Primary Menu

Top Menu

April 24, 18

பெண்களை இந்தியாவிற்கு அனுப்புவதில் கவனம் தேவை! – துருக்கியில் நூதன போராட்டம்

உங்கள் பெண்களை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்’ , `இந்தியாவில், பசுவுக்கு இருக்கும் மதிப்புகூட பெண்களுக்கு இல்லை’ உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற டி-ஷர்ட்டுகளை அணிந்து, காஷ்மீர் சிறுமிக்காக துருக்கியில் நியாயம் கேட்ட இளைஞர்களின் போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

 

ஜம்மு-காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில், 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அங்குள்ள கோயில் ஒன்றில் மயக்கமருந்து கொடுக்கப்பட்டு, அவர் சிறைவைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இது தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக தீபிகா எஸ்.ராவத் என்ற வழக்கறிஞர் வாதாடிவருகிறார். இந்த வழக்கில் ஆஜராகக் கூடாது என்று கூறி, தமக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தீபிகா புகார் தெரிவித்தார்.

 

இதுதொடர்பான வழக்கை ஜம்மு-காஷ்மீர் நீதிமன்றத்தில் விசாரிக்காமல், சண்டிகர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞருக்கு, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு உத்தரவிட்டது.

 

மேலும், சண்டிகர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது தொடர்பாக, வரும் 28-ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் அறிவித்து வழக்கை ஒத்திவைத்தது. காஷ்மீர் சிறுமிக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவத்தி பேரணி நடைபெற்றது.

 

இந்த நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் விமானநிலையத்தில், காஷ்மீர் சிறுமிக்கு நியாயம் கேட்டு இளைஞர்கள் சிலர் நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

 

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டிக்கும் வகையில் வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்டுகளை அவர்கள் அணிந்து, தங்கள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர். அவர்கள் அணிந்திருந்த டி-ஷர்ட்டுகளில், `இந்தியாவில் பசுக்களுக்கு இருக்கும் மதிப்புகூட பெண்களுக்கு இல்லை, உங்கள் பெண்களை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

Partha

In4 Network Author

Leave a Reply