Primary Menu

Top Menu

September 25, 18

மறுபிரவேசம் எடுத்த நடிகை லதா!

நடிகை லதா ருமணத்துக்குப்பின் படங்களில் நடிக்காமல் இருந்தவர், பின்பு 10 ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் நடித்தார்.

 

லண்டனில் இருந்து லதா திரும்பியபின், பல பட அதிபர்கள் அவரை மீண்டும் நடிக்க அழைத்தனர். ஆனால், “இனி நடிப்பதாக இல்லை” என்பதையே பதிலாக சொல்லி வந்தார்.

 

ஆனால், நடிகரும் டைரக்டருமான ராஜ்கிரண் கேட்டபோது லதாவால் மறுக்க முடியவில்லை. அவர் இயக்கிய “பொன்னு விளையும் பூமி” படத்தில் நடித்தார் லதா. இதன் மூலம் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார்.

 

சினிமாவில் தனது மறுபிரவேசம் குறித்து லதா கூறியதாவது:-

 

“குடும்ப வாழ்க்கைக்குள் வந்த பிறகு நடிப்பு பற்றி நான் நினைத்துப் பார்க்கவில்லை. 2 மகன்களுக்கு அம்மா என்ற முறையில் அவர்களின் மகிழ்ச்சி, அவர்களின் கல்வி, கணவரின் தேவையறிந்து செயல்படுவது என்றே முழு நாட்களும் ஓடின.

 

இந்த சமயத்தில்கூட, டைரக்டர் கே.பாக்யராஜ் என் லண்டன் முகவரியைத் தெரிந்து கொண்டு என்னிடம் தொடர்பு கொண்டார். அப்போது அவர், எம்.ஜி.ஆரும் நானும் நடித்து பாதியில் நின்றுபோன “அண்ணா நீ என் தெய்வம்” படத்தை கொஞ்சம் மாற்றி “அவசர போலீஸ்” என்ற பெயரில் எடுக்கவிருப்பதாகவும், அதன் சில காட்சிகளில் நான் நடித்துத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

நான் அவரிடம், “நடிப்பை அடியோடு மறந்து விட்டேன். அதனால் தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்” என்று தெளிவாக கூறி, நடிப்புக்கு வைத்த முற்றுப்புள்ளியை உறுதி செய்தேன்.

 

லண்டனில் இருந்து எப்போதாவது ஊருக்கு வரும்போது, எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் `வீனஸ் ஸ்டூடியோ’வில் நடக்கும் படப்பிடிப்பு கண்ணில் படும். “நாமும் இந்த சினிமாவில்தானே இருந்தோம். இப்போது நடிப்பு பற்றிய சிந்தனையே எழவில்லையே” என்று நினைத்துக் கொள்வேன்.

 

தங்கையின் திருமணத்தையும் முடித்த நேரத்தில் ஒருநாள் மஞ்சுளாவின் பிறந்த நாளுக்காக அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

 

“உலகம் சுற்றும் வாலிபன்” படத்தில் நடித்த நாளில் இருந்தே நானும் மஞ்சுளாவும் நல்ல தோழிகளாகி விட்டோம். அந்த நட்பு இன்றைக்கும் அதே நிலையில் தொடர்கிறது.

 

நான் மஞ்சுளாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ராஜ்கிரண் அங்கே வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், அப்போது அவர் இயக்கி நடிக்கவிருந்த “பொன்னு விளையும் பூமி” படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.

 

அப்போதும், “நான் நடிப்பதில்லை. நடிப்பையெல்லாம் விட்டு வருஷக்கணக்காச்சே” என்றேன். ஆனால் அவர் விடவில்லை. “எம்.ஜி.ஆருடன் நடித்த நட்சத்திரம் நடிப்பை விடுவதாக சொன்னால் எப்படி?” என்றார்.

 

அவர் பேச்சில் எப்படியும் என்னை நடிக்க வைத்துவிடவேண்டும் என்கிற குறிக்கோள் பிரதானமாக இருந்தது.

 

அன்றைக்கு `முடியாது’ என்று மறுத்துவிட்டாலும், ஒரு மாதம் அவர் என்னை விடவில்லை. “படத்தின் கதையைக் கேளுங்கள். மறுக்காமல் நடிப்பீர்கள்” என்று வற்புறுத்தி வந்தார். ஒருநாள் என்னை சந்தித்து கதையும் சொன்னார்.

 

எம்.ஜி.ஆர். ஹீரோயினை எப்படியாவது நமது படத்தில் நடிக்க வைத்துவிடவேண்டும் என்ற அவரது ஆவல் தெரிந்தது. மஞ்சுளாவும் என்னிடம், “இவ்வளவு தூரம் உனக்காக காத்திருப்பவரை இனியும் `முடியாது’ என்று சொல்லி நோகடிக்காதே. நல்ல கேரக்டராகத்தானே இருக்கிறது. நடியேன்” என்றார்.

 

ஒரு வழியாக இப்படி 1997-ல் நான் ஒப்புக்கொண்டு நடித்து வெளியான படம் “பொன்னு விளையும் பூமி.”

 

இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. முதன் முதலாக வயதான மேக்கப் போட்டு நடிக்க வைத்தார்கள். காமிரா முன் நிற்கும்வரை கூட, “எப்படி நடிக்கப்போகிறேனோ” என்ற உதறல் இருந்தது. ஆனால் டைரக்டர் “ரெடி… டேக்” என்றபோது எப்படித்தான் நடித்தேன் என்பதே தெரியாது. யூனிட் ஆட்கள் கரகோஷம் செய்தபோதுதான் நடிப்பு மறுபடியும் எனக்கும் ஒட்டிக்கொண்டு விட்டதை உணர்ந்தேன்.

 

தொடர்ந்து மளமளவென படங்கள் வந்தன. எனக்குப் பிடித்த கேரக்டர்களை மட்டும் ஏற்று நடித்தேன்.”

 

என்று நடிகை லதா கூறினார்.

Comments

கல்யாண கனவு

அனைவரும் பூஜாவை அலங்கரிக்க தொடங்கினர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon