Primary Menu

Top Menu

September 26, 18

போலி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து திருமண மோசடியில் ஈடுபட்டவர் கைது!

ஐபிஎஸ் அதிகாரி போல் நடித்து திருமண மோசடி செய்த நபரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஏற்கெனவே மோசடி வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை கானத்தூர் இந்திரா காந்தி நகர் பகுதியில் ஐபிஎஸ் அதிகாரி என கூறிக்கொண்டு, கட்டுமஸ்தான உடம்பு, போலீசார் பயன்படுத்தும் பொலிரோ வாகனம் என பலரை மிரட்டி வந்த நபர் மீது அப்பகுதியினர் சந்தேகமடைந்துள்ளனர்.

 

அவரது நடவடிக்கை குறித்து, அருகில் உள்ள கானத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கானத்தூர் போலீசார், காவல்துறை சீருடையில் இருந்த நபரை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் அவரது பெயர் பாலா என்கிற பாலமணிகண்டன் என்பதும், இவர் 2014ம் ஆண்டு தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி, பெண் மருத்துவர், கல்லூரி மாணவி, பொறியாளர் என 9 பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் கைதானவர் என்பதும் தெரியவந்தது.

 

பாலா, சூர்யா போன்ற பல்வேறு பெயர்களில், ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து நிறைய பெண்களை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.

 

திருமண மோசடி வழக்கில் கைதான போது, பாலமணிகண்டன் குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்கப்பட்டதாகவும், சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர்,

 

மீண்டும் போலீஸ் அதிகாரி என மோசடி வேலைகளில் இறங்கி இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இவர் மீது அண்ணா நகர் காவல் நிலையத்தில் தற்போது 4 புகார்கள் இருப்பதாகவும், பிரபல நிறுவனங்கள், ஓட்டல்களில் ஐ.பி.எஸ் அதிகாரி என மிரட்டி பணம் வசூலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

 

போலி ஐ.பி.எஸ் அதிகாரியாக வேடம் அணிந்த பாலமணிகண்டனுடன், அவருடைய கூட்டாளிகளான நாராயணன், பாரதி விக்னேஷ், பிரவீன்குமார், ராஜ்கமல் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

அதேபோல், அவர் பயன்படுத்திய பொலிரோ வாகனம், செல்போன்களை கைபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon