Primary Menu

Top Menu

September 25, 18

மேடை நாடகங்களில் வானளாவப் புகழ்பெற்ற இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்

பிற இயக்குநர்கள் படமாக்கத் துணியாத புரட்சிகரமான கதைகளைப் படமாக்கி வரலாறு படைத்தவர், கே.பாலசந்தர். ரஜினிகாந்தையும், மற்றும் ஏராளமான புதுமுகங்களையும் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திய சாதனையாளர்.

 

சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் தோன்றி, நாடக உலகில் புகுந்து, பிறகு சினிமா உலகிற்கு வந்தார். தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் உள்ள நல்லமாங்குடி என்ற கிராமம்தான் பாலசந்தரின் சொந்த ஊர்.

 

அந்த கிராமத்தின் முன்சீப்பான கைலாசம் அய்யர் -காமாட்சியம்மாள் தம்பதிகளின் மகனாக 1930 ஜுலை 9-ந்தேதி பிறந்தார்.

 

படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்ததுடன் நாடகத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நண்பர்களை வைத்துக் கொண்டு வீட்டுத் திண்ணையிலேயே நாடகங்கள் நடத்துவார்.

 

ஆரம்பக் கல்வி முடித்ததும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு படிக்கும் போதும் நாடக ஆசை தொடர்ந்தது. அவரே கதை -வசனம் எழுதி, முக்கிய வேடங்களில் நடிப்பது வழக்கம்.

 

கல்லூரியில் ஹாஸ்டல் தினம், பட்டமளிப்பு விழா என்றெல்லாம் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, பாலசந்தரின் நாடகம் நிச்சயம் இடம் பெறும்.

 

“பி.எஸ்.சி” பட்டம் பெற்ற பின், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை பார்த்தார். ஒரு வருட காலம் ஆசிரியர் பணியில் நீடித்தார். அங்கும், மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார்.

 

அதுமட்டுமல்ல; சட்டசபை எப்படி நடக்கிறது, பாராளுமன்றம் எப்படி நடக்கிறது என்பதை விளக்கும் வகையில், “மாதிரி சட்டசபை”, “மாதிரி பாராளுமன்றம்” ஆகிய நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தி, பாராட்டு பெற்றார்.

 

சென்னையில் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில், 1950-ல் பாலசந்தருக்கு வேலை கிடைத்தது. ரத்தத்தில் ஊறிய நாடக ஆசை அப்போதும் தொடர்ந்தது.

 

மாலை ஐந்து மணி ஆனதும், அதிகாரிகளும், ஊழியர்களும் அவரவர் வீட்டுக்கு கிளம்புவார்கள். பாலசந்தரோ, ராஜா அண்ணாமலை மன்றம் அல்லது ஆர்.ஆர்.சபாவுக்குப் போவார். “இன்று என்ன நாடகம்? நாளை என்ன நாடகம்? யார் -யார் நடிக்கிறார்கள்?” என்று அறிவிப்பு பலகைகளைப் பார்ப்பார். முக்கிய நாடகங்களையெல்லாம் தவறாமல் பார்த்து விடுவார்.

 

அந்தக் காலக்கட்டத்தில், பாலசந்தருக்கு நாடகம் மீதுதான் ஆசை இருந்ததே தவிர, சினிமாவை லட்சியமாகக் கொள்ளவில்லை.

 

ஏ.ஜி.அலுவலகத்தில் ஒரு விழா. மேல் அதிகாரியை பாலசந்தர் சந்தித்து, “இந்த விழாவில் நாடகம் நடத்தலாம். நாடகம் நடத்துவதில் எனக்கு அனுபவம் உண்டு” என்று கூறினார்.

 

அதற்கு அதிகாரி அனுமதியளித்தார். உடனே நாடகத்தைத் தயாரிக்கத் தொடங்கினார், பாலசந்தர்.

 

சென்னையில் அவர் முதன் முதலாக நடத்திய இந்த நாடகத்தின் பெயர் “சினிமா விசிறி.” எப்போதும் சினிமா பற்றி பேசிக்கொண்டிருக்கும் கேரக்டர்தான் இந்த நாடகத்தின் கதாநாயகன்.

 

இந்த நாடகத்தின் கதை, வசனம், நடிப்பு அனைத்தும் பாலசந்தர்தான். நாடகத்தைப் பார்த்தவர்கள், பாலசந்தரின் திறமையை வானளாவப் புகழ்ந்தார்கள்.

 

(இந்த நாடகம்தான் பிற்காலத்தில் “எதிர்நீச்சல்” என்ற பெயரில் படமாகியது. சினிமா பித்து கொண்ட கதாநாயகனை, பட்டுமாமி என்ற பெயரில் கதாநாயகியாக மாற்றினார், பாலசந்தர்.)

 

“சினிமா விசிறி” நாடகத்தைப் பார்த்த சினிமா நடிகர் வி.கோபாலகிருஷ்ணன், பாலசந்தரை பார்க்க வந்தார். அவர் தனியாக நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்தார்.

 

“சினிமா விசிறி நாடகத்தைப் பார்த்தேன். ரொம்பப் பிரமாதம். என்னுடைய நாடகம் ஒன்றில் நீங்கள் நடிக்கவேண்டும்” என்று பாலசந்தரிடம் கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

 

அதற்கு பாலசந்தர் சம்மதித்தார். கோபாலகிருஷ்ணனின் “உயிருள்ளளவும்” என்ற நாடகத்தில் நடித்தார். அப்போது பாலசந்தருக்கு வயது 21. நடித்தது அப்பா வேடத்தில்!

 

வயதான தோற்றத்தில் அற்புதமாக நடித்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார். இதைத்தொடர்ந்து, வி.எஸ்.ராகவன் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு பாலசந்தரை தேடி வந்தது.

 

வெளி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பாலசந்தர் சொந்தமாக “ராகினி ரிக்ரியேஷன்ஸ்” என்ற பெயரில் நாடகக்குழு அமைத்தார். நாடகம் நடத்த சபாக்களை மட்டும் நம்பியிராமல், திருமண வீடுகளிலும், மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளிலும் நடத்தி வந்தார்.

 

அப்படி ஒரு திருமண வீட்டில் அவர் நடத்திய நாடகத்தின் பெயர் புஷ்பலதா. “புஷ்பா”, “லதா” என்ற இரண்டு பெண்களைப் பற்றி மூன்று கல்லூரி மாணவர்கள் அடிக்கும் அரட்டைதான் நாடகம். கடைசிவரை புஷ்பாவோ, லதாவோ வரமாட்டார்கள்!

 

பாலசந்தரின் இந்த புதுமை நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது.

 

ஏ.ஜி.ஆபீஸ் உயர் அதிகாரி மாற்றலாகிச் செல்லும்போது, பிரிவு உபசார விழாவில் பாலசந்தர் நடத்திய நாடகம் “மேஜர் சந்திரகாந்த்.”

 

இந்த நாடகத்தை நடத்தும்போது, ஒரு புதுமையைப் புகுத்தினார். மேடைக்கு திரை கிடையாது. மூன்று பக்கமும் திறந்தவெளி! நடிகர்கள் பார்வையாளர்களுடன் அமர்ந்து இருப்பார்கள். நடிக்க வேண்டிய கட்டம் வரும்போது, கூட்டத்தில் இருந்து எழுந்து வந்து நடித்து விட்டுப் போவார்கள்!

 

நாடகத்தில் மேஜர் சந்திரகாந்த் வேடத்தில் பாலசந்தர் நடித்தார். இந்த நாடகம், அவருக்கு மேலும் புகழ் தேடித்தந்தது.

 

ஏ.ஜி.ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதே 1956 மே 13-ந்தேதி பாலசந்தருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் ராஜம்.

Comments

கல்யாண கனவு

அனைவரும் பூஜாவை அலங்கரிக்க தொடங்கினர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon