Primary Menu

Top Menu

September 26, 18

பெண் கல்வியின் முக்கியத்துவம்

அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)

 

கல்வி கற்பது என்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருவர் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். கல்வி ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்பாடுள்ளவனாகவும், ஒழுக்கமுடையனாகவும் மாற்றுகிறது.

 

கல்வி மனிதனின் அறிவுக்கண்ணைத் திறப்பதோடு சொத்துக்களிலெல்லாம் மிகச் சிறந்த சொத்தாகவும் கருதப்படுகிறது. கல்வியென்பது மார்க்கம் மற்றும் உலகம் பற்றிய அறிவைப் பெறுவதாகும்.

 

நாம் கற்கக்கூடிய கல்வி இவ்வுலகிற்கு மட்டுமின்றி மறுமைக்கும் பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

 

இஸ்லாத்தில் பெண்களின் நிலை:

 

இஸ்லாத்திற்கு முன்பு பண்டைய அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிப்பொருளாகவும், சொத்துரிமைப் பெற தகுதியற்றவர்களாகவும், பெண்களும் அவர்களின் சொத்துக்களாகவும் இருந்த நிலையில், இஸ்லாம் இக்கொடிய நிலையை தரைமட்டமாக்கி பெண்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வாரி வழங்கியது.

 

இன்று கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் யாரென்றுப் பார்த்தால் பெரும்பாலும் முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதில் மிக மிக பின் தங்கியிருக்கிறார்கள்,

 

இல்லை பின் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை. காரணம் கல்வியைப் பற்றிய சரியான அடிப்படையறிவு இல்லாததினால்தான்.

 

இஸ்லாம் ஒரு போதும் பெண்களைக் கல்வி கற்க வேண்டாமென்று தடை போடவில்லை. அந்நிய ஆண்களும், அந்நிய பெண்களும் இரண்டறக் கலந்து விடக்கூடாது என்பதுதான் இஸ்லாமிய சட்டமே தவிர கல்வி கற்கக் கூடாது என்றோ,

 

தொழில் செய்யக்கூடாது என்றோ இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை. மாறாக கல்வி கற்க வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறது

 

பெண்களின் மகத்துவம்

 

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான் பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்.

 

ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள் அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள் மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:1)

 

ஆணும், பெண்ணும் ஒன்றையொன்று சார்ந்திருப்பது இறைவன் வகுத்த இயற்கையின் நியதி இத்தகைய பெண்கள் சிறுமை படுத்தப் படக்கூடாது என்பதற்காகவே

 

இறைவன் ஆணிலிருந்து பெண்ணைப் படைத்ததாக மேற்கூறிய வசனத்தின் மூலம் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் பெண்ணினத்தை சிறுமைபடுத்துவதும், அறியாமையில் ஆழ்த்துவதும் ஆணினத்தைப் பாதிக்குமென எச்சரிக்கை செய்கிறான்.

 

ஓடி, ஆடித் திரிந்து தனது அன்றாடத் தேவைகளுக்கென்று சம்பாதிக்கும் ஆண்கள் அலுப்புடன் இல்லம் திரும்புகையில் இன்முகம் காட்டி இனிய சொல் பேசி, பட்ட கஷ்டம் மறந்து சந்தோஷத்தை அள்ளித்தருபவள் பெண் என வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்…

 

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே உவப்பையும்,

 

கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 30:21).

 

ஆணின் அனைத்துக் குறைகளையும் மூடி மறைத்து ஆதரவோடு ஆடையாக இருப்பவளும் பெண்ணே என பெண்ணின் மகத்துவத்தை விவரிக்கின்றான்.

 

பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம்

 

பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறாள். குறிப்பாக, தன்னுடைய குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவளே பெண்ணாகிய தாய்தான்.

 

ஒரு குழந்தை முதலில் அறிமுகம் ஆவது தன் தாயாரிடம்தான் அந்தக் குழந்தைக்கு இரண்டு வருடங்கள் பாலூட்டுவதுடன் இறைபக்தியையும், நல்லொழுக்கத்தையும் சேர்த்தே ஊட்டுகிறாள்.

 

எனவே ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் முதல் பள்ளிக்கூடமாகவும் பாலகப்பருவ ஆசிரியையாகவும் திகழ்பவள் தாயாகிய பெண்தான். அந்தத் தாய்க்கு நல்ல அறிவும்,

 

கேள்வி ஞானமும் இருந்தால்தான் அவளிடம் பாடம் கற்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் என்பதைத்தான் “தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை” என்கிறார்கள்.

 

ஆகவே, அவளுக்கு கல்வியறிவும் கேள்வி ஞானமும் வேண்டுமென்றால் கல்வி மிக அவசியமாக இருக்கிறது.

 

அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகின்றான்

 

நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிவாகவும் நடப்பார்கள். அவர்கள் இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடமை மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 4:34)

 

இல்லத்தரசி எனப் புகழப்படக்கூடியவள் இறைநம்பிக்கை உடையவளாகவும், நல்லொழுக்கம் உடையவளாகவும், தனது கற்பை பாதுகாக்கக் கூடியவளாகவும்,

 

தனது கணவனின் கண்ணியத்தைக் காப்பாற்றக் கூடியவளாகவும், தனது குடும்பத்தின் சொத்து, சுகங்களைப் பேணக்கூயடிவளாகவும் இருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது.

 

இத்தகைய சிறப்பு பெற்ற பெண்மணி கற்புநெறி எது? தன்னை எவ்விதம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் தன் கணவனின் புகழை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்ற தெளிவான அறிவைப் பெற கல்வி அறிவு வேண்டுமல்லவா?

 

ஜாஹிலியாக் காலம் என்று அறியப்பட்ட அறியாமைக் காலத்தில் கூட பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக திகழ்ந்துள்ளார்கள். அபூபக்ர்(ரலி) அவர்களின் அருமை மகளும்,

 

நபி(ஸல்) அவர்களின் மனைவியுமாகிய அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இஸ்லாமிய ஷரிஅத்தில் அதிகம் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் அறிவின் வெளிப்பாடு என்றால் அது மிகையாகாது.

 

Comments

மதுரை நகரின் சிறப்புகள்

இந்தியாவின் பழமை வாய்ந்த நகரங்களில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon