் இதெல்லாம் கலந்து மட்கச்செய்து தயாரிக்கப்படுது. வாங்கிட்டு வந்து தொட்டியில் நிரப்பி, செடியை நடவேண்டியதுதான்.

இந்த இயற்கை உரத்தை நாமளும் வீட்டிலேயே செஞ்சுக்கலாம். பழைய பக்கெட்டுகள், குப்பைத்தொட்டிகள் இதுல ஏதாவது ஒண்ணில் அடுக்களைக்கழிவுகள், செடிகளிலிருந்து உதிரும் இலைதழைகள் இதெல்லாம் போட்டுட்டு வரணும். ஜூஸ் எடுத்தப்புறம் கிடைக்கிற சக்கைகளைக்கூட போடலாம். மொத்தத்தில் மட்கக்கூடிய குப்பைகளா இருக்கணும். எப்பவும் லேசான ஈரப்பதம் இருந்துட்டிருந்தா ரொம்ப நல்லது. மழைக்காலத்தில் மண்புழுக்கள் தாராளமா கிடைக்கும். அதுல கொஞ்சத்தை எடுத்து, நம்ம உரத்தொட்டியில் போட்டுவெச்சா, குப்பைகளை நல்ல சத்துள்ள உரமா மாத்திடும்.

குறிப்பிட்ட அளவுக்கு ஒருமுறை கொஞ்சம் மண்ணையும் ஒரு லேயரா அடுக்குங்க. மறக்காம உரத்தொட்டியை மூடிவையுங்க. இல்லைன்னா, ஈத்தொல்லை தாங்காது. தொட்டி நிறைஞ்சதும், அப்படியே விட்டு வெச்சுட்டா, சுமார் மூணு மாசத்துல நல்ல அருமையான உரம் தயார். லேசா சலிச்சு எடுத்து, செடிகளுக்கு போடலாம். அமோக விளைச்சல் கொடுக்கும். எப்பவும்,ரெண்டு உரத்தொட்டிகளை கைவசம் வெச்சிருக்கணும். ஒண்ணு ரெடியாயிட்டிருக்கும்போது இன்னொண்ணில் உரம் தயாரா இருக்கும்.

செடிகளை வளர்க்க தொட்டிகளுக்கும் ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. இப்பல்லாம் கண்டெய்னர் விவசாயம்ன்னு ஒண்ணு பிரபலமாகிக்கிட்டு வருது. இது ஒண்ணும் புதுசில்லை.. நமக்கெல்லாம் தெரிஞ்சதுதான். வீட்டுல கிடக்கிற வேண்டாத பழைய டப்பாக்கள், பாட்டில்கள்ல செடி வளர்ப்போமே.. அதேதான். சில குடும்பங்கள்ல மாசாந்திர மளிகை வாங்கும்போது, அஞ்சுலிட்டர், ரெண்டு லிட்டர் கேன்கள்ல எண்ணெய் வாங்குவாங்க. அப்புறம், அதை பழைய பேப்பர்,பிளாஸ்டிக் வாங்குறவங்ககிட்ட தூக்கிப்போட்டுடுவாங்க. இதுதான் இப்போ நமக்கு கைகொடுக்கப்போவுது. பெப்சி, மிரிண்டா போன்ற பானங்கள் வர்ற பாட்டில்களையும் இப்படி உபயோகப்படுத்திக்கலாம். சுற்றுப்புறங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் கொஞ்சமாவது குறையும்.

கேன்கள், பாட்டில்கள், மற்றும் டப்பாக்களை அதன் குறுகிய வாய்ப்புறத்திலிருந்து கொஞ்சம் கீழிறக்கி வெட்டிக்கிட்டா, பூந்தொட்டி ரெடி. இதுல மண்ணை நிரப்பி தொட்டியின் அளவுக்கேற்ப சின்ன மற்றும் பெரிய செடிகளை நடலாம். பெரிய சைஸ் டப்பாக்களில், காய்கறிகள், கறிவேப்பிலை போன்றவற்றை நடலாம். சின்ன அளவுல வளர்ற ரோஜாக்கள், புதினா கொத்தமல்லி, அலங்காரப்பூச்செடிகளுக்கு குளிர்பான பாட்டில்களே போதுமானது. வீட்ல இருக்கற பசங்ககிட்ட செடிகளை பராமரிக்கிற பொறுப்பை கொடுத்துப்பாருங்க. ‘நானே வளர்த்ததாக்கும்’ங்கற பெருமையில பிடிக்காத காய்கறிகளும்கூட பிடிச்சுப்போக ஆரம்பிச்சுடும்.

உங்க கற்பனைத்திறனுக்கேற்ப பாட்டில்கள்ல பெயிண்ட் வேலைப்பாடு செஞ்சுவெச்சா, அதுவே ஒரு அழகான உள்ளலங்காரமாவும் இருக்கும்.வீட்டுக்குள்ள வைக்கிறதுக்குன்னு தனியா க்ரோட்டன்ஸ்செடி வளர்க்கவேண்டியதில்லை. மும்பையில் குடிசைப்பகுதிகள்ல மட்டும் இருந்த இந்த கண்டெய்னர் முறை இப்ப நகரம் முழுக்க பரவ ஆரம்பிச்சிருக்கு. விளை நிலங்களெல்லாம் காங்கிரீட் காடுகளா மாறிட்டு வர்ற இன்றைய சூழல்ல, முடிஞ்சவரை அதை தடுக்கறதோட, நாம,இருக்குமிடத்தையும் உபயோகமுள்ள வகையில் பசுமையாக்கிக்கலாமே..

Comments

மதுரை நகரின் சிறப்புகள்

இந்தியாவின் பழமை வாய்ந்த நகரங்களில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon