Primary Menu

Top Menu

October 15, 18

மூளையில் பதியும் நினைவுகளையும் பென் ட்ரைவில் பேக் அப் எடுக்கலாம்!

உங்கள் மூளையில், ஒரு மொழியை பதிவேற்றினால் வெறும் ஒரு நிமிடத்தில் உங்களால் உலகின் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியும். எந்தக்கலையில் வேண்டுமானாலும் எக்ஸ்பெர்ட் ஆக முடியும்.

 

ஒரு நூலகத்தில் இருக்கும் எல்லா புத்தகங்களையும் தரவுகளாக மாற்றி உங்கள் மூளையில் பதிவேற்றினால், எல்லா தகவல்களும் உங்கள் மூளையில் பதிவாகிவிடும்.

 

உங்கள் மூளையில் இருக்கும் எல்லா நினைவுகளையும், தகவல்களையும் டவுன்லோட் செய்து அதனை சேமித்து வைக்கவும் முடியும். இதையெல்லாம் கேட்கவே வியப்பாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கிறதா?

 

ஆனால், இவையனைத்தும் சாத்தியமாகும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த HRL ஆய்வகம்.

 

எப்படி சாத்தியம்?

 

இன்றைக்கு நம் பயன்படுத்தும், செல்போன், கணினிகள் போன்றவையெல்லாம் தானாக இயங்குவது கிடையாது. நாம் குறிப்பிட்ட செயல்களை செய்வதற்காக அதனை புரோகிராம் செய்கிறோம்.

 

உதாரணத்திற்கு நீங்கள், இரண்டு ஐபோன்களை புதிதாக வாங்குவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

 

இரண்டிற்கும் செயல்பாடுகளில், தொழில்நுட்பங்களில் ஏதாவது வேறுபாடு இருக்குமா? இருக்காது அல்லவா? அதே இரண்டு போன்களையும் இருவேறு நபர்களிடம் கொடுத்துவிட்டு, சில நாட்கள் பயன்படுத்தக்கொடுப்பதாக நினைத்துக்கொள்வோம். இப்போது இரண்டிலும் நிறைய மாற்றங்கள் இருக்கும்.

 

இருவரும் தங்களுக்கு விருப்பமான பாடல்களை பதிவேற்றி வைத்திருப்பர். தாங்கள் பார்த்த காட்சிகளை போட்டோ எடுத்து வைத்திருப்பர். தங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப, அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திருப்பர். இதே போலதான் மனித மூளையின் செயல்பாடும்.

 

எல்லா மனிதர்களின் மூளையும் அடிப்படையில் ஒரே செயல்பாட்டையும், பண்புகளையும் கொண்டது. பின்பு மனிதர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை வைத்து அது தன்னை தினமும் அப்டேட் செய்துகொண்டே வருகிறது.

 

நீங்கள் பார்க்கும் விஷயங்கள், வாழ்வில் சந்திக்கும் அனுபவங்கள், கற்றுக்கொள்ளும் விஷயங்கள் ஆகியவற்றைப்பொறுத்து மாறுகிறது. ஆகவே, மூளையும் கணினி போன்றதே.

 

கணினியில் எப்படி நம்மால் தரவுகளை சேமிக்கவும், விருப்பத்திற்கு ஏற்ப மாற்றவும் முடிகிறதோ, அதனை மூளையிலும் நிகழ்த்த முயற்சி செய்யலாம் அல்லவா? அந்த தொழில்நுட்பத்தின் பெயர்தான் ப்ரெய்ன் ஸ்டிமுலேஷன் (Brain Stimulation).

 

வெற்றி அடைந்துவிட்டதா?

 

இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கம், மூளையில் செயற்கையாக கணினிகளின் உதவியுடன் தரவுகளை பதிவேற்றி வெற்றியடைவது மட்டும்தான். அதேபோல, மூளையில் இருந்து தகவல்களை தரவிறக்கம் செய்வது அடுத்த இலக்கு.

 

இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானி மேத்யூ பிலிப்ஸ், “உலகில் இந்த துறையில் நடக்கும் முதல் முயற்சி இது. நாங்கள் முழுமையாக செய்யவில்லை என்றாலும், சிறிய அளவில் வெற்றி அடைந்துள்ளோம்.

 

இதன் முதல் சோதனையாக, நன்கு அனுபவம் வாய்ந்த ஒரு விமானி ஒருவரின் விமானம் ஓட்டும் திறனுக்கான தகவல்களை பதிவிறக்கம் செய்து, அதனை புதியதாக விமானம் ஓட்டக்கற்றுக்கொள்ளவிருக்கும் நபர்களின் மூளையில் பதிவு செய்தோம்.

 

மற்றவர்களை விட, இவர்கள் விமானம் ஓட்டக்கற்றுக்கொள்ளும் வேகம் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

காரணம் தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஒருவரை இந்த துறையில் நிபுணர் ஆக்கிவிட முடியாது. இதற்கு விமானம் பற்றிய அறிவுடன், அதனை இயக்கும் திறனும் இணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, பயிற்சி அனுபவமும் தேவைப்படலாம்.

 

நமது மூளை புதிய விஷயம் ஒன்றை கற்றுக்கொள்ளும் போது, அதன் வடிவமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. மூளையின் நரம்புகளுக்கு இடையே புதிய இணைப்புகள் உருவாகும். தகவல்கள் கடத்தப்படும் பாதைகள் மாறலாம்.

 

இதற்கு நியூரோ பிளாஸ்டி என்று பெயர். நாம் பேசுவது, எழுதுவது, மொழி ஆகியவை எல்லாம் மூளையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் சென்று பதிவாகிறது. அந்த இடத்தைத்தான் எங்கள் ப்ரெய்ன் ஸ்டிமுலேஷன் சிஸ்டம் தூண்டுகிறது.

 

இந்த தரவுகளின் உதவியுடன் புதிய விஷயங்களை நம்மால் மிக விரைவில் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், இது ஒன்றும் புதிய தொழில்நுட்பம் அல்ல. 4000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் மின்சார மீன்களைக்கொண்டு மூளையைத்தூண்டும் விஷயங்களை செய்திருக்கின்றனர்.

 

நமது காலத்தில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்த தொழில்நுட்பம் மீது ஆர்வமும், ஆராய்ச்சியும் அதிகரித்தது. இதற்காக கணினியுடன் இணைக்கப்பட்ட, கருவி ஒன்று உங்கள் தலையில் இணைக்கப்படும். அவை மெதுவாக தரவுகளை எளிதாக மூளையில் பதிவேற்றிவிடும்.

 

வரும்காலங்களில் இது இன்னும் மேம்படுத்தப்பட்டு, முழு இலக்கையும் நாம் நிச்சயம் அடையலாம்” என்கிறார்.

 

ராணுவ வீரர்கள், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்பவர்கள், புதிய மொழி கற்றுக்கொள்பவர்கள், விஞ்ஞானிகள் என நிறையப்பேர் இந்த தொழில்நுட்பம் மூலம் பயனடைவார்கள் என்கிறது அறிவியல் உலகம். தவறாகப் பயன்படுத்தப்பட்டால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்களோ?

 

அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு!!

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon