Primary Menu

Top Menu

September 20, 18

ஆடி மாத சிறப்புகள்..

தமிழ் வருடங்கள் 60. தமிழ் மாதங்கள் 12. இதில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. பல மாதங்களுக்கு பழமொழிகளும் உண்டு. தட்சிணாயன ஆரம்பம் என்ற மழைக்காலத் தொடக்கமான ஆடி மாதத்தில் பூமாதேவி அவதாரம் செய்ததாக புராணம் கூறுகின்றது. ஆடி மாதத்திலிருந்து தேவர்களுக்கு மாலை நேர ஆரம்பம்.

இந்த மாத்தில் வரும் திதிகள், நட்சத்திரங்கள், கிழமைகள் மிகவும் மகிமை வாய்ந்ததாக சொல்லப்படுகின்றன. இந்தக் காலத்தில் இரவு நேரம் நீண்டு காணப்படும். “ஆடிச் செவ்வாய் தேடிக்குளி அரைச்ச மஞ்சளை பூசிக்குளி” என்பர். ஆம், ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மஞ்சளை பூசிக் குளிப்பதால், சுமங்கலிப் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதம் ‘மங்கல கௌரி விரதம்.’ ஆடிச் செவ்வாய் தென் மாவட்டங்களிலும், கேரளாவின் சில பகுதிகளிலும் முக்கிய திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.குறிப்பாக, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீவித்யா பூஜை வைதீக முறைப்படி செய்வர்.

ஆடி வெள்ளியில் அம்மனை மாணவியாக பாவித்து, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்வதாக ஐதீகம். எனவே, அன்று பள்ளிப் பிள்ளைகள் அதிகம் பேர் வந்து, கல்விக்காக வேண்டி செல்வர். ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். லட்சுமியின் மறு அவதாரமாகி, ஆண்டாள் அவதரித்த நாள். இந்த நாளில், சுமங்கலிப் பெண்களுக்கு வளையல், மஞ்சள் குங்குமம், தேங்காய் பழம், ரவிக்கை, வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுத்தால், ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.முக்கியமாக, பழனியில் ஆடிக்கிருத்திகை அன்று பக்தர்கள் ஷண்முகா நதியில் நீராடி, வணங்கி தங்களின விரதத்தை முடித்துக் கொள்வர். தட்சிணாயன புண்ய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை.

ஆடியில் சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கிறார். சிவ அம்சமான சூரியனும் சக்தி அம்சமான சந்திரனும் ஒன்று சேர்வதால், சந்திரன் ஆட்சி பலம் பெறுகிறார். சிறப்பான இந்த ஆடி அமாவாசையில், பித்ருக்களான நம் முன்னோர்களுக்கு தில தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது. சமுத்திரஸ்நானம் செய்வது மிகவும் புண்ணியமானது . ஆடிமாதப் பிறப்பன்று, புதிதாகத் திருமணமான மணமகனை ஆடி மாதம் மாமனார் இல்லத்துக்கு அழைத்து ஆடிப்பால் கொடுப்பதை, வழக்கமாக கொண்டுள்ளனர். கொழும்பில் இந்து மக்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா ஆடிவேல். ஆடி மாதத்தில் வேல் எடுத்து கொண்டாடப்படுவதால், ஆடிவேல் எனப்படுகிறது. கதிர்காமத்தில் இவ்விழாவை கண்டுகளிக்க பக்த பெருமக்கள் திரள் திரளாக வருவார்கள். இந்த ஆடிவேல் விழா நான்கு நாட்கள் சிறப்பாக நடைபெறும். சங்கரன்கோவில் சங்கர நாராயணா கோயிலில் இறைவி கோமதி அம்மன் அருள் புரிகிறார்.

அம்மனுக்கு ஒரு சமயத்தில் ஒரு சந்தேகம் வந்தது. மகாவிஷ்ணுவும், ருத்ர மூர்த்தியும் ஒன்றா அல்லது வேறு வேறா என்ற சந்தேகம் கொண்டு அது தீர, அன்னை ஒற்றைக்காலில் தவம் இருந்தாள். அரனும், ஹரியும் ஒன்றே, என கூறி ஹரிஹரனாக காட்சி தந்தார்கள் சிவனும் விஷ்ணுவும். ஆடி பௌர்ணமியில், கோமதி அம்மனின் தவம் கலைந்தது. அந்த நாளில், அம்பாளுக்கு ஹரிஹரனாக சிவன் – விஷ்ணு காட்சி தரும் திருவிழா நடைபெறுகிறது. திருமணம் மகப்பேறு வேண்டி அம்மன் தவசுக்கு முதல் நாள் குளித்து, இரவு ஈரப்புடவையுடன் பிராகாரத்தில் பெண்கள் படுத்து விடுவார்கள். இரவு அவர்கள் கனவில் அம்மன் தோன்றி, மக்களுக்கு வரம் கொடுக்கிறாள் என்று கூறுகிறார்கள்.

ஆடி மாதத்தில் தவறாமல் அம்மனுக்குக் கஞ்சி படைப்பார்கள். பசிப்பிணி போக்கி, எளியவர் அடையும் மகிழ்ச்சியில் இறைவனைக் காண்போம் என்ற கோட்பாடே, கஞ்சி வார்த்தல் வழிபாட்டின் அர்த்தம். சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் புதுக்கோட்டை நார்த்தாமலை மாரியம்மன் கோயிலில் நடைபெறும் கஞ்சி வார்க்கும் நேர்த்திக்கடன் குறிப்பிடத்தக்கது. ஆடி மாதத்தில் துளசி வழிபாடு அரிய பலன்களைத் தரும் எனக் கூறப்படுகிறது. ஆடி மாதம் வளர்பிறையில் தொடங்கி, துவாதசி வரையில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும். -ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசியன்று கடைப்பிடிக்கும் விரதம் கோபத்ம விரதம். அன்றைய தினத்தில் பசுவை வழிபட்டு வந்தால், லட்சுமி கடாட்சம் பெருகும். ஆடி வெள்ளிக்கிழமைகளில், அரச மரத்தடியில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் தெளித்து, பூஜை செய்வது, நாகதோஷ பூஜை என்றழைக்கப்படுகிறது. நாகதோஷம் நிவர்த்தியாவதுடன், குடும்பமும் சுபிட்சமாக இருக்கும்.

ஆடி மாத சுக்லபட்ச கடைசி வெள்ளிக்கிழமையன்று பெண்கள் அனுசரிக்கும் வரலட்சுமி விரதம், மிக முக்கியமானது. -இந்த விரத நாளன்று, கும்பத்தில் லட்சுமியை வைத்து, கலசத்தில் முன் தேங்காய், பழம், பூ, வெற்றிலை-பாக்கு, கொழுக்கட்டை, நோன்புக்கயிறு வைத்து, தாமரை மலர்களால் பூஜித்து, பாடி வழிபடுவார்கள் பிறகு, நோன்புக்கயிற்றினை பெண்கள் கட்டிக்கொள்வார்கள். குறிப்பாக, கன்னிப் பெண்கள் சுமங்கலிப் பெண்களின் காலில் விழுந்து வணங்கி அவர்கள் கையால் நோன்புக் கயிற்றினைக் கட்டிக்கொண்டு ஆசி பெறுவார்கள். தாலி பாக்கியம் மற்றும் திருமணத் தடை நீங்க கொண்டாடப்படும் விரதம் இது. “ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவிரி” என காவிரியை வர்ணிப்பதுண்டு.

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் 18ம் நாள் ஆடிப்பெருக்கு – காவிரி நதியினை பெண் தெய்வமாக வணங்கும் நாள்.  நாட்டை வளப்படுத்தும் நதிகளுக்கு நன்றி கூறும் வகையில் கொண்டாடப்படும் நாள் இது. 18ம் பெருக்கு அன்று, புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர்சாதம், வடகம் முதலான பதார்த்தங்களுடன், கரை புரண்டு ஓடும் ஆற்றின் கரைகளில் பூஜை செய்து, விருந்து உண்டு, காவிரி அன்னையை போற்றி மகிழ்வார்கள். வாழ்வினை வளமாக்கும் நதியினை தாயாகக் கருதி வழிபட்டு, நன்றி உணர்வினை வெளிபடுத்தும் திருநாள் இது.

Comments

அமெரிக்கா போன திரும்ப வரமாட்டீர்கள்…

1. திரும்ப வரமாட்டீர்கள்…

இது கட்டாயம்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon