Primary Menu

Top Menu

May 21, 18

தியா – திரை விமர்சனம் !

டீன் ஏஜில் நாக சௌரியாவை காதலிக்கும் சாய் பல்லவி எதிர்பாராவிதமாக கர்ப்பமாகிறார். அந்தக் குழந்தை பிறந்தால் இருவரின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என அந்தக் கருவைக் கலைக்க குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள். பிறகு 5 வருடங்கள் கழித்து இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. சாய் பல்லவியின் நினைவில் தியாவாக வாழும் அந்தக் கரு தன் உயிரிழப்புக்கு காரணமான ஒவ்வொருவராகப் பழி வாங்குகிறது.

கருவைக் கலைக்க ஒப்புக்கொண்ட நாக சௌரியாவையும் பழிவாங்க நினைக்கும் குழந்தையிடம் இருந்து சாய் பல்லவி அவரைக் காப்பாற்றினாரா என்பது மீதிக்கதை. தன் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க குடும்பத்தினர் திட்டமிடும்போது பதைபதைப்பது, தன் கணவன் உயிரைக் காப்பாற்றத் துடிப்பது, முதல்முறை தனது மகள் இருப்பது தெரிந்து இனம்புரியாத உணர்வில் அழுவது, தியா தியா என்று அழைத்து குழந்தை இருப்பதை உணர்ந்து புன்னகைப்பது என தமிழில் முதல் அறிமுகத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சாய் பல்லவி.

கொடுத்த கேரக்டரில் திருப்தியாக நடித்திருக்கிறார் நாக சௌரியா. குழந்தை தியாவாக வரும் பேபி வெரோனிகாவின் சலனமில்லாத பார்வையும், க்யூட்னெஸ்ஸும் மனதில் பதிகிறது. நாக சௌரியாவின் அப்பாவாக நிழல்கள் ரவி, சாய் பல்லவியின் அம்மாவாக ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இருவரின் அடுத்தடுத்த கொலை, குடும்பத்தினரை அதிர்ச்சியாக்குகிறது. பிறகு, குடும்ப டாக்டரும் பலியாக, அதில் இருக்கும் சில ஒற்றுமைகளால் இதில் ஏதோ சிக்கல் இருப்பதை உணர்கிறார் சாய் பல்லவி. பிறகுதான் அந்த அமானுஷ்யத்தை தெரிந்துகொள்கிறார் சாய் பல்லவி. பின்னர், தனது மாமாவின் இறப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் அவர், தனது கணவனைக் காப்பாற்ற அவர் துடிக்கும் காட்சிகளில் காதலின் மாயம்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் அலட்டல் திகட்டல் இல்லாத காட்சி அமைப்புகள். சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை, கதைக்கேற்றபடி மிரட்டல் இல்லாத அமைதியான ஓட்டம். பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஹாரர் திரைக்கதையில் வெகு சாஃப்ட்டான ஒரு படத்தை எடுத்திருப்பது நல்ல முயற்சி. அடுத்தடுத்து என்ன நடக்கும் என எளிதாக யூகிக்க முடிகிற விதமாகவும், ஆரம்பத்திலேயே பழிவாங்கலுக்கான காரணம் தெரிவதும் கொஞ்சம் மைனஸ்.

திரைக்கதையில் இன்னும் சஸ்பென்ஸ் கூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இளம் வயதில் கருத்தரிப்பதும், அதனால் ஏற்படும் சிசுக்கொலை, கருத்தரிப்பின்போது ஏற்படும் தாய்மார்களின் மரணங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு எளிமையான கதையை ஹாரர் கதையாக வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறார் ஏ.எல்.விஜய். அது விஜய் ஸ்டைல். மிரட்டும் திகில் உருவங்கள் இல்லை. சாந்தமான அழகுடன் வரும் குழந்தை தான் பேய்.

திடுக் திடுக்கென தூக்கிவாறிப்போடும் பின்னணி இசை, அமானுஷ்ய சப்தங்கள் இல்லை. இந்தப் பேய்ப்படம் பலி வாங்கும் விதமாக இருந்தாலும் பயத்தைக் கிளப்பாமல் கருத்தை விதைக்கவேண்டும் என உருவான ‘கரு’. ஆர்.ஜே.பாலாஜிக்கு சற்றும் பொருத்தமில்லாத கேரக்டர். சில இடங்களில் அவரது கேரக்டர் எரிச்சலூட்டுகிறது. மற்றபடி ஒரு ஹாரர் கதையை அனைவரும் பார்க்கும்படியாக, நல்ல மெசேஜுடன் சொல்லியிருக்கும் இயக்குநர் விஜய்யை பாராட்டலாம். பெரிய எதிர்பார்ப்பில்லாமல் வித்தியாசமான கோணத்தில் ஒரு படத்தை ரசிக்க வேண்டுமானால் நிச்சயம் பார்க்கலாம். ‘தியா’ – அழகான பேய்!

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தன்னை பற்றிய கிசுகிசுக்குகள் குறித்து நடிகை அமலாபால்

தன்னை பற்றி எந்தவித கிசுகிசுக்குக்கள்...

Leave a Reply