Primary Menu

Top Menu

September 22, 18

"மெர்சல்" – விமர்சனம் !!

மருத்துவம் வியாபாரமாவதற்கு எதிராகப் பொங்கியெழும் விஜய் அதற்கு எதிராக என்ன செய்தார், மக்களுக்கு என்ன சமூகக் கருத்துச் சொல்கிறார் என்பதே “மெர்சல்” படத்தின் கதை.

திரைப்படம் – மெர்சல்

நடிகர்கள் – விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், ஹரீஷ் பெராடி, வடிவேலு, கோவை சரளா,
எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ்

இசை – ஏ.ஆர். ரஹ்மான்

ஒளிப்பதிவு – ஜி.கே. விஷ்ணு

இயக்கம் – அட்லி

படம் தொடங்கும்போது, சிலர் கடத்தப்படுகிறார்கள். ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் செய்யும் மாறன் (விஜய்), விருது ஒன்றைப் பெற வெளிநாட்டுக்குச் செல்லும்போது, மிகப் பெரிய மருத்துவரான அர்ஜுன் சக்காரியா (ஹரீஷ் பெராடி) ஒரு மேஜிக் ஷோவில் கொல்லப்படுகிறார்.

முன்னதாகக் கடத்தப்பட்டவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். மாறனைக் கைது செய்து விசாரிக்க ஆரம்பிக்கிறது காவல்துறை. அப்போது தான், இந்த சம்பவங்களில் ஈடுபட்டது, மருத்துவர் மாறன் அல்ல, அவரைப் போலவே இருக்கும் வெற்றி (விஜய்) என்பது தெரிய வருகிறது. காவல்துறை வெற்றியைத் தேடும் அதே நேரம், மிகப் பெரிய மருத்துவக் குழுமத்தின் தலைவரான டேனியல் ஆரோக்கியராஜும் (எஸ்.ஜே. சூர்யா) வெற்றியைத் தேடுகிறார்.

இந்தக் கொலைகளுக்கு என்ன காரணம், மாறனும் வெற்றியும் எப்படி ஒரே மாதிரி இருக்கிறார்கள், டேனியல் ஏன் வெற்றியைத் தேடுகிறான் என்பது மீதிக் கதை.

வில்லன்களால் கொல்லப்படும் தந்தை, ஆள் மாறாட்டம் செய்து பழிவாங்கும் மகன்கள் என்பது போன்ற கதையை பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் தனித்துத் தெரிவது மருத்துவத் துறையை களமாகத் தேர்வு செய்திருப்பது தான். பொது மருத்துவ வசதி, பெரிய மருத்துவமனைகளில் நடக்கும் முறைகேடுகள் போன்றவற்றை கதையின் ஊடாக தொட்டுக்காட்டுகிறார் விஜய். இது தொடர்பான வசனங்களுக்கு திரையரங்குகளில் பெரும் வரவேற்பும் கிடைக்கிறது.

மேஜிக் கலைஞர் விஜய், ஐந்து ரூபாய் டாக்டர் விஜய் என இரண்டுபேரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். தங்கள் குடும்பத்தின் ஃப்ளாஷ்பேக், டாக்டர் விஜய்க்கு வடிவேலு மூலம் தெரிய வர, இருவரும் இணைந்து எஸ்.ஜே.சூர்யா கணக்கை முடிக்க முடிவெடுக்கிறார்கள். வடிவேலு மூலம்தான் மேஜிக் கலைஞர் விஜய்க்கு அவரது கதை தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம். ஆனால், வடிவேலு மேஜிக் விஜய்யை சந்தித்தது எப்படி என்கிற முன்கதை படத்தில் மிஸ்ஸிங். ஒருவேளை நேரம் கருதி இந்தக் காட்சிகளை நீக்கிட்டாங்களோ என்னவோ..?

இனிமேல் தான், ‘தளபதி‘ விஜய்யின் என்ட்ரி. அதாவது ஃப்ளாஸ்பேக் ஸ்டார்ட்ஸ் நவ். பஞ்சாப்பின் பொட்டல் காட்டில் சர்தார்ஜி, சிங்குகளின் பல்லே பல்லே டான்ஸுக்கு மத்தியில் ‘ஆளப்போறான் தமிழன்’ என ஆடிப்பாடுகிறார் மதுரைக்கார தளபதி. அவரது மனைவியாக நித்யா மேனன். நித்யா மேனன், படத்தின் பிள்ளைத்தாச்சி கேரக்டருக்காக உடல் எடையை நிஜமாகவே அதிகமாக்கி, நடிகர் விக்ரமுக்கெல்லாம் டஃப் ஃபைட் கொடுத்திருக்கிறார் போலும்! விஜய்க்கும், நித்யா மேனனுக்குமான ரொமான்ஸ் காட்சிகளுக்கு தியேட்டரில் செம்ம ரெஸ்பான்ஸ். நித்யா மேனனுக்கும் அவரது பஞ்சாபி தாய்க்கும் ஒரு விஷயத்தில் பந்தயம் வேறு. அது என்னவென்று தியேட்டரில் பார்த்து ரசியுங்கள். முதல் குழந்தை பிறந்ததும் இவர்கள் மதுரைக்குப் புறப்படுகிறார்கள்.

மதுரைக்கு வரும் விஜய், தனது சொந்த கிராமத்தில் கோவில் கட்ட முடிவெடுக்க, அந்த நேரத்தில் ஒரு தீ விபத்தில் சிக்கி இரு குழந்தைகள் உயிரிழக்கிறார்கள். 23 கிலோ மீட்டர் கடந்து நகரத்திற்குச் சென்றால்தான் மருத்துவமனை என்கிற அவலத்தால் இருவர் இறந்து போனது உறுத்த ‘இங்கே கட்டவேண்டியது கோவில் இல்லடா… ஹாஸ்பிட்டல்‘ என விஜய்க்கு உரைக்கிறது. கோவிலுக்குப் பதிலாக மக்கள் நல மருத்துவமனை கட்ட முடிவெடுக்கிறார் விஜய். அவரது திட்டத்திற்கு காலங்காலமான தமிழ் சினிமா சென்டிமென்ட் போலவே தாய்க்குலங்கள் தங்கத்தைக் கழற்றிக் கொடுக்க, ஒவ்வொருவராக ஆதரவு தருகிறார்கள். ஒருவழியாக மருத்துவமனையும் கட்டப்படுகிறது. ‘காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கூட்டிட்டுப் போன’ கதையாக அப்பாவி விஜய்யை ஏமாற்றி மருத்துவமனையை தன் பெயருக்கு எழுதி வாங்கிக் கொள்கிறார் டாக்டர் எஸ்.ஜே.சூர்யா. மருத்துவத்தை பணம் கொழிக்கும் வியாபாரம் ஆக்கும் திட்டத்தை நித்யாமேனனின் இரண்டாவது பிரசவத்தை சிசேரியனாக மாற்றுவதின் மூலம் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த ஆப்பரேஷனில் நித்யாமேனன் இறந்து விட, எஸ்.ஜே.சூர்யாவின் திட்டம் தளபதி விஜய்க்கு தெரிய வருகிறது. பிறகென்ன, தளபதி விஜய்யையும் போட்டுத்தள்ளி விடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. வடிவேலு ஒரு குட்டி விஜய்யைக் காப்பாற்றி வளர்க்க, இறந்து போனதாகக் கருதப்பட்ட இரண்டாவது குழந்தை விஜய்யை மேஜிக் கலைஞர் ஒருவர் எடுத்து வளர்க்கிறார். இவர்கள் வளர்ந்து ஒருவர் டாக்டராகவும், இன்னொருவர் மேஜிக் கலைஞராகவும் உருவாகிறார்கள். அவ்வளவுதான் ஃப்ளாஸ்பேக். இருவரும் சேர்ந்து எஸ்.ஜே.சூர்யாவை முடிப்பதோடு கதையும் அவ்வளவுதான்.

அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் எளிதில் யூகித்துவிடக்கூடிய காட்சிகள்தான் படம் முழுவதுமே. ஆனாலும், மொத்தமாக கமர்ஷியல் பேக்கேஜ் மூலம் கவர்ந்திருக்கிறார் அட்லீ. சமந்தா விஜய்யை, “தம்பி, ரோஸ் மில்க் வாங்கித் தர்றேன், வாரியா” என்று கொஞ்சலுடன் கேட்டு சில காட்சிகளில் மட்டும் வசீகரிக்கிறார். காஜல் அகர்வால் இரண்டு காட்சிகளிலும் ஒரு பாடலிலும் வந்துவிட்டுப் போகிறார் படத்திலும் பெரிதாக ஸ்கோப் இல்லை.

மேலும் அபூர்வ சகோதரர்கள், ரமணா படங்களை இணைத்து ஷங்கர் பாணியில் உருவாக்கப்பட்ட படம். விஜய் ரசிகர்கள் கொண்டாடக்கூடும். மற்ற திரை ரசிகர்களுக்கு மேலும் ஒரு சராசரியான திரைப்படம்.

Comments

இசைக் கலைஞராக அறிமுகமாகும் விஜய்சேதுபதி

 அறிமுக இயக்குநர் ரோகநாத் வெங்கட்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon