Primary Menu

Top Menu

September 20, 18

கருணாநிதி உடல்நலம் குறித்து ICU-வில் வெங்கையா நாயூடு , சபாநாயகர் விசாரிப்பு

காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க., தலைவர் கருணாநிதியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக சபாநாயகர் தனபால் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் நலம் குறித்து விசாரித்தனர். துணை ஜனாதிபதிக்கு மட்டும் கருணாநிதியை நேரில் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது.

 

கருணாநிதி உடல்நலம் குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

 

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது. ஐ.சி.யூ பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காவேரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க பிரபலங்கள் வரிசையாக வந்தவண்ணம் உள்ளனர். தொற்று பரவும் என்பதால் அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

 

தற்போது, கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ள நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தீவிர சிகிச்சை பிரிவுக்கே சென்று கருணாநிதியை பார்த்தார். செயல் தலைவர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி மற்றும் டாக்டர்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

 

கருணாநிதி நலம் குறித்து மருத்துவமனையில் ஸ்டாலினை சந்தித்து துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு நலம் விசாரித்ததார். இவருடன் கவர்னர் பன்வாரிலால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார், வைகோ ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

 

கருணாநிதியை நேரில் பார்த்து விசாரித்தேன், அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தேன் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவரது டுவிட்டரில் கூறியுள்ளார்.

 

மருத்துவமனைக்கு வந்த ராஜ்யசபா எம்.பி., இல.கணேசன், கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கருணாநிதி குணமடைந்து வருவதாக தெரிவித்தனர். மகிழ்ச்சியாக உள்ளது.

 

அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு மூத்த அரசியல் தலைவராக திகழ்பவர் கருணாநிதி. கருணாநிதி உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும். மீண்டும் பலருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

ஸ்டாலினை சந்தித்த பின்னர், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., டெப்ரிக் ஒ பிரைன் கூறுகையில்; கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன். கருணாநிதி குணமடைய மேற்கு வங்க மக்கள் சார்பில் வேண்டி கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

மார்க்., கம்யூ., கட்சியின் பொதுசெயலர் சீத்தாராம் யெச்சூரி நலம் விசாரித்த பின்னர் நிருபர்களிடம் கூறுகையில் கருணாநிதி விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவார் என்றார்.

 

காவேரி மருத்துவமனைக்கு வந்த சபாநாயகர் தனபால், ஸ்டாலினை சந்தித்து தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அப்பல்லோ மருத்துவமனை இயக்குநர் பிரீத்தா ரெட்டி, நடிகர் செந்தில் ஆகியோரும் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon