Primary Menu

Top Menu

September 20, 18

அழகிரிக்கு பதவி இல்லை – அன்பழகன் திட்ட வட்டம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தி.மு.க. செயற்குழு கூட்டம் முதன் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது.

அதோடு தி.மு.க. மூத்த தலைவர்களுடன் நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்யும் பொதுக்குழு கூட்டத்தை அடுத்த மாதம் நடத்துவது பற்றி இறுதி முடிவுகள் நாளை எடுக்கப்பட கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தி.மு.க.வில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட மு.க.அழகிரியை மீண் டும் கட்சியில் சேர்க்க கோரிக்கைகள் எழுந்துள்ளது பற்றியும் பேசப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. அவர் தென்மண்டல பொறுப்பாளர் பதவியை விரும்பவில்லை என்றும் மாநில அளவில் முக்கிய பொறுப்பை எதிர்பார்ப்பதாகவும் உறுதி செய்யப்படாத ஒரு தகவல் பரவியது.

மேலும் மு.க.அழகிரி மகனுக்கு முரசொலி அறக்கட்டளையில் இடம் அளிப்பது பற்றி ஆலோசனை நடந்து வருவதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி இருந்தது.

மு.க.அழகிரி தரப்பிலும் மு.க.ஸ்டாலின் தரப்பிலும் சிலர் சந்தித்து இது தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆனால் யூகத்தின் அடிப்படையில் வெளியான இந்த தகவல்கள் எதிலும் அடிப்படை உண்மை இல்லை என்று தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். மு.க.அழகிரிக்கு தி.மு.க.வில் மீண்டும் பதவி கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்த தி.மு.க. நிர்வாகிகள் உறுதிபட தெரிவித்தனர்.

இதுபற்றி தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்த போது, “தற்போது மு.க.ஸ்டாலினின் கவனம் எல்லாம் தி.மு.க. முன் உள்ள சவால்களை எதிர்கொள்வதை பற்றியதாகத்தான் உள்ளது. குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சி மீது தமிழக மக்களிடம் எழுந்துள்ள அதிருப்தியை ஒருமுகப்படுத்தி செயல்பட அவர் ஆலோசித்து வருகிறார். வேறு எந்த வி‌ஷயங்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை” என்றனர்.

இந்த நிலையில் மு.க. அழகிரியை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க ஆலோசனை நடப்பதாக வந்த தகவலை கண்டு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. அது மட்டுமின்றி அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என அவர் அறிவுரை வழங்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் அன்பழகனை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் அன்பழகன், “எந்த நெருக்கடி, யாரிடம் இருந்து வந்தாலும் சரி… குடும்பத்துக்குள் இருந்து நெருக்கடி வந்தாலும் சரி, எக்காரணம் கொண்டும் அழகிரியை தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க வேண்டாம்” என்று வலியுறுத்தி கூறினாராம்.
Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon