Primary Menu

Top Menu

September 26, 18

அமெரிக்காவில் தமிழ் கடமை தவறிய தமிழகம்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ‘தமிழ் விழா-2018’ல் பங்கெடுக்க டாலஸ் நகருக்குப் போயிருந்தேன். அவ்விழாவினைத் தொடர்ந்து வேறு பல நகரங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் கிட்டின.

 

சென்ற இடங்களிலெல்லாம் தமிழ் பயிற்றுவிக்கும் முயற்சி சார்ந்த உரையாடல்களைக் கேட்க முடிந்தது. அந்த உரையாடலுக்குள் ஆர்வமும் அக்கறையும் மட்டுமல்லாமல் ஒருவித ஆவேசமும் இருந்தது.

 

இன்றைய நிலையில் அமெரிக்கா முழுவதும் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 25,000 இருக்கும். ஆசிரியர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2,000. அனைவருமே தன்னார்வலர்கள்.

 

கற்றுத்தருவதற்கான இடம், பாடத்திட்டம், செயல்முறை, அவை சார்ந்த நிர்வாக முறை ஆகியவற்றை அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகம், கலிபோர்னியா தமிழ்க் கல்விக் கழகம் போன்ற அமைப்புகள் முன்னெடுத்துவருகின்றன.

 

முன்னகரும் தமிழ்

 

அமெரிக்கப் பள்ளிகளில் முதல் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. இரண்டாம் மொழி என்பது நடுநிலைப் பள்ளிகளில் விருப்பப் பாடமாகவும் மேல்நிலையில் கட்டாயப் பாடமாகவும் இருக்கிறது. இரண்டாம் மொழியாக ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், ஜெர்மன், சீனம் போன்ற மொழிகளை மாணவர்கள் பயில்கின்றனர்.

 

இதற்குப் பதிலாக தமிழ் படிக்கும் சூழல் இன்றில்லை. ஆனால், நல்ல மாற்றங்கள் தொடங்கியுள்ளன. அதாவது, இரண்டாம் மொழி படிப்பவர்களுக்கு வழங்கப்படும் புள்ளிகளில் (கிரெடிட்) ஒரு பகுதியை தமிழ் படிப்பவர்களுக்கு வழங்க சில மாகாணங்கள் முன்வந்துள்ளன.

 

தமிழ் கற்றல் என்பது பெற்றோரின் விருப்பமாக மட்டுமே இருந்தது. ஆனால், உருவாகியுள்ள புதிய சூழலில் கல்வி நிலையப் பயன்பாடும் அதற்கு உண்டு என்ற நிலை மாணவர்களின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அதிகரித்துள்ளது.

 

வார விடுமுறைகளை தமிழ் மொழிக்காக இழக்கிற மாணவர்களுக்கு மதிப்பெண் சார்ந்த பயன்பாடு இயல்பான ஊக்கத்தை உருவாக்கும்.

 

இவை தவிர, இன்னொரு நல்வாய்ப்பு கலிபோர்னியாவிலிருந்து தொடங்கியுள்ளது. பள்ளி இறுதி வகுப்பில் ஆங்கிலம் தவிர்த்த இருமொழிக்கான தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு ‘இருமொழிக் கல்வி முத்திரை’ வழங்க கலிபோர்னியா மாகாணம் முடிவுசெய்துள்ளது.

 

அந்த இரு மொழிகளைத் தேர்வு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ள பட்டியலில் தமிழும் இடம்பெற்றுள்ளது. இது அமெரிக்காவின் மற்ற மாகாணங்களில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு நன்மையை உருவாக்கியுள்ளது.

 

தமிழ் இருக்கைகள்

 

ஹார்வர்டு தமிழ் இருக்கையைத் தொடர்ந்து ஹூஸ்டன், ஸ்டோனி புரூக் ஆகிய பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. பாலா சுவாமிநாதன் முயற்சியில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது.

 

அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் திருமூலர் சித்த மருத்துவ இருக்கையொன்று அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இவையெல்லாம் கல்விப்புலத்தில் தமிழ் மொழி சார்ந்த ஆய்வுகளையும் அடையாளங்களையும் வலிமைப்படுத்தும் முக்கிய நகர்வுகள்.

 

1996-ல் குமார் குமரப்பன் தலைமையில் நிதி திரட்டப்பட்டு கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டது.

 

இந்த 25ஆண்டுகளில், மேலைக் கல்விப்புலத்தில் தமிழ் குறித்த ஆய்வுகளுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் அந்நிறுவனம் ஆற்றியுள்ள பங்கு மிகப் பெரியது. இன்று அதைப் போல பல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைய இருப்பது நம் காலத்தின் மிக முக்கியமான நிகழ்வு.

 

செய்யத் தவறிய கடமை

 

அமெரிக்கத் தமிழ்ச் சமூகம் மொழிசார் செயல்பாட்டின் பரப்பெல்லையை வலிமையோடு விரித்துச் செல்கிறது. சரி, தமிழகத்திலிருந்து நாம் இவர்களுக்கு என்ன செய்தோம்?

 

தமிழகத்துக்கு வெளியில் இருப்பவர்கள் தமிழைக் கற்கவும் கற்றுத்தரவும் தேவையான பாடநூல்களையும், கருவிநூல்களையும் உருவாக்கத்தான் தமிழக அரசு, தமிழ் இணைய கல்விக்கழகத்தை நிறுவியது.

 

உலகில் பல மாற்றங்கள் உருவாகியுள்ள கடந்த 10 ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் பாடநூல்கள் மட்டும் மாற்றம் என்பதையே அறியாதவையாக உள்ளன. தற்காலப்படுத்தும் செயல்முறையே அதில் இல்லை. இது கவலையோடு நாம் பேசவேண்டிய ஒன்று. ஆனால், அமெரிக்க வாழ் தமிழ்ச் சமூகம் இதை நம்பியில்லை.

 

அங்குள்ள சூழலுக்கும் சவாலுக்கும் தகுந்த தமிழ்க் கல்வி முறையை உருவாக்கிக்கொள்ள அது தொடர்ந்து முயன்றுவருகிறது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலகின் பிற பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப்பாட முறைகளிடமிருந்து அது தனக்கான வடிவத்தைக் கண்டடைகிறது.

 

அரசும் அரசுசார் நிறுவனங்களையும் நம்பி தமிழ் எப்போதும் இருந்ததில்லை. ஆனால், தமிழின் வளர்ச்சிக்கு இந்நிறுவனங்களை உந்தித்தள்ள வேண்டியது நமது கடமை.

 

Comments

மதுரை நகரின் சிறப்புகள்

இந்தியாவின் பழமை வாய்ந்த நகரங்களில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon