Primary Menu

Top Menu

September 22, 18

கணவனின் கடமை

இறைவணக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாக மனைவியை மகிழ்விக்க முடியவில்லை என்று காரணம் கூறித் தப்பிக்கவும் முடியாது. இரவில் சில பகுதியை மட்டுமே இறைவணக்கத்துக்காக ஒதுக்கலாமே தவிர முழு இரவையும் வணக்கத்திலேயே கழித்துவிட அனுமதியில்லை. ஏனெனில் தனது துணைவிக்கு சுகமளிப்பதும் இறைவணக்கத்தின் பாற்பட்டதே.

 

மனைவிக்கு பணம் அனுப்புவதும், நகை வாங்கிப் போட்டு அழகு பார்ப்பதும், கோடிக்கணக்கில் சொத்துக்களை அவள் பெயரில் வாங்கிக் குவிப்பதும் மனைவியை மகிழ்விப்பதாகவோ, அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிட்டதாகவோ அர்த்தமாகாது.

 

தன் தந்தை தாயுடன் வாழ்ந்தபோது உணவு, உறைவிடம், உடை போன்ற தேவைகள் அவளுக்கு நிறைவாகவே இருந்தன. இவற்றுக்காக அவள் நம் இல்லம் தேடி வரவில்லை.

 

அவளுக்கு திருமணம் நடந்திருப்பது இதற்காக அல்ல, இல்லற சுகத்திற்காக மட்டுமே என்பதைப் புரிந்து அந்த விஷயத்தில் அவளை பரிபூரண திருப்தி பெறச் செய்வது கணவன் மீது நீங்கா கடமை.

 

தன் மனைவியை மகிழ்விக்கச் செய்யும் காரியங்களில் முதன்மையானது அவளுக்குத் தான் அளிக்கின்ற இல்லற இன்பமே என்பதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 

மனைவியை மகிழச் செய்வதில் மிக மிக முக்கிய அம்சம் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு அவளை திருப்தியறச் செய்வது. அதுபோன்றே மனைவியும் கணவனை இல்லறத்தில் மகிழ்விப்பது அவளது தலையாயக் கடமை.

 

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் இன்பத்தை அளிப்பவர்களாகவும் தத்தமது கற்புக்கு அரணாகவும் திகழ வேண்டும்.

 

பெண் இயல்பிலேயே வெட்கமும், நாணமும் மிகந்தவளாக இருப்பதால் இந்த விஷயத்தில் அவளிடமிருந்து எந்த கோரிக்கையும் வருவதை ஆண்மகள் எதிர்பார்க்கக்கூடாது. அவ்வப்பொழுது அவளது தேவையறிந்து நடந்து கொண்டால் இல்லறம் இனிக்கும்.

 

‘ஒரு கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்பவர் குறைந்த பட்சம் அவளுடன் தொடர்ந்து 7 இரவுகள் தங்குவது அவசியம்’ என்று சொன்ன நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

 

அவர்கள் ‘விதவையைத் திருமணம் செய்கின்றவர் தொடர்ந்து மூன்று இரவுகள் தங்கினாலும் போதும்’ என்று சொன்னார்கள்.

கன்னிப் பெண்ணின் நாணம், இளமை போன்ற அம்சங்களை கவனித்து இவ்வாறு கூறியிருப்பதன் ரகசியத்தை உணரும்போது ஒவ்வொரு பெண்ணின் உடற்கூறை அனுசரித்து அவளுடன் இல்லறத்தில் ஈடுபடுவதும், எப்படியானாலும் மனைவியின் உணர்ச்சிக்குத் தக்கபடி இல்லறத்தில் ஈடுபட வேண்டும் என்ற கருத்து தெளிவாகிறதல்லவா?

 

‘அதற்கும்’ கூடவா நன்மை?

 

‘நீங்கள் உங்கள் துணைவியருடன் உடலுறவில் ஈடுபட்டால் அதுவும் உங்களுக்கு நற்செயலாகப் பதிவு செய்யப்படுகின்றது’ என்று ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது தோழர்கள் வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்டார்கள்.

 

‘நாயகமே! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு மனிதன் தன் மனோ இச்சையின் காரணமாக நடந்து கொள்ளும் ‘அந்த’ காரியத்துக்கும் நன்மை கிடைக்குமா?’ எப்படி இது சாத்தியமாகும் என்று வினவினார்கள்.

 

இதற்கு விளக்கமளித்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அன்பர்களே! ஒருவன் தன் மனைவியல்லாத இன்னொருத்தியிடம் இந்த இச்சையைத் தணித்துக் கொள்வது கொடிய பாவம்தானே?’ என்று கேட்க, ‘ஆம்!’ என்று தோழர்கள் சொல்ல,

 

‘தவறான பாதைக்குச் சென்றுவிடாமல் உரிய முறையில் தன் மனைவியின் மூலம் ‘அந்த’ தேவையைப் பூர்த்தி செய்கின்றபோது அதற்காக நன்மை எழுதப்படுவதில் மட்டும் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?’ என்று கூறியபோது தோழர்கள் அகமகிழ்ந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமா!

 

நீதி தேவை

 

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியருடன் வாழ்கின்ற ஒருவர் தம் மனைவியரிடையே உடலுறவிலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை கடமையாக்கிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

 

அவர்கள் ஒரு மனைவியிடம் ஒரு நாள் என்றால் அடுத்த மனைவியிடம் அடுத்த நாள் தங்க வேண்டும். ஒரு மனைவியிடம் தொடர்ந்து 3 நாள் தங்கினால் அடுத்த மனைவியிடமும் தொடர்ந்து மூன்று நாட்கள் தங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

 

உலகின் தேவை இல்லாதவர்கள்

 

ஒரு நாள் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு தம் சகோதரர் அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திப்பதற்காக வந்தார்கள். அப்பொழுது அவர்கள் வீட்டில் இல்லை. அவர்களின் துணைவியார் வரவேற்று அமரச் செய்தபோது அவர்களைப் பார்த்த ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு திடுக்கிட்டார்கள்.

 

காரணம் ஒரு இல்லத்தரசியின் முகத்தில் இருக்க வேண்டிய களை, மகிழ்ச்சி அம்மாதரசியிடம் காணப்படவில்லை. அழுக்கடைந்த ஆடைகளாலும், குழிவிழுந்த கண்களாலும் இவ்வுலகத்தில் ஏன்தான் இன்னும் இருக்கிறோம் என்று எண்ணுவது போன்ற நிலையில் காட்சியளித்தார்கள்.

 

உடனே அப்பெண்ணிடம் சகோதர வாஞ்சையுடன், ‘ஏன் இப்படி இருக்கிறீர்கள்?’ என்று வினவினார்கள். அதற்கு அந்த மாதரசி ‘உங்கள் சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலக வாழ்க்கையில் எந்த விருப்பமும் தேவையுமில்லை. நான் இப்படி இருந்தால் என்ன?’ என்று பதில் கூறியதும் அதிர்ச்சியுடன் விஷயத்தை ஊகித்துக் கொண்ட ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு

 

அவர்கள் (அப்படியா? சரி! அவர் வரட்டும் நான் பேசிக் கொள்கிறேன்’ என்று அங்கேயே அமர்ந்து விட்டார்.

 

‘இது ரமளான் மாதமல்லவே! இப்பொழுது ஏன் நோன்பு வைத்துள்ளீர்கள்?’ எனக் கேட்க ‘நஃபிலான நோன்புதான்’ என்றார்கள். ‘அப்படியானால் நீங்கள் நோன்பை முறித்துவிட்டு என்னோடு சாப்பிட வேண்டும்.

 

இல்லையெனில் நான் சாப்பிட மாட்டேன்’ என்று ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்ல, அவரது வற்புறுத்தலுக்கு இணங்கி நோன்பை விட்டுவிட்டு இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.

 

இரவு முழுவதும் இறை வணக்கமா?

 

அன்று முழுவதும் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஒன்றாக இருந்து அவர்களை கண்காணித்தார்கள். இரவு வந்தது.

 

தம் சகோதரருக்கு படுக்கை விரித்துக் கொடுத்து விட்டு தான் வணங்கப் போவதாக அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னபோது அவரைத் தடுத்து, ‘அபூதர்தாவே! நன்றாகத் தூங்குங்கள்’ என்று கட்டாயப் படுத்தினார்கள் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு.

 

வேறு வழியின்றி சகோதரரும் படுத்தார். சற்று நேரம் சென்றது. மீண்டும் தொழச் சென்றார்கள். இப்பொழுதும் அவர்களை இவர்கள் விடவில்லை.

 

அவர்கள் எழுந்திருப்பதும் இவர்கள் தடுப்பதுமாக இரவில் பெரும்பகுதி கழிந்து பின்னிரவு (தஹஜ்ஜுத்) நேரம் வந்ததும் ‘வாருங்கள் இப்பொழுது நாம் இருவருமே தொழுவோம். என்று கூறி தொழுகைக்கு தயாரானார்கள்.

 

தொழுதபின் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு சொன்னார்கள் ‘அபூதர்தாவே! நிச்சயமாக உனது இறைவனுக்காக நீர் வணங்க வேண்டிய கடமை உமக்கு உண்டு. உமது உடம்புக்காக நீர் பராமரிக்க வேண்டிய கடமையும் உண்டு. அதுபோல் உமது குடும்பத்துக்கு – மனைவிக்கு செய்ய வேண்டிய மகத்தான கடமையும் நிச்சயமாக இருக்கிறது. எனவே, ஒவ்வொருவருக்கும் உரிய கடமையையும் உரிமையையும் கொடுத்துத்தான் தீர வேண்டும்’ என அறிவுறுத்தினார்கள்.

 

சிரமத்தை ஏன் சகித்துக் கொள்கிறாள்?

 

இல்லறத்தின் மூலம் ஒரு பெண் அடைகின்ற இன்பத்தின் பரிசாகத் தன் வயிற்றில் குழந்தையைச் சுமக்கிறாள். கருவுற்றிருக்கும் காலத்திலும், குழந்தையைப் பிரசவிக்கும் நேரத்திலும் அவள் அடைகின்ற சிரமங்கள் கொஞ்சமல்ல.

 

எனினும் இந்தச் சிரமங்களை எல்லாம் சகித்துக்கொள்ள அவளைத் தூண்டுவது அவளுக்குக் கணவன் மூலமாகக் கிடைக்கின்ற இல்லற சுகம்கூட ஒரு காரணமாகும்.

 

எனவே தன் மனைவியை மகிழ்விக்கச் செய்யும் காரியங்களில் முதன்மையானது அவளுக்குத் தான் அளிக்கின்ற இல்லற இன்பமே என்பதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 

பிரிந்து வாழலாமா?

 

திருமணம் செய்து கொண்ட பிறகு மனைவியைப் பிரிந்து வருடக் கணக்கில் வெளிநாடுகளில் வாழ்வோரும், பல மாதங்களாக வெளியூருக்குச் சென்றுவிடுவோரும் இவ்விஷயத்தில் மனைவிக்கு அநீதி இழைக்கிறார்கள் என்பதே உண்மை.

 

தன் தந்தை தாயுடன் வாழ்ந்தபோது உணவு, உறைவிடம், உடை போன்ற தேவைகள் அவளுக்கு நிறைவாகவே இருந்தன. இவற்றுக்காக அவள் நம் இல்லம் தேடி வரவில்லை.

 

அவளுக்கு திருமணம் நடந்திருப்பது இதற்காக அல்ல, இல்லற சுகத்திற்காக மட்டுமே என்பதைப் புரிந்து அந்த விஷயத்தில் அவளை பரிபூரண திருப்தி பெறச் செய்வது கணவன் மீது நீங்கா கடமையன்றோ

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon