Primary Menu

Top Menu

October 20, 18

வேண்டும் புதிய சமூக சீர்திருத்தங்கள்

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு

என்ற பெயரோடும் புகழோடும் உலக நாடுகள் மத்தியில் , நம் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களால் இந்திய மக்களாகிய நாம் தலை நிமிர்த்து வளம் வந்துக் கொண்டிருந்தோம் . ஆனால் அந்த நிலை இன்று மாறி வருகிறது .

 

இன்று இந்தியாவில் பாலியல் குற்றங்களினால் மாதம் ஒன்றுக்கு குறைந்தது 10 பெண்கள் /சிறுமிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பது மிகவும் அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது . மேலும் குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொள்வதும் , குடும்பத்தினரையே கொலை செய்தலும் , விவகாரத்துகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றது .

 

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு அரசு உயர்ந்த பட்ச தண்டனையாக தூக்கு தண்டனையை விதித்து அதிரடி சட்டம் இயற்றினாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை .

 

இத்தகைய சமூக அவலங்கள் பெருகுவதின் அடிப்படை காரணங்களை அரியாமல் நம் அரசு இதனை ஏதோ தனி மனித குற்றங்களாக கருதிக்கொண்டு தண்டனையை மட்டும் கடுமையாக்குவது பொறுப்பற்ற செயலாகும் .

 

ஏனெனில் வளர்ச்சி பாதையில் செல்லும் இந்தியாவே அதன் வளர்ச்சி சக்கரத்தின் வேகசூழற்சியால் இத்தகைய அவலங்கள் நிகழ்ந்தேற ஒருவகையில் காரணமாக உள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல .

 

ஆம் நம் நாட்டிலின் தொழிற் வளர்ச்சியாலும் , நகரமயமாக்களினாலும் கூட்டு குடும்ப வாழ்விலிருந்து பிரிந்து தனிக்குடும்பங்களாக குடியேறிய நாம் , அனுசரித்து வாழும் வாழ்க்கை முறை , பகிர்ந்துண்டு வாழ்தல் , பெரியோரின் சொல்லுக்கு கட்டுபடுதல் முதலியனவற்றை முற்றிலும் மறந்துவிட்டோம் .

 

அனுபவ பாடத்தினை கற்று தரும் ஆசானாக திகழ்ந்த அண்டை மனிதர்களை புறம் தள்ளி கணினியின் நிழலில் வாழும் நாம், சிறு சிறு பிரச்சனைகளை கூட எதிர்கொள்ள இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி , தனித்து விடப்படுகிரோம்.

 

இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளின் தொழில் சார்ந்து பொருள் ஈட்ட உதவும் கல்விக்கு தரும் முக்கியத்துவத்தை அவர்கள் பிள்ளைகளின் ஒழுக்கத்திற்கும் அவர்களின் நடவடிக்கைகளுக்கும் தருவதில்லை .இதனால் தனி மனித வாழ்வில் அவர்கள் பெரும் தவறுகளை அவர்கள் உணராமலேயே செய்கின்றனர் .

 

கணவன் மனைவி கருத்துவேறுபாடுகள் கல்லறையில் முடிந்து விடுகின்றன . இது மிகவும் வேதனைக்குரியது . இதனை சரி செய்ய மீண்டும் கூட்டுக்குடும்ப வாழ்விற்கு திரும்புவது அவ்வளவு எளிதான செயல் அல்ல .இதற்கு பல நடைமுறை சிக்கல்கள் உள்ள நிலையில் அரசு மக்களின் நலன் கருதி சில மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்திட வேண்டும் .

 

பள்ளிகளில் தொடக்க மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் பாடத்துடன் psychology (உளவியல்) பாடத்தை கட்டாயமாக்குதல் வேண்டும் .

 

தேர்வு எதிர்க்கொள்ளும் முறை , அடுத்த பாலின நண்பர்களுடன் பழகும் முறை , குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் அளித்தல் முதலியனவற்றை அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்வார்களானால் வளரும் தலை முறை மனித நேயத்துடனும் , ஒழுக்கத்தில் சிறந்தும் விளங்குவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

 

திருமணத்துக்கு விண்ணப்பிக்கும் மணமகள் மணமகனுக்கு சில அடிப்படை பயிற்சி வகுப்புகள் மூலம் உறவுகளை கையாளும் விதம் , துணையின் அடிப்படை தேவைகளை உணர்ந்து செயல்படுதல் , விட்டுக்கொடுத்தல் , செஸ் கல்வி , பொருளாதார தேவைகளுக்கு திட்டமிட்டு நிதி சேர்த்தல், குடும்பத்தினருடன் நேரம் செலுத்துவதின் அவசியம் ,

 

பிள்ளைகளை வளர்க்கும் முறை என வாழ்வில் இனி அவர்கள் எதிர்கொள்வனவற்றின் ஆழ்ந்த நுட்பான பயிற்சினை மிகுந்த அக்கறையுடன் அரசு வழங்கி அதற்கு கட்டாய தேர்வும் நிகழ்த்தி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே திருமண சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டம் இயற்ற வேண்டும் .

 

நவீன குடும்ப தலைவர்கள் பெரும்பாலும் குடும்பத்தின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் இயந்திரமாக சுழன்று மனைவி பிள்ளைகளை பார்ப்பது கூட அரிதான சூழலை இன்றைய தகவல் தொழில்நுட்ப (IT ) நிறுவனங்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்தி விடுகின்றன .

 

இதில் அரசு உடனே தலையிட்டு ஒவ்வொருவரின் தனிமனித வாழ்க்கையை அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு ஏதுவாக பணிநேர மாறுதல்களை தேசம் முழுவதும் அமல்படுத்தி ஒவ்வொருவரும் தன் குடும்பத்த்துடன் செலவிடும் நேரத்தை அதிக படுத்துவதினால் மிக மோசமான சமூக அவலங்கள் நாட்டில் நடந்திடாத வண்ணம் காத்திட இயலும் .

 

குடும்ப உறுப்பினர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை அதிகமாக செலவழிப்பது தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழிச்சிகளில் . அத்தகைய தொடர்கள் பெரும்பாலும் முகம் சுழிக்கும் அளவிற்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட கதாபாத்திரத்தாலும், பிறர்மனை நோக்குபவர்களாகவும் , சதி திட்டம் தீட்டுபவர்களாகவும் சித்தரிக்க படுகின்றன .

 

இதனை தொடர்ந்து பார்த்துவரும் சில பலவீனம் கொண்ட குடும்ப தலைவிகள் தன் துணை மேல் சந்தேகிப்பதும் , உறவுகளிடம் நம்பிக்கை இல்லாதவர்களாகவும் மாறுகின்றனர் .இதனால் நிகழ்ந்தேறும் குழப்பங்கள் ,சங்கடங்கள் குடும்பத்தின் நிம்மதியை சீர்குழைப்பவனாவாய் அமைகின்றன .

 

எனவே அரசு தொலைக்காட்சிகளுக்கென பிரத்யேக தணிக்கை குழு அமைத்து இத்தகைய யதார்த்தத்திற்கு மாறான தொடர்களை தடை செய்து , அன்பை விதைக்கும் நல் ஒழுக்க கதைகளையும் ஆக்க பூர்வமான , சிந்தனைகளை தூண்டும் நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்ப வழிவகை செய்திடல் வேண்டும் .

 

அரசு மக்கள் நலனில் அக்கறைக்கொண்டு உறவுகள் தின நாள் என்று வருடத்தில் ஒருநாள் அறிவித்து அதனை அரசு விடுமுறை தினமாகவும் அன்று உறவுகளுடன் அவர்கள் இணைந்து , மகிழ்ந்திருக்கவும் ஊக்குவிக்கலாம் .

 

ஒவ்வொரு தனிமனிதனும் இணைந்தால் மட்டுமே சமூகம் உருவாகும் , அத்தகைய சமூகம் அரோக்கியமானதாகவும் , மகிழ்ச்சியானதாகவும் இருந்திட்டால் மட்டுமே நம் தேசமும் வளர்ச்சி பெற்று பல சாதனைகள் புரிந்திட இயலும் . மக்களின் நலன் இலவசங்களில் அல்ல , இல்லங்களில் என்பதினை நம் ஒவ்வொருவரும் நினைவில் கொண்டிட வேண்டும் .

 

அரசு செயல்வடிவமைக்கும் வரை காத்திராமல் நாம் அனைவரும் இன்றிலுருந்தே நம் அன்றாட வாழ்வியலில் மாற்றங்கள் ஏற்படுத்தி , குடும்பத்தில் இணைந்து ,இன்பமாய் வாழும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் .சமூக வலைத்தளங்களின் பக்கம் செல்வதை விட சமூக பணி செய்து மன நிம்மதி பெற்றிடலாம் .

 

குடும்ப நிகழ்வுகளை வலைத்தளங்களில் நாள்தோறும் பதிவேற்றுவதை விடுத்தது மனதில் மட்டும் சுமந்து மன நிறைவு பெற்றிடுவோம் . பிள்ளைகள் அருகில் இருக்க கைபேசியை மறந்திடுவோம் .

 

மென்மேலும் சமூக அவலங்கள் நம் தேசத்தை சீர்குலைக்காமல் காப்பது நம் ஒவ்வொருவரின் தனி மனித ஒழுக்கத்தில் தான் உள்ளது . எனவே உறவுகளுடன் இணைந்திருப்போம் இன்புற்றிருப்பிபோம் .

 

மகிழ்ச்சியை தவறவிடாதீர்கள்?

படித்து முடித்தால் மகிழ்ச்சியாக...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon