Primary Menu

Top Menu

September 24, 18

வெறும் வார்த்தைகளைச் சொல்லியே நோயாளிகளை குணப்படுத்திய உளவியல் மருத்துவர்!

தோட்டத்தை ஒட்டி அந்த கிளினிக் இருந்தது. வீடும் அங்கேயே இருந்தது. காலையில் இருந்தே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். பெரும்பாலும் நோயாளிகள். கவலை தோய்ந்த முகங்களுடன் வந்தவர்களெல்லாம் நம்பிக்கை மிளிர வெளியே சென்று கொண்டிருந்தனர்.

அந்தப் பெண்ணுக்கு மார்பில் ஒரு வீக்கம் இருந்தது. அது கேன்ஸராக இருக்கலாம் என்று அவள் ஏற்கெனவே பார்த்த டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் தோட்ட வீட்டில் இருந்த மருத்துவரோ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அப்படிச் சொல்லச் சொல்ல அந்தப் பெண்ணுக்குச் சந்தோஷமும் நம்பிக்கையும் வர ஆரம்பித்தது. அந்தப் பெண் அங்கே மூன்றாவது முறையாக வந்திருந்தாள். முதல் முறை வந்ததிலிருந்து இந்த முறை மார்பு வீக்கம் நன்றாக வடிந்திருந்தது.

அவர் ஒரு கொல்லர். அவருக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்கும். அவருடைய வலது கையை தோளுக்கு மேல் தூக்க அவரால் முடியவில்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக அந்தப் பிரச்னையால் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். தோளுக்கு மேல் தூக்க முயன்றால் உயிரே போய்விடும் போல வலித்தது. தோட்ட வீட்டு மருத்துவரை நம்பி அவர் வந்திருந்தார்.

மனத்தை முழுமையாக வியாபிக்கும் ஒவ்வொரு கருத்தும் நிஜமாக மாறக்கூடியது. அந்தக் கருத்தை நம் வெளிமனத்தைக் கொண்டு மாற்ற எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும், அந்தக் கருத்தைப் பலப்படுத்தவே உதவி செய்யும் என்று அந்தத் தோட்ட மருத்துவருக்குத் தெரியும். அதை நிரூபிக்க கூட்டத்திலிருந்த ஒரு பெண்ணை அழைத்தார். அப்பெண் வந்ததும் இரண்டு கைகளையும் விரல்களோடு விரல்களாகக் கோக்கச் சொன்னார். அந்தப் பெண்ணும் அப்படியே செய்தாள். கைகள் இரண்டையும் சிக்கிக்கொண்டதுபோல இறுக்கச் சொன்னார். அவளும் அப்படியே செய்தாள். பின் மருத்துவர் சொன்னார், ‘என்னால் கைகளைப் பிரிக்க முடியாது என்று சொல்லிக் கொள்ளுங்கள்’ என்றார். அப்பெண்ணும் அப்படியே பலமுறை கூடியிருந்தவர்கள் காதில் விழும்படிச் சொன்னாள். பின் கைகளைப் பிரிக்கச் சொன்னார் மருத்துவர். அவளும் முயன்றாள். ம்ஹும். வெளியிலிருந்து ஏதோ ஒரு சக்தி அவளுடைய கையைப் பிரிக்க முடியாமல் தடுப்பதுபோல உணர்ந்தாள் அந்தப் பெண். எவ்வளவோ முயன்றும் அவளால் சேர்த்த கைகளைப் பிரிக்க முடியவில்லை. கூடியிருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின் அந்த மருத்துவர், ‘என்னால் கைகளைப் பிரிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் சொல்லுங்கள்’ என்று சொன்னார். அப்பெண்ணும் அப்படியே சொன்னாள். பின் கைகளைப் பிரிக்க முயன்றாள். எந்தத் தடங்கலும் இன்றி இப்போது அவளால் கைகளைப் பிரிக்க முடிந்தது. ஏதோ மேஜிக் ஷோ பார்ப்பதுபோல் இருந்தது சுற்றியிருந்தவர்களுக்கு.

அந்தப் பெண் செய்தது போலவே பலரையும் மருத்துவர் செய்யச் சொன்னார். அதில் பெண்கள்தான் பெரும்பாலும் வெற்றி பெற்றனர். ஆண்களுக்கு வெற்றியின் விகிதம் சற்றுக் குறைந்திருந்தது. அதன் பின், கையைத் தோளுக்கு மேல் தூக்க முடியாத கொல்லரை அழைத்தார் மருத்துவர். தோளுக்கு மேல் கைகளைத் தூக்கும்படி சொன்னார். நம்பிக்கையில்லாமல் தோள்வரை மெல்ல வலது கையைத் தூக்கினார் அவர். பயங்கரமாக வலியெடுக்க ஆரம்பித்தது.

‘வலிக்கிறது’ என்று முறையிட்டார் அவர்.

‘கையை கீழே இறக்காதீர்கள். அப்படியே வைத்திருங்கள். பத்து வருஷமாக அந்தக் கையைத் தோளுக்கு மேலே தூக்க முடியாது என்று நம்பி வந்திருக்கிறீர்கள். இப்போது என்னால் தூக்க முடியும் என்று நினையுங்கள்’ என்றார் மருத்துவர். நோயாளி அவரை நம்பிக்கையில்லாமல் பார்த்தார்.

‘சீக்கிரம், கண்களை மூடிக்கொள்ளுங்கள். என்னால் முடியும், நான் தூக்குவேன் என்று சொல்லுங்கள்’ என்றார் மறுபடியும்.

பாதிமனத்துடன் கையை உயர்த்த முயன்ற அந்தக் கொல்லர், மேலே தூக்கினால் கை வலிக்கிறது என்று மறுபடியும் முறையிட்டார்.

கையை அப்படியே வைக்கச் சொல்லிவிட்டு, ‘உங்கள் வலி போய்விட்டது, போய்விட்டது’ என்று சொல்லி அவர் தோளில் லேசாகத் தட்டினார் மருத்துவர். என்ன ஆச்சரியம், வலி மெல்லக் குறைந்து கொண்டே போய் கடைசியில் போயே விட்டது! ‘ம், இப்போது கையை மெல்லத் தூக்குங்கள்’ என்றார். கொல்லரும் அப்படியே முயன்றார். அவரால் கையைத் தோளுக்கு மேலே தூக்க முடிந்தது. வலியும் சுத்தமாக இல்லை.

‘என் நெஞ்சில் உங்கள் கையால் குத்துங்கள்’ என்றார் மருத்துவர். சிரித்துவிட்டு, லேசாகத் தட்டினார் கொல்லர். ‘இல்லையில்லை, நன்றாக பலம் கொண்ட மட்டும் குத்துங்கள்’ என்று சொன்னார் மருத்துவர். கொஞ்ச நேர தயக்கத்துக்குப் பிறகு வைகைப் புயல் வடிவேலுவின் வயிற்றில் சுந்தர் சி. குத்துவதுபோல மருத்துவர் நெஞ்சில் ‘பஞ்ச்’ ஒன்று கொடுத்தார் கொல்லர்.

‘போதும், எனக்கு வலிக்க ஆரம்பித்து விட்டது’ என்று புன்னகையுடன் சொன்ன மருத்துவர், ‘உங்களுக்கு முழுமையாகக் குணமாகிவிட்டது. பத்து வருஷமாகத் தவறான விதைகளை உங்கள் மனத்தில் போட்டு வளர்த்து வந்திருக்கிறீர்கள். இப்போதுதான் சரியான விதைகளைப் போட்டிருக்கிறீர்கள். இதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் அறிவு சொல்வதைவிட, உங்கள் கற்பனையை நம்புங்கள். அது ஆழ்மனத்துக்குச் சென்று உங்களுக்கு நன்மையே செய்யும்’ என்று சொல்லி அனுப்பினார்.

அதுமட்டுமின்றி, சில நோயாளிகளுக்குச் சிறப்பாக, அவர்களின் நோய்க்கு ஏற்றபடி, அவர்கள் தலைமீது கையை லேசாக வைத்த வண்ணம் சஜஷன்களைக் கொடுப்பார். உதாரணமாக, காலில் புண் உள்ள ஒரு பெண் நோயாளியப் பார்த்து, ‘உன் கால் மறுபடியும் முழு ஆரோக்கியமடைவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் உன் ஆழ்மனம் பார்த்துக்கொள்ளும். உன் கால் விரைவிலேயே முழு குணமடையும். திசுக்களும் சரியாகிவிடும். தோல் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் மாறிவிடும். அதன் பிறகு அந்த ஆரோக்கிய நிலை எப்போதும் இருக்கும்’ என்பது போன்ற வாசகங்களைச் சொல்வார்.
எல்லாம் முடிந்த பிறகு, தன் நோயாளிகளைக் கண்களைத் திறக்கச் சொல்வார். அழகான கனவிலிருந்து விழித்தெழுவதுபோல, அவர்களும் விழிப்பார்கள்.
.

கடைசியாக அவர்களிடம் அவர் பின்வருமாறு சொல்வார்:

‘என்னிடம் எந்த நோய் தீர்க்கும் ஆற்றலும் இல்லை. இதுவரை நான் யாருடைய நோயையும் தீர்த்ததில்லை. நோய் தீர்க்கும் ஆற்றலானது ஒவ்வொரு நோயாளிக்குள்ளும் இருக்கும் ஒன்றாகும். அதை வைத்துக்கொண்டேதான் நீங்கள் நோயோடு அலைகின்றீர்கள். நீங்கள் பார்த்த குணமடைந்த அனுபவங்களெல்லாம் உங்களுக்கு உள்ளேயே இருக்கும் ஆற்றலின், சக்தியின் வெளிப்பாட்டைத்தான். உங்களுக்குள்ளேயே இருக்கும் நோய் தீர்க்கும் மனநிலையை வெளிக்கொண்டு வந்து அடையாளம் காட்டியதுதான் நான் செய்த வேலை. எனவே, உங்கள் விதி உங்கள் கைகளில்தான் இருக்கிறது. எனவே, ‘ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலும் நான் மேலும் மேலும் சிறப்படைந்து கொண்டே வருகிறேன்’ என்ற வாசகத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி வாருங்கள்’ என்று முடித்துக் கொள்வார். அவரைப் போன்ற நேர்மையான, வெளிப்படையான மனிதர்கள் கிடைப்பது எவ்வளவு அபூர்வமான விஷயமாக மாறிப்போய்விட்டது இந்தக் காலத்தில்!
.

இதெல்லாம் நடந்தது ஃபிரான்ஸ் நாட்டில், 1921-ம் வருஷம். வெறும் வார்த்தைகளைச் சொல்லியே நோயாளிகளை குணப்படுத்திக் கொண்டிருந்த அந்த மருத்துவர்தான், இன்று உலகப் புகழ் பெற்றிருக்கும் உளவியலாளர் எமிலி கூ (Emile Coue) என்பவர். மேலே உள்ள புகழ்பெற்ற மேற்கோளின் சொந்தக்காரர். அவர் மாத்திரை மருந்து கொடுத்ததைவிட, நம்பிக்கை கொடுத்ததே அதிகம். அவர் கொடுத்த நம்பிக்கையின் பெயர் ‘சஜஷன்’ (suggestion). தமிழில் இதற்கு இணையான சொல் இன்னும் தரப்படவில்லை. ‘ஆட்டோ சஜஷன்’ அல்லது ‘செல்ஃப் ஹிப்னாசிஸ்’ என்பதுதான் அவருடைய மருத்துவ முறையாக இருந்தது.

Self-mastery through Conscious Autosuggestion என்ற அவருடைய நூல் அந்தக் காலத்தில் பரபரப்பாக விற்றுத் தீர்ந்து அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. ‘ஆட்டோ சஜஷன்’ என்று இன்று உலகெங்கும் அறியப்படும் முறையை அந்த நூலில்தான் அவர் விரிவாக அறிமுகப்படுத்தினார் அல்லது பிரபலப்படுத்தினார். ‘ஆட்டோ சஜஷன் என்பது, பிறப்பிலிருந்தே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற சக்தியாகும். அது அளக்க முடியாத ஆற்றல் கொண்டதாக உள்ளது’ என்றார் அவர். ‘ஒவ்வொரு நாளும், நான் எல்லா வகையிலும் மேலும் மேலும் சிறப்படைந்து கொண்டு வருகிறேன்’ என்ற அவருடைய வாக்கியம், உளவியல் உலகின் மந்திரமாகவே ஆகிவிட்டது.
.

பொதுவாக, தன் நோயாளிகளை கண்களை மூடியிருக்கச் சொல்லிவிட்டு, அவர் கீழ்க்கண்டவாறு சொல்வார்:

‘நான் இப்போது சொல்லப்போகும் வார்த்தைகள் உங்கள் மனத்தில் நீங்காத இடம் பிடித்துக்கொள்ளும். உங்களுடைய அறிவையும் விருப்பத்தையும் மீறி, என்ன நடக்கிறதென்றே உங்களுக்குத் தெரியாத வண்ணம், உங்கள் முழு உடலும், உறுப்புகளும், மனமும் என் சொற்களுக்குக் கட்டுப்படும்.’

‘ஒவ்வொரு நாளும், காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உங்களுக்கு நல்ல பசி ஏற்படும். உணவை நீங்கள் அவசரப்படாமல் சுவைத்து உண்பீர்கள். உங்கள் பற்களால் உணவை நன்கு அரைத்து மிருதுவாக்கி விழுங்குவீர்கள். அதனால் அந்த உணவு செரிப்பதில் உங்களுக்கு எந்தக் கஷ்டமும் ஏற்படாது. உங்கள் வயிற்றிலோ குடல்களிலோ எந்தப் பிரச்னையும் ஏற்படாது. உங்கள் உணவு ரத்தமாக, சக்தியாக, பலமாக – சுருக்கமாகச் சொன்னால் ஆரோக்கியமான உயிராக மாறும்.

‘நீங்கள் உணவை நன்றாகத் செரித்து விட்டதால், கழிவுகளை வெளியேற்றுவதில் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்தவுடன் நீங்கள் கழிவுகளை முறையாக கஷ்டமின்றி வெளியேற்றுவீர்கள். அதற்காக மலமிளக்கியோ, களிம்புகளோ நீங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியமிருக்காது.’

‘ஒவ்வொரு இரவும் நீங்கள் விரும்பும் நேரத்தில் உங்களுக்குத் தூக்கம் வந்துவிடும். நீங்கள் விழிக்கவேண்டும் என்று நினைக்கின்ற மணிவரை நன்றாகத் தூங்குவீர்கள். இத்தனை மணிக்கு விழிக்கவேண்டும் என்று நீங்கள் முடிவு செய்த நேரத்துக்குச் சரியாக உங்களுக்கு விழிப்பு வரும். உங்கள் தூக்கம் அமைதியானதாகவும், ஆழமானதாகவும், தொல்லைகளற்றதாகவும் இருக்கும். கெட்ட கனவுகளோ, பயமுறுத்தும் கனவுகளோ உங்களுக்கு வராது. கனவுகள் வந்தாலும் அவை இன்பகரமானவையாகவே இருக்கும். விழித்தவுடன் ஆரோக்கியமாகவும், ஒளி பொருந்தியவராகவும், அந்த நாளின் வேலைகளை முடிப்பதற்குத் தயாராகவும், விருப்பம் உள்ளவராகவும் எழுவீர்கள்.’

‘இதற்கு முன் உங்களுக்கு மனத்தளர்ச்சி, இறுக்கம், வருத்தம், துயரம் போன்றவை இருந்திருந்தால், இப்போது அவை எதுவும் இருக்காது. அதற்குப் பதிலாக இப்போது நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் உணர்வீர்கள். கவலைப்பட்டே ஆகவேண்டும் என்பதற்கான தகுந்த காரணங்கள் இருந்தால்கூட, நான் சொல்கிறேன், நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்.’

‘நீங்கள் பொறுமையிழந்தவராகவும், கடுகடுத்தவராகவும், எளிதில் அணுக முடியாத கோபக்காரராகவும் இதற்கு முன் இருந்திருந்தால், அதெல்லாம் மாறி, இனி நீங்கள் பொறுமைசாலியாகவும், இனிமையாகப் பேசக்கூடியவராகவும், இன்முகத்தோடு நோக்குபவராகவும், எதையுமே கட்டுப்பாட்டுக்குள் வைப்பவராகவும் இருப்பீர்கள். இதற்கு முன் உங்களை எதுவெல்லாம் எரிச்சல் படுத்தியதோ, அதெல்லாம் இப்போது உங்களை அமைதிப்படுத்தவே உதவும்.

‘உங்களுக்கு இதற்குமுன் சமயங்களில் கெட்ட எண்ணங்களும், பயமும் இருந்திருந்தால், அப்படிப்பட்ட எண்ணங்கள் மெல்ல மெல்ல மறையும். மேகத்தைப்போல அவை நீங்கிப்போகும். கெட்ட எண்ணங்களும், எதிர்மறையான எண்ணங்களும் விழித்தவுடன் மறைந்து கரைந்து போகும் கனவுகளைப்போல போய்விடும்.

‘உங்கள் உடலின் உறுப்புகள் யாவும் மிகச்சரியாக இயங்கும். உங்கள் இதயம் எப்படித் துடிக்க வேண்டுமோ அப்படித் துடிக்கும். ரத்த ஓட்டமும் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கும். உங்கள் நுரையீரல் சரியாக இயங்கும். உங்கள் வயிறும், குடல்களும், கல்லீரலும், பித்தநீர் நாளமும், சிறுநீரகமும், சிறுநீரகப் பையும் அவைகளின் எல்லா வேலைகளையும் மிகச் சரியாகச் செய்யும். எந்த உறுப்பாவது நோய்வாய்ப்பட்டிருந்தால், அது நாளாக நாளாகக் குறைந்து சரியாகும். மிகக்குறைந்த காலத்திலேயே எல்லாம் சரியாகி ஆரோக்கியம் திரும்பும். உறுப்புகளும் சரியாக வேலை செய்யும்.’

‘மேலும், உடலில் ஏதாவது காயமிருந்தால், அது சீக்கிரமே முழுமையாகக் குணமடையும். புண்ணோ காயமோ இருப்பது உங்களுக்குத் தெரியாவிட்டாலும் சரியே.’

‘இன்னும் நான் உங்களுக்கு முக்கியமாகச் சொல்லவேண்டியதொன்று உள்ளது. அது இதுதான். கடந்த காலத்தில் உங்களுக்குத் தன்னம்பிக்கைக் குறைந்திருந்தால், அது இப்போது தேவையான அளவு கூடியிருக்கும். உங்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படும். நான் திரும்பவும் கூறுகிறேன், உங்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படும். உங்களுக்கு உள்ளே உள்ள மாபெரும் ஆற்றலை அடிப்படையாக வைத்து உருவாவதே உங்கள் தன்னம்பிக்கை. உங்கள் அறிவு ஒப்புக்கொள்ளும் எந்தக் காரியத்தையும் உங்களால் செய்ய முடியும். நீங்கள் விரும்பும் எதையும் தன்னம்பிக்கையின் உதவி கொண்டு செய்து முடிக்கலாம்.’

‘நீங்கள் செய்து முடிக்க வேண்டிய காரியம் எதுவாக இருந்தாலும் அது எளிதானது என்றே நீங்கள் நினைப்பீர்கள். ‘கஷ்டம்’, ‘சாத்தியமில்லை’, ‘என்னால் முடியாது’ போன்ற வார்த்தைகள் உங்களிடமிருந்து மறைந்துவிடும். அதற்குப் பதிலாக, ‘அது எளிதானதுதான்’, ‘என்னால் செய்ய முடியும்’ போன்ற பிரயோகங்கள் வந்துவிடும். அடுத்தவர்களுக்குக் கடினமாக இருக்கும் வேலையானாலும், அது உங்களுக்கு எளிதானதாக மாறிவிடும். அவ்வேலையை நீங்கள் களைப்பின்றி, கடுமையான முயற்சிகள் தேவையின்றி, பறவை பறப்பதைப்போல, மீன்கள் நீந்துவதைப்போல எளிதாக முடிப்பீர்கள்.’

இப்படிப்பட்ட பொதுவான சஜஷன்களை தன் நோயாளிகளுக்குக் கொடுப்பார் அவர்.

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon